ஆந்திராவில் பரபரப்படைந்து வரும் அரசியல் களம்

3 mins read
fb7ba178-4d02-4ed7-8ce7-91edd4888296
ஆந்திராவில் தெலுங்கு தேசம் வேட்பாளரும், மருத்துவருமான கோட்டிபதி லட்சுமி, பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு கர்ப்பிணிக்கு சரியான நேரத்தில் அறுவை சிகிச்சை செய்ததால் தாயும், சேயும் காப்பாற்றப்பட்டுள்ளனர். - படம்: இந்திய ஊடகம்

திருமலை: ஆந்திர மாநிலத்தில் வருகிற மே 13-ம் தேதி 175 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், 25 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளதால், அங்கு தேர்தல் களம் பரபரப்பாகி உள்ளது.

இத்தேர்தலில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் ஓர் அணியாகவும், பாஜக, முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி ஆகியவை ஓர் அணியாகவும், தற்போதைய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தனித்தும் போட்டியிடுகின்றன.

வியாழக்கிழமை முதல் வேட்புமனு தாக்கல் துவங்கியது.

சட்டமன்றத்துக்கு முதல் நாளில் 236 வேட்புமனுக்களும் மக்களவைக்கு 46 வேட்பு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தலைமை தேர்தல் அதிகாரி முகேஷ் குமார் மீனா தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை பல கட்சிகளும் சுயேட்சை வேட்பாளர்களும் வேட்புமனுக்களை சமர்ப்பித்துள்ளனர். 25ஆம் தேதி வரை வேட்புமனுத்தாக்கல் செய்ய அவகாசம் உள்ளதால், வேட்புமனுத் தாக்கலில் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் முனைப்பாக செயல்படுகின்றனர். திங்கட்கிழமை முதல் வேட்புமனுத் தாக்கல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் 25ஆம் தேதி புலிவெந்துலாவில் வேட்புமனு தாக்கல் செய்கிறார். ஜனசேனா கட்சித் தலைவர் நடிகர் பவன் கல்யாண் 23ஆம் தேதி பிதாபுரத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக அக்கட்சியின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

முருகனை வணங்கி வேட்புமனு தாக்கல் செய்த ரோஜா

திருத்தணியில் மகனுடன் வழிபாடு செய்த ரோஜா.
திருத்தணியில் மகனுடன் வழிபாடு செய்த ரோஜா. - படம்: இந்திய ஊடகம்

ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சராக பதவி வகித்து வரும் பிரபல திரைப்பட நடிகை ரோஜா, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் நகரி தொகுதியில் சட்டமன்றத் தொகுதி வேட்பாளாராக 4வது முறையாக போட்டியிடுகிறார்.

சனிக்கிழமை அந்த தொகுதியில் அவர் வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்கு முன்னதாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி முருகன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்தார்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் மாவட்டம் தெக்கலி தொகுதியில் போட்டியிட, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஜில்லா பரிஷத் உறுப்பினரான வாணிக்கு இந்த தடவை வாய்ப்பு வழங்கப்படும் என கூறப்பட்டு வந்தது.

கணவருக்கு எதிராக மனைவி போட்டி

ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஜில்லா தொகுதியில் எதிரெதிர் அணிகளாக நிற்கும் தம்பதியர்.
ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஜில்லா தொகுதியில் எதிரெதிர் அணிகளாக நிற்கும் தம்பதியர். - படம்: இந்திய ஊடகம்

ஆனால், கடந்த மாதம் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியலில் வாணியின் பெயருக்கு பதிலாக அவரது கணவர் ஸ்ரீநிவாஸ் பெயர் வெளியிடப்பட்டது.

அப்போது கட்சி தலைமை மறுபரிசீலனை செய்து தனக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் இல்லை என்றால் ஏப்ரல் 22ஆம் தேதி கணவருக்கு எதிராக சுயேட்சையாக மனு தாக்கல் செய்யப்படும் என அறிவித்தார்.

இதனால் கணவன் மனைவி இடையே அரசியல் போர் ஏற்பட்டது. கணவன் மனைவி இருவரும் தற்போது தனியாக பிரிந்து வாழ்கின்றனர்.

பிரசாரத்துக்கிடையே பிரசவம்

பிரசாரத்தை நிறுத்திவிட்டு பிரசவம் பார்த்த மருத்துவ வேட்பாளர் கோட்டிபதி லட்சுமி.
பிரசாரத்தை நிறுத்திவிட்டு பிரசவம் பார்த்த மருத்துவ வேட்பாளர் கோட்டிபதி லட்சுமி. - படம்: இந்திய ஊடகம்

தர்ஷி சட்டப் பேரவைத் தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) சார்பில் வேட்பாளராக போட்டியிடும் கோட்டிபதி லட்சுமி பிரசாரத்தைப் பாதியில் நிறுத்திவிட்டு, பிரவசம் பார்த்த சம்பவம் சமூக ஊடகங்களில் பரவலாகி வருகிறது.

தர்ஷி மண்டலம் அப்பாயி பாலேம் பகுதியில், தனியார் மருத்துவமனை ஒன்றில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணியின் நிலை கவலைக்கிடமாக இருந்துள்ளது. அங்கு மகளிர் மருத்துவ நிபுணர் இல்லாத நிலையில் அவரை ஒங்கோல் அல்லது குண்டூருக்கு அழைத்துச் செல்ல மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.

இந்நிலையில் கர்ப்பிணி பெண்ணின் குடும்பத்தினர், இந்த விஷயத்தை தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளரும், புகழ்பெற்ற மகளிர் மருத்துவ நிபுணருமான டாக்டர் கோட்டிபதி லட்சுமியின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். அவர் பிரசாரத்தை உடனடியாக ரத்து செய்துவிட்டு, சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு விரைந்து சென்று அவசர அறுவை சிகிச்சை செய்தார். இதில் அந்தப் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது தாயும், சேயும் நலமாக உள்ளனர்.

மருத்துவர் கோட்டிபதி லட்சுமி சரியான நேரத்துக்கு வந்து மருத்துவம் பார்த்ததால் இரு உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்