டெல்லியில் அதிபர் ஆட்சியை அமல்படுத்த பாஜக சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

டெல்லியில் அதிபர் ஆட்சியை அமல்படுத்த பாஜக சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

1 mins read
cc7e7feb-e822-410c-9342-268723f160e9
டெல்லி நிதியமைச்சர் அதிஷி. - படம்: இந்திய ஊடகம்
Google News Preferred Icon

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் அதிபர் ஆட்சியை அமல்படுத்துவதற்கு மத்திய பாஜக அரசு சதித் திட்டம் தீட்டி வருவதாக ஆம் ஆத்மி மூத்த தலைவரும் டெல்லி நிதியமைச்சருமான அதிஷி குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்குத் தொடர்பாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அமலாக்கத் துறை இந்த வழக்குத் தொடர்பில் மேலும் பலரை கைது செய்ய வலை விரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சூழலில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கை “டெல்லி முதல்வர் என்பதற்காக சலுகை காட்ட முடியாது,” எனக் கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது டெல்லி உயர் நீதிமன்றம்.

இதையடுத்து அதே கோரிக்கையோடு உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளனர் கெஜ்ரிவால் தரப்பினர். விரைவில் இவ்வழக்கு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே டெல்லியில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய நிதியமைச்சர் அதிஷி, “டெல்லியில் தேர்தலுக்கு முன்பாகவே அதிபர் ஆட்சியை மத்திய அரசு அமல்படுத்த சதித் திட்டம் தீட்டி வருகிறது. பொய்யான வழக்கில் எந்த ஆதாரமும் இல்லாமல் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

“டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்க திட்டமிட்டு சதி நடக்கிறது. டெல்லியில் எந்த அதிகாரிகளும் நியமிக்கப்படவில்லை. இடமாற்றம் செய்யப்படுவதும் இல்லை. தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து அதிகாரிகளை கூட்டங்களில் கலந்துகொள்ளவிடாமல் தடுக்கின்றனர்,” என்று கூறினார்.

குறிப்புச் சொற்கள்