ஜார்க்கண்ட்: புதிய முதல்வராக பதவியேற்கிறார் சம்பாய் சோரன்

ஜார்க்கண்ட்: புதிய முதல்வராக பதவியேற்கிறார் சம்பாய் சோரன்

2 mins read
9eee4866-a3ff-497b-a7f9-8780ff17334c
ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் (இடது) அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், புதிய முதலமைச்சராக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். - கோப்புப்படம்: ஊடகம்
Google News Preferred Icon

ஜார்க்கண்ட்: நில மோசடி புகாரில் ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், புதிய முதலமைச்சராக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து ஆட்சியமைக்க சம்பாய் சோரன் உரிமை கோரினார். சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுக் கடிதத்தை ஆளுநரை சந்தித்து சம்பாய் சோரன் வழங்கினார். 47 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தமக்கு உள்ளதாக புதன்கிழமை (31.1.24) சம்பாய் சோரன் கூறியிருந்தார்.

ஹேமந்த் சோரன் அமைச்சரவையில் பட்டியலினத்தோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த சம்பாய் சோரன், புதிய முதலமைச்சராக விரைவில் பதவியேற்க உள்ளார்.

முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் பொய்யாகப் பத்திரப் பதிவு செய்து பல கோடி ரூபாய் நில மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த அமலாக்கத்துறை, தொழிலதிபர்கள் பலரை கைது செய்தது.

மேலும், விசாரணைக்கு முன்னிலையாகுமாறு ஜார்க்ண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கும் அழைப்பாணை அனுப்பியது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்ற சோரன் திடீரென காணாமல் போனார். இரு நாட்களுக்குப் பிறகு ராஞ்சியில் தனது வீட்டில் அமைச்சர்கள், ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அதைத்தொடர்ந்து புதன்கிழமை ராஞ்சியில் உள்ள ஹேமந்த் சோரன் இல்லத்தில் வைத்து அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, அவரை கைது செய்வதற்கான ஆணையை அளித்ததாகத் தெரிகிறது. அதை ஏற்க மறுத்த அவர், முதலமைச்சர் பதவியில் இருந்து விலகியபின் அதில் கையெழுத்திடுவதாக கூறியுள்ளார்.

இதையடுத்து அமலாக்கத்துறையுடன் ஆளுநர் மாளிகைக்குச் சென்ற ஹேமந்த் சோரன், தனது பதவி விலகல் கடிததத்தை ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனிடம் வழங்கினார். இதையடுத்து வீடு திரும்பிய ஹேமந்த் சோரனை, அமலாக்கத்துறை ராஞ்சியில் உள்ள தங்களது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று கைது செய்தது.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் சட்டமன்றக் கூட்டத்தில் புதிய முதலமைச்சராக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டார். ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரனை முதலமைச்சராக்க ஹேமந்த் சோரனின் அண்ணி கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இதையடுத்து, மனைவியை முதலமைச்சராக்காமல், தனது நெருங்கிய நண்பர் சம்பாய் சோரனை முதலமைச்சராக ஹேமந்த் சோரன் தேர்வு செய்தததாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, ஹேமந்த் சோரன் கைதுக்கு காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ராகுல் காந்தி தனது எக்ஸ் பதிவில், எதிர்கட்சிகளை ஒழிக்கும் பணியை அமலாக்கத்துறை சிபிஐ உள்ளிட்ட மத்திய அமைப்புகள் செய்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்