வாரணாசியில் 15 மொழிகளில் திருக்குறளை வெளியிட்டார் பிரதமர் மோடி

வாரணாசியில் 15 மொழிகளில் திருக்குறளை வெளியிட்டார் பிரதமர் மோடி

2 mins read
91fc3daa-7582-4edc-b227-5b9e5d06c86a
வாரணாசியில் 2வது ஆண்டாக காசி தமிழ் சங்கமம் விழாவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். தமிழகத்தில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள், அதிகாரிகள், ஊழியர்கள், எழுத்தாளர்கள், வணிகர்கள், தொழிலதிபர்கள் என ஏராளமானோர் விழாவில் கலந்துகொள்கின்றனர். - படம்: இந்திய ஊடகம்
Google News Preferred Icon

வாரணாசி: உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள நமோ படித்துறையில் காசி தமிழ் சங்கமம் விழாவைப் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சி வரும் 30ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

விழாவில், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில் 10 இந்திய மொழிகள், 5 வெளிநாட்டு மொழிகள் என 15 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளைப் பிரதமர் மோடி வெளியிட்டார்.

அத்துடன், பிரெய்லி முறையிலான திருக்குறள், சங்க இலக்கியம், இலக்கண நூல்களும் வெளியிடப்பட்டன.

வாரணாசிக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையேயான தொடர்பினைப் புதுப்பிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சியை மத்திய கல்வித்துறை ஏற்று நடத்துகிறது.

இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள், அதிகாரிகள், ஊழியர்கள், ஆன்மிக ஈடுபாடு கொண்டவர்கள், விவசாயிகள், கைவினைக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், வணிகர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட 1,400 பேர் ஏழு ரயில்களில் வந்து அரசு செலவில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியபோது, “காசி-தமிழ்நாடு இடையிலான உறவு உணர்வு பூர்வமானது. தமிழகத்தில் இருந்து காசிக்கு வருவது என்பது சிவபெருமானின் ஒரு வீட்டில் இருந்து மற்றொரு வீட்டுக்கு வருவதாக அர்த்தம். அதனால்தான் தமிழக மக்களுக்கும், காசிக்கும் இடையிலான பிணைப்பு சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற உணர்வை காசி தமிழ் சங்கமம் பலப்படுத்துகிறது.

“பனாரஸ் இந்து பல்கலைக்கழகமும் சென்னை ஐஐடியும் இணைந்து காசி தமிழ் சங்கமத்தை வெற்றி பெறச் செய்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். காசியைச் சேர்ந்த மாணவர்களுக்கு கணிதம், அறிவியல் பாடங்களில் உதவ ‘வித்யா சக்தி’ என்ற திட்டத்தை சென்னை ஐஐடி தொடங்கியுள்ளது,” என்று பிரதமர் மோடி பேசினார்.

விழாவில் உ.பி ஆளுநர் ஆனந்தி பென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், எல்.முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

குறிப்புச் சொற்கள்