காவிரி நதிநீர் பங்கீடு வழக்கை விசாரிக்க புதிய அமர்வு

2 mins read
b27853a1-af27-430a-a421-4f69f12a6b10
தமிழகத்துக்கு தரவேண்டிய காவிரி நீரை உடனடியாக திறந்துவிடக்கோரி தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.  - கோப்புப்படம்: ஊடகம்

புதுடெல்லி: ஆகஸ்ட் மாதத்துக்கான காவிரி நீரை திறந்துவிடுவது தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரிக்க இன்றே ஒரு அமர்வினை அமைப்பதாக உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திரசூட் உறுதி அளித்துள்ளார்.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்துக்கான ஆகஸ்ட் மாத காவிரி நீர் பங்கீடு தொடர்பான மனு மிகவும் அவசரமாக விசாரிக்கப்படவேண்டியது. நீதிபதிகள் அதற்காக ஒரு அமர்வை அமைக்க வேண்டும் என்று தமிழ் நாடு சார்பில் முன்னிலையான ரோக்தகி தெரிவித்தார்.

ஆகஸ்ட் மாதத்தில் கர்நாடக மாநிலம் வெளிகொண்டலு நீர்த் தேக்கத்தில் இருந்து தமிழகத்துக்கு 24 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்துவிட உத்தரவிட வேண்டும் என்றும், செப்டம்பர் மாதத்தில் திறந்துவிட வேண்டிய 36.76 டிஎம்சி தண்ணீரை திறந்துவிடுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரியிருந்தது.

மேலும், தமிழகத்துக்கு கர்நாடகம் நடப்பாண்டில் கடந்த ஜூன் 1 முதல் இம்மாதம் ஆக.11 வரை 53.27 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட்டு இருக்க வேண்டும். ஆனால் வெறும் 15.79 டிஎம்சி தண்ணீர் மட்டும் தான் இதுவரை கிடைத்துள்ளது. பற்றாக்குறையான 37.48 டிஎம்சி தண்ணீரை உடனடியாகத் திறந்துவிட உத்தரவிட வேண்டும் என்று தன் மனுவில் கோரியிருந்தார்.

இதற்குப் பதில் அளித்த தலைமை நீதிபதி, “இது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது. கர்நாடக அரசு உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி குறைந்த அளவில் தண்ணீர் திறந்து விட்டிருப்பது அப்பட்டமான விதிமீறல். இன்றே நான் ஒரு அமர்வினை அமைக்கிறேன்,” என்று தெரிவித்தார்.

முன்னதாக, தமிழகத்துக்கு தரவேண்டிய காவிரி நீரை உடனடியாக திறந்துவிடக்கோரி தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த மனுவில், கடந்த ஆக.11 அன்று காவிரி மேலாண்மை கூட்டத்தில் தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் ஆணையம் தன்னிச்சையாக அடுத்த 15 நாட்களுக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்தால்போதும் என உத்தரவிட்டிருப்பது சட்டவிரோதமானது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்