இடாநகர்: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இரண்டு பேரை அருணாச்சலப் பிரதேச காவல்துறை கைது செய்துள்ளது.
ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த பிலால் அகமது (26 வயது), கடந்த நவம்பர் 25ஆம் தேதி அருணாச்சலப் பிரதேசம் வந்திருந்தார்.
பின்னர் அங்குள்ள பாப்பும்பாரே மாவட்டத்தில் உள்ள பழைய சந்தையில் போர்வைகளை விற்கத் தொடங்கினார். இவர் பாகிஸ்தானுக்கு ரகசியமாக உளவு பார்த்து வந்ததுடன் பல்வேறு முக்கியத் தகவல்களையும் பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில், இடாநகர் காவல்துறையிடம் இருந்து கிடைத்த தகவலையடுத்து, பாப்பும்பாரே மாவட்ட காவல்துறையினர் பிலால் அகமதுவைக் கைது செய்தனர்.
இதேபோல் சாங்குலாங்கு மாவட்டத்திலும் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் நசீர்மாலிக், சபீர் அகமது மீர் ஆகிய இருவரும் இடாநகர் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.
இருவரும் டெலிகிராம் செயலி மூலம் இந்திய ராணுவம், ராணுவ முகாம்கள் குறித்த தகவல்களைப் பாகிஸ்தானைச் சேர்ந்த சிலருடன் பகிர்ந்து வந்தது விசாரணையில் உறுதியானது. மேலும், பாகிஸ்தானைச் சேர்ந்த சிலர் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவ, ஆயுதங்களைக் கடத்திவர சபீர் உதவியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான பணப் பரிமாற்றம்: பெண் கைது
இதனிடையே, அசாம் மாநிலம் கவுகாத்தியைச் சேர்ந்த ஜோதிகா கலிதா என்பவரை சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் தொடர்பாகக் காவல்துறை கைது செய்துள்ளது.
இவர், தன் சகோதரர் உள்பட நான்கு பேருடன் சட்டவிரோதப் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டிருந்தார். பல வங்கிக் கணக்குகள் மூலம் இவர் பெரும் தொகைகளை கைமாற்றி வந்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
குறிப்பாக மொரீஷியஸ், நேப்பாளம், பங்ளாதேஷ் ஆகிய நாடுகளுக்கு இணையவழி சட்டவிரோதப் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிரிட்டன், பாகிஸ்தான், மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த செயல்பாட்டாளர்களுடன் ஜோதிகா கலிதா நேரடி தொடர்பில் இருந்துள்ளார்.
இதையடுத்து, அவருடன் தொடர்புடைய பல்வேறு வங்கிக் கணக்குகளை காவல்துறை முடக்கியது. ஜோதிகாவின் கணவர் மும்பையில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவருக்கும் வலைவீசப்பட்டுள்ளது.

