இந்தியாவில் வீடுகள் விற்பனை சரிவு

இந்தியாவில் வீடுகள் விற்பனை சரிவு

2 mins read
c20c1306-e3a2-4693-a977-15ee181b3f4a
இந்தியாவின் வர்த்தகத் தலைநகரமாகக் கருதப்படும் மும்பையில் நடப்பாண்டு ஜூன் மாதத்தில் மட்டும் 11,521 சொத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. - கோப்புப்படம்: ஊடகம்
Google News Preferred Icon

புதுடெல்லி: இந்தியாவின் ஆறு முக்கியமான நகரங்களில் வீடு விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது. எனினும் சென்னையில் மட்டும் விற்பனை அளவு 11% அதிகரித்துள்ளது.

டெல்லி, மும்பை, பெங்களூரு, புனே, கோல்கத்தா, ஹைதராபாத் உள்ளிட்ட ஆறு முக்கியமான நகரங்களில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் வீடு விற்பனை 20% குறைந்துள்ள தகவலை சொத்துச் சந்தை ஆலோசனை நிறுவனமான அனராக் தெரிவித்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான இரண்டாம் காலாண்டில் வீடுகளின் விலை 11% அதிகரித்துள்ளது.

அதேசமயம், முந்திய காலாண்டுடன் ஒப்பிடும்போது நடப்பு ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான இரண்டாம் காலாண்டில், ஏழு நகரங்களில் வீடுகள் விற்பனை 3% அதிகரித்திருக்கிறது.

அனைத்துலக அளவில் சில நாடுகளுக்கு இடையே நிலவும் போர் சூழல் பல்வேறு துறைகளில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என்றும் வீடு விற்பனை குறைந்ததற்கும் இது முக்கிய காரணியாக உள்ளது என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

எனவே, வீடு வாங்கும் எண்ணத்துடன் இருக்கும் பலர், அதை சில காலத்துக்கு ஒத்திவைத்துள்ளதாகத் தெரிகிறது.

புதிய வீடுகளின் விநியோகத்தைப் பொறுத்தவரை, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, 16 விழுக்காடு குறைந்துள்ளதாகச் சொல்கிறது அனராக் அறிக்கை.

சில பின்னடைவுகள் இருந்தாலும், வீடுகளின் விலை மட்டும் குறையவில்லை. போர்ப் பதற்றம் விற்பனையை மேலும் பாதித்துள்ளது.

இந்நிலையில், ரிசர்வ் வங்கி மேற்கொண்டுள்ள வட்டிக் குறைப்பு நடவடிக்கை வாடிக்கையாளர்கள் மத்தியில் புதிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது.

எனவே, வரும் மாதங்களில் வீடுகளின் விலை உயர்ந்தாலும், அவற்றின் விற்பனையும் ஒருசேர அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம் என்கிறார் அனராக் நிறுவனத்தின் தலைவர் அனுஜ் பூரி.

இதனிடையே, இந்தியாவின் வர்த்தகத் தலைநகரமாகக் கருதப்படும் மும்பையில் நடப்பாண்டு ஜூன் மாதத்தில் மட்டும் 11,521 சொத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டைவிட, சொத்துப் பதிவு 1% குறைந்துவிட்டது என்றாலும், பதிவுக் கட்டணத்தின் மூலம் கிடைத்த வருவாய் 2%ஆக அதிகரித்துள்ளது.

ஜூன் மாதம் மட்டும் மகாராஷ்டிர அரசின் பதிவு மற்றும் முத்திரைத்தாள் பிரிவின் மூலம் ரூ.1,031 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்
சொத்துவீடுவிற்பனை