விமானிகளுக்கான பணி நேர ஓய்வுக் கொள்கையை திரும்பப் பெற்றது இந்திய அரசு

3 mins read
eb0d2b70-1c56-4e55-91ce-5ff4ccf6f78c
இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகராஜ் அனைத்துலக விமான நிலையத்தில் பயணிகள் தவிப்புக்கு ஆளாகினர். குழந்தைகள், மூத்தவர்கள் என குடும்பத்துடன் வந்த பலரும் செய்வதறியாது குழம்பி நின்றனர். - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: விமானிகளுக்கான பணி நேர ஓய்வுக் கொள்கையை திரும்பப் பெறுவதாக இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சு வெள்ளிக்கிழமை (டிசம்பர் 5) அறிவித்தது.

முன்னதாக இப்புதிய கொள்கையால் இண்டிகோ விமான நிறுவனம் பல்வேறு குழப்பங்களையும் சிக்கல்களையும் எதிர்கொண்டது. ஒரே நாளில் அந்நிறுவனத்தி்ன் 300க்கும் மேற்பட்ட விமான சேவைகளை ரத்து செய்யும் அளவுக்கு நிலைமை மோசமானதையடுத்து, புதிய கொள்கையை திரும்பப்பெற்றுள்ளது விமானப்போக்குவரத்து அமைச்சு டிசம்பர் 5ஆம் தேதி மாலை அறிவித்தது. பயணிகளுக்கு ஏற்பட்ட பெரும் சிரமம் துயரத்திற்காக மன்னிப்பு கோரியது இண்டிகோ நிறுவனம்.

முன்னதாக விமானிகளுக்கு வாராந்திர ஓய்வு அளிப்பது தொடர்பாக புதிய கொள்கை ஒன்று அறிமுகமானது. இதனால் பயணிகளின் பணி நேரத்தை முன்கூட்டியே திட்டமிட்டிருந்த விமானப் புறப்பாடுகளில் குழப்பமும் தாமதமும் ஏற்பட்டன. இதனால் இந்தியாவில் உள்நாட்டு விமானச் சந்தையில் 60% அளவு ஆதிக்கம் செலுத்தி வந்த இண்டிகோ நிறுவனம் ஒரே மாதத்தில் 1,200க்கும் மேற்பட்ட விமானச் சேவைகளை ரத்து செய்யய வேண்டியதாயிற்று.

நாட்டின் பல்வேறு விமானங்களில் குழப்பம் தலைதூக்கின. பயணிகள் பலமணி நேரம் காத்திருந்தனர். வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் செய்வதறியாது கையைப் பிசைந்தனர்.

பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்த விமானிகளுக்கு அதிக ஓய்வு நேரத்தை வழங்கும் நோக்கில் புதிய விதிகள் நவம்பரில் அமலுக்கு வந்தன.

இந்நிலையில், இந்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு வெள்ளிக்கிழமை முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட கொள்கைகளை தனது அமைச்சு நிறுத்தி வைப்பதாக அவர் தெரிவித்தார். விமானப் பாதுகாப்பில் சமரசம் செய்யாமல், பயணிகள், குறிப்பாக மூத்த குடிமக்கள், மாணவர்கள், நோயாளிகள் மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்காக சரியான நேரத்தில் விமானப் பயணத்தை நம்பியிருக்கும் பலரது நலன் கருதி மட்டுமே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக என்று ஓர் அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து விமான அட்டவணைகள் நாளைக்குள் சீராகி இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று தமது அமைச்சு எதிர்பார்ப்பதாக திரு. நாயுடு கூறினார்.

டிசம்பர் 5ஆம் தேதிவரை பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்ட விமானப் பயணிகள் தங்கள் கோபத்தை இணையயம் வழி தெரியப்படுத்தினர்.

இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதர் திரு. சைமன் வோங், ‘இண்டிகோ’வால் சிக்கித் தவிக்கும் பல்லாயிரக்கணக்கான பயணிகளுடன் நானும் இணைந்துள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.

“அவரது #ஷாதி (திருமணம்) நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக் காத்திருக்கும் எனது இளம் ஊழியர்களிடம் மனமார்ந்த மன்னிப்பைக் கேட்டுக்கொள்கிறேன்,” என்று தூதரகத்தின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் இடம்பெற்ற பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

டெல்லி விமான நிலையத்தில் பயணி ஒருவர், கடந்த 12 மணி நேரமாக விமான நிறுவனத்திடமிருந்து எந்தத் தகவலும் வரவில்லை என்று என்டிடிவி ஊடகத்திடம் தெரிவித்தார்.

இதற்கிடையே இந்திய நாடாளுமன்ற எதிர்்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அரசாங்கத்தைக் கடுமையாகச் சாடினார்.

“இந்தப் படுதோல்விக்கு அரசாங்கத்தின் செயல்பாடுதான் காரணம் என்று அவர் தமது எக்ஸ் பதிவில் கூறியுள்ளார்.

முன்னதாக எதிர்வரும் டிசம்பர் 8ஆம் தேதி முதல் இண்டிகோ நிறுவனம் தனது சேவையில் ஈடுபடுத்தும் விமானங்களின் எண்ணிக்கையை குறைக்க திட்டமிட்டிருந்தது.

விமானிகளுக்கான பணி நேரம் தொடர்பான புதிய விதிமுறைகளால் விமானிகள் பற்றாக்குறை ஏற்பட்டதையடுத்து, அந்நிறுவனம் இத்தகைய முடிவை எடுத்திருப்பதாகக் கூறப்பட்டது.

இதனிடையே, இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாலும் தாமதமானதாலும் முன்னெப்போதும் இல்லாத சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால், விழிப்புடன் இருக்குமாறு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் கட்டுப்பாட்டு அறைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

குறிப்புச் சொற்கள்