ரூ.2,500 கோடி ‘மியாவ் மியாவ்’ போதைப்பொருள் பிடிபட்டது!

ரூ.2,500 கோடி ‘மியாவ் மியாவ்’ போதைப்பொருள் பிடிபட்டது!

1 mins read
fc45e55e-3ae4-428a-8dc5-aef12211611b
புனே மற்றும் டெல்லியில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனைகளின்போது பிடிபட்ட போதைப்பொருள்கள். - படம்: இந்திய ஊடகம்
Google News Preferred Icon

புதுடெல்லி: இந்தியாவின் புதுடெல்லி, புனே நகரங்களில் கடந்த இரு நாள்களாக நடந்த அதிரடிச் சோதனைகளில் 1,100 கிலோ ‘மெபெட்ரோன்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

அதன் மதிப்பு ரூ.2,500 கோடி இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட அந்த போதைப்பொருள் ‘மியாவ்’ மியாவ்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

புனே நகரிலுள்ள ஓர் உப்புக் கிடங்கில் சோதனையிட்டபோது போதைப்பொருள் கடத்தல் பேர்வழிகள் மூவர் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து 700 கிலோ ‘மெபெட்ரோன்’ கைப்பற்றப்பட்டது.

அவர்களிடம் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, டெல்லியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 400 கிலோ போதைப்பொருள் சிக்கியது.

இதனிடையே, புனே நகரில் இன்னோர் இடத்திலும் அதிக அளவில் ‘மெபெட்ரோன்’ பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

புனே நகரில் இதற்குமுன் இவ்வளவு அதிக அளவில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதில்லை. அத்துடன், இந்திய அளவிலும் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல் முயற்சி முறியடிப்புகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

கைதானவர்களுக்கும் போதைப்பொருள் கடத்தல் மன்னனான லலித் பட்டேலுக்கும் இடையே தொடர்பிருக்கலாம் எனக் காவல்துறை சந்தேகிக்கிறது. இச்சம்பவத்தில் லலித் பட்டேல் எந்த அளவிற்குத் தொடர்புகொண்டுள்ளான் என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் டெல்லி காவல்துறையும் ஐவரைக் கைதுசெய்துள்ளது.

டெல்லி, புனே காவல்துறையினர் இணைந்து மேற்கொண்டுவரும் இந்த அதிரடிச் சோதனை தொடர்கிறது. கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்களின் இறுதி மதிப்பு 3,000 கோடி ரூபாயைத் தாண்டும் எனச் சொல்லப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
போதைப்பொருள்கடத்தல்டெல்லிபுனேஇந்தியா