டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள், விஜய் சந்திப்பு திடீர் ரத்து

டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள், விஜய் சந்திப்பு திடீர் ரத்து

2 mins read
478ace59-8b1e-4bb7-80c0-4f3e554e6a25
டெல்லியில் முதல்வர் விஜய்யை வரவேற்று காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி வீட்டுக்கு அருகே பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. - படம்: தினமணி

சென்னை: தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னர், முதன்முறையாக டெல்லி சென்ற விஜய், அங்கு காங்கிரஸ் கட்சித் தலைவர்களுடனான சந்திப்பை ரத்து செய்துவிட்டு சென்னை திரும்பினார்.

வியாழக்கிழமை (மே 28) இந்திய அதிபர் திரௌபதி முர்முவை அவர் சந்திப்பதாக இருந்தது. அந்தச் சந்திப்பும் ரத்து என தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, புதன்கிழமை பிரதமர் மோடியைச் சந்தித்த முதல்வர் விஜய், அவரிடம் நான்கு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.

பின்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவர் சந்திப்பதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அது ரத்தானதாகத் தெரிவிக்கப்பட்டது.

எனினும், முன்பே திட்டமிட்டபடி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்தார் விஜய். அப்போது கோவை, மதுரை, ஓசூர் மெட்ரோ திட்டங்களுக்கு நிதியளிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

தமிழகத்​தின் வளர்ச்​சிக்குத் தேவை​யான துறை​முகங்​கள், நெடுஞ்​சாலைகள், ரயில்வே திட்​டங்​கள், தொழில் வழித்​தடங்​கள் ஆகிய​வற்​றுக்கு முன்​னுரிமை அளித்து நிதி ஒதுக்​கீடு செய்ய வேண்​டுமென முதல்​வர் விஜய் வலி​யுறுத்​தி​யதாகத் தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில்​ கூறப்​பட்​டுள்​ளது.

இதனிடையே, வியாழக்கிழமை காலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, கம்யூனிஸ்ட் தலைவர்களை திரு விஜய் சந்திப்பார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவரது வருகையை உறுதி செய்வதுபோல் சோனியா காந்தியின் இல்லம் அமைந்துள்ள ஜன்பத் சாலையிலும் அதன் சுற்றுப்பகுதியிலும் ராகுல், விஜய் இணைந்து நிற்கும் படங்களுடன் கூடிய பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.

எனினும், கடைசி நேரத்தில் விஜய்யின் வருகை ரத்து செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அதற்கான காரணம் தெரியவில்லை.

எதிர்வரும் ஜூன் 11ஆம் தேதி நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க மீண்டும் டெல்லி வரும்போது காங்கிரஸ் தலைவர்களை அவர் சந்திப்பார் என்றும் அக்கட்சி எம்பி கிறிஸ்டோபர் திலக் கூறினார்.

டெல்லி செல்லும் தமிழக முதல்வர்கள், பிரதமர், அதிபர், மத்திய அமைச்சர்களைச் சந்தித்த பின்னர், அதுகுறித்து செய்தியாளர்களிடம் விவரிப்பது வழக்கம்.

ஆனால், முதல்வர் விஜய் செய்தியாளர்களைச் சந்திக்காமலேயே சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றார்.

குறிப்புச் சொற்கள்