கும்பமேளா கூட்டத்தைப் பயன்படுத்தி அயோத்தி ராமர் கோவிலில் பெருந்திருட்டு

கும்பமேளா கூட்டத்தைப் பயன்படுத்தி அயோத்தி ராமர் கோவிலில் பெருந்திருட்டு

2 mins read
ad9ed55a-ad76-4cf9-89b8-03ca2a2f8a84
2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற கும்பமேளாவின் போதுதான் அயோத்தி ராமர் கோவிலிலிருந்து மிக அதிக அளவில் பணம் திருடப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. - படம்: என்டிடிவி
Google News Preferred Icon

அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் உண்டியல் காணிக்கைத் திருட்டு வழக்கில், 2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற கும்பமேளாவின்போதுதான் மிக அதிக அளவில் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக அயோத்தி காவல்துறையின் சிறப்புப் புலனாய்வுக் குழு நடத்திய விசாரணையில் அதிர்ச்சித் தகவல் வெளி வந்துள்ளது.

கும்பமேளா காலத்தில் கோவிலில் குவிந்த கோடிக்கணக்கான காணிக்கை மற்றும் நன்கொடைகளைப் பயன்படுத்திக்கொண்டு, எட்டுப் பேர் அடங்கிய கும்பல் ஒன்று சேர்ந்து கொள்ளையடித்துள்ளது.

இவ்வழக்கில் எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டு தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

அவர்களுள் லவ்குஷ் மிஷ்ரா, அனுகல்ப் மிஷ்ரா என்ற மைத்துனர்கள் இருவரே மிக அதிக அளவிலான பணத்தைத் திருடியது அம்பலமாகியுள்ளது.

அந்தத் திருட்டுப் பணத்தைக் கொண்டு அவர்கள் நிலங்களையும் வீடுகளையும் வாங்கியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

அவர்களின் சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகளை விரிவாக ஆய்வுசெய்ய வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையின் உதவியைக் காவல்துறை நாடியுள்ளது.

கோவில் காணிக்கை எண்ணும் பணியை எஸ்பிஐ வங்கி மேற்கொண்டு வரும் நிலையில், 14 பேர் கொண்ட குழுவில் இருந்த சில வங்கி ஊழியர்களுக்கும் அத்திருட்டில் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது.

முன்னாள் அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராயின் ஓட்டுநரான டின்னு யாதவ் என்பவரது வீட்டிலிருந்தும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

காணிக்கை எண்ணும் அறையின் ஒரு சாவி டின்னு யாதவிடமும் மற்றொரு சாவி வங்கி ஊழியர்களிடமும் இருந்துள்ளது.

அவர்கள் அனைவரும் கூட்டு சேர்ந்து பணத்தைக் கையாடல் செய்து பங்கிட்டுக்கொண்டதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

கைதான அவினாஷ் சுக்லா என்பவரின் சகோதரருக்குச் சொந்தமான யோகா மையத்தில் நடத்தப்பட்ட சோதனையில், பெட்டிகளுக்குள்ளும் போர்வைகளுக்கு நடுவிலும் மறைத்து வைக்கப்பட்டிருந்த லட்சக்கணக்கான ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவினாஷ் சுக்லா கொடுத்த தகவலின் பேரில், முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்படுவதற்கு முன்பே ரூ.89 லட்சம் மீட்கப்பட்டுள்ளது.

குற்றவாளிகளின் வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கில் பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளதை அடுத்து, விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்