புதுடெல்லி: இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே கடந்த 2025ஆம் ஆண்டு ஜூலை மாதம் கையெழுத்திடப்பட்ட விரிவான பொருளியல் வர்த்தக ஒப்பந்தம் (CETA) மே மாதம் இரண்டாவது வாரத்தில் நடப்புக்கு வர வாய்ப்புள்ளது.
அரசு அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி எகனாமிக்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
“இந்த ஒப்பந்தம் மே மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கிறோம்,” என்று அந்த அதிகாரி கூறினார்.
கடந்த 2025ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தின்கீழ், 99 விழுக்காட்டு இந்திய ஏற்றுமதிப் பொருள்களை பிரிட்டன் சந்தையில் வரி இன்றி விற்பனை செய்ய வகைசெய்யப்பட்டுள்ளது.
அதேபோல், இந்தியாவில் பிரிட்டிஷ் தயாரிப்புகளான கார்கள், விஸ்கி போன்றவற்றுக்கு இறக்குமதி வரி குறைக்கப்படும்.
இந்த ஒப்பந்தம் 2030ஆம் ஆண்டிற்குள் இரு நாடுகளுக்கும் இடையிலான வணிகத்தை 56 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்துவதை இலக்காகக் கொண்டுள்ளது.
இதன் மூலம், பிரிட்டனின் சாக்லெட்டுகள், பிஸ்கெட்டுகள், அழகுசாதனப் பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு பயனீட்டாளர் பொருள்களுக்காக இந்தியா தனது சந்தையைத் திறக்கும்.
அதே வேளையில், இந்தியா தனது ஜவுளி, காலணிகள், ரத்தினங்கள், ஆபரணங்கள், விளையாட்டுப் பொருள்கள் போன்ற பொருள்களை பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்வதற்கான கூடுதல் வாய்ப்புகளைப் பெறும்.
தொடர்புடைய செய்திகள்
பிரிட்டனின் ஸ்காட்ச் விஸ்கி மீதான வரி 150 விழுக்காட்டிலிருந்து உடனடியாக 75 விழுக்காடாகக் குறைக்கப்பட்டு, 2035க்குள் 40 விழுக்காடாகக் குறைக்கப்படும்.
கார்களைப் பொறுத்தவரை, தற்போதுள்ள 110 விழுக்காடு வரையிலான இறக்குமதி வரி, ஐந்து ஆண்டுகளில் படிப்படியாக 10 விழுக்காடாகக் குறைக்கப்படும்.
இந்திய உற்பத்தியாளர்கள் மின்சார வாகனங்களை பிரிட்டனில் விற்பனை செய்ய முன்னுரிமை அளிக்கப்படும்.
மேலும், தற்காலிகப் பணியாளர்கள் இரு நாடுகளிலும் இரட்டைச் சமூக வரிகளைச் செலுத்துவதைத் தவிர்க்கும் இரட்டைப் பங்களிப்பு ஒப்பந்தமும் (Double Contributions Convention, DCC) இணையாகச் செயல்படுத்தப்பட உள்ளது.

