புதிய வரிக் கட்டமைப்பிற்குப் பிறகே இந்தியா-அமெரிக்கா வணிக உடன்பாடு

புதிய வரிக் கட்டமைப்பிற்குப் பிறகே இந்தியா-அமெரிக்கா வணிக உடன்பாடு

2 mins read
4329fb29-7072-42e1-a899-e12f3654aa54
2025 பிப்ரவரி 13ஆம் தேதி வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பை இந்தியப் பிரதமர் மோடி சந்தித்தபோது எடுத்த படம். - கோப்புப்படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

புதுடெல்லி: புதிய வரிவிதிப்புக் கட்டமைப்பு நடைமுறைக்கு வந்த பின்னரே இந்தியா-அமெரிக்கா இடையிலான வணிக உடன்பாடு கையெழுத்தாகும் என்று இந்திய வணிகத்துறைச் செயலாளர் ராஜேஷ் அக்ரவால் திங்கட்கிழமை (மார்ச் 16) தெரிவித்தார்.

அமெரிக்க நீதிமன்றத் தீர்ப்பால் ரத்து செய்யப்பட்ட உலகளாவிய வரி விகிதங்களை வாஷிங்டன் மீண்டும் திருத்தி அறிவித்த பின்னரே அந்த உடன்பாடு இறுதிசெய்யப்படும்.

வணிகத் தரவுகள் குறித்த விளக்கக் கூட்டத்தின்போது திரு அக்ரவால் இதனைத் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நிர்வாகம் விதித்த பதிலுக்கு பதில் வரிகளை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் 2026 பிப்ரவரி மாதம் ரத்து செய்தது.

அதனைத் தொடர்ந்து, அடுத்த சில மணி நேரங்களிலேயே வரி சார்ந்த சில நடவடிக்கைகளை அதிபர் டிரம்ப் முடிவுக்குக் கொண்டுவந்தார்.

அதேவேளையில், அமெரிக்காவிற்குள் நுழையும் பொருள்களுக்கு 10 விழுக்காடு ‘தற்காலிக இறக்குமதி கூடுதல் கட்டணத்தை’ விதிப்பதாக அவர் அறிவித்தார். பின்னர் அவர் அதனை 15 விழுக்காடாக உயர்த்தினார்.

இந்நிலையில், தற்போது இருதரப்பு வணிக உடன்பாடு தொடர்பான விவரங்கள் குறித்து அமெரிக்காவுடன் இந்தியா ஆலோசனை மேற்கொண்டுள்ளதாகத் திரு அக்ரவால் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இந்தியா உள்ளிட்ட 15 முக்கிய நாடுகளின் உற்பத்தி நடைமுறைகள் குறித்து, வணிகச் சட்டம் 1974ன்கீழ் அமெரிக்கா விசாரணையைத் தொடங்கியுள்ளது.

அது நியாயமற்ற வணிக நடைமுறைகளில் ஈடுபடும் நாடுகளுக்கு எதிராகப் புதிய வரிகளை விதிக்க அமெரிக்காவிற்கு அதிகாரம் அளிக்கும்.

இவ்வேளையில், வேறு சில நாடுகள், வட்டாரங்களுடன் ஆறு தடையற்ற வணிக உடன்பாடுகள் குறித்து இந்தியா தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

ஆஸ்திரேலியா, இலங்கை, பெரு, சிலி, யுரேஷியப் பொருளியல் ஒன்றியம், இஸ்ரேல் ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாக ‘ஏஎன்ஐ’ செய்தி தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்
இந்தியாஅமெரிக்காவணிகம்உடன்பாடுவரிஇறக்குமதி