உ.பி.யில் எல்பிஜி டேங்கர் லாரி வெடித்ததில் ஐவர் உயிரிழப்பு, பலர் படுகாயம்

உ.பி.யில் எல்பிஜி டேங்கர் லாரி வெடித்ததில் ஐவர் உயிரிழப்பு, பலர் படுகாயம்

2 mins read
5c1fbef7-3e5e-4f54-9f7f-bfc643b123c7
இரண்டு டேங்கர் லாரிகள் சாலைக் கட்டணச் சாவடியை (டோல் பூத்) நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, அவற்றில் ஒரு லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. - படம்: என்டிடிவி
multi-img1 of 2
Google News Preferred Icon

புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் கௌசாம்பியில் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி ஒன்று சாலைக் கட்டணச் சாவடி (டோல் பூத்) மீது மோதி வெடித்ததில் ஐவர் உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்துள்ளனர்.

ஜூன் 26ஆம் தேதி காலை 6.40 மணியளவில் நடந்த இந்தக் கொடூர விபத்தின் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

வெளிவந்துள்ள 24 விநாடிகள் கொண்ட அந்தக் காணொளியில், இரண்டு டேங்கர் லாரிகள் சாலைக் கட்டணச் சாவடியைை நோக்கிச் செல்கின்றன. அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று, திடீரெனத் தடுப்புச் சுவரில் மோதி அந்த வளாகத்துக்குள் புகுந்தது.

கான்பூரிலிருந்து பிரதாப்கர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த அந்த லாரியிலிருந்த எரிவாயு கசிந்து, சில நொடிகளில் பலத்த சத்தத்துடன் வாகனம் வெடித்துச் சிதறியது.

இந்த விபத்தின்போது ஏற்பட்ட தீப்பிழம்புகளை ஏறக்குறைய இரண்டு கிலோமீட்டர் தொலைவிலும் பார்க்கமுடிந்ததாகக் கூறப்படுகிறது.

விபத்து நடந்த இடத்திலேயே லாரி ஓட்டுநரான தர்மேந்திர துபே (40), சாலைக் கட்டண வசூல் வளாக ஊழியர் அலோக் சிங் ஆகியோர் உடல் கருகி உயிரிழந்தனர்.

படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த பிரயாக்ராஜைச் சேர்ந்த அனில் குமார் ஜூலை 1ஆம் தேதியும் ரேபரேலியைச் சேர்ந்த ஹீராமணி சிங், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த கிருஷ்ண பால் மௌரியா ஆகியோர் அடுத்த நாளும் (ஜூலை 2) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன் மூலம் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

டேங்கர் லாரி வெடித்ததில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தால், சாலைக் கட்டணம் வசூலிக்கும் வளாகத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்த 16 மோட்டார் சைக்கிள்களும் இரு கார்களும் முற்றிலும் எரிந்து சாம்பலாகின.

விபத்து நடந்தவுடன் மாவட்டத்தின் அனைத்துத் தீயணைப்பு வாகனங்களும் காவலர்களும் வரவழைக்கப்பட்டு, தீயைக் கட்டுக்குள் கொண்டு வரும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.

போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக, அந்த வழித்தடத்தில் வந்த பிற வாகனங்கள் கட்டணமின்றி தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டன.

இந்தக் கோர விபத்து குறித்து விசாரணை நடத்த ஒரு தொழில்நுட்பக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
உத்தரப் பிரதேசம்லாரிவிபத்துஉயிரிழப்பு