சொத்துக்குவிப்பு; ஒடிசா அரசுப் பொறியாளரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை

சொத்துக்குவிப்பு; ஒடிசா அரசுப் பொறியாளரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை

2 mins read
0ac66243-f9fb-41de-b11e-a2021f4fafaa
லஞ்சம் வாங்கிச் சொத்து வாங்கிக் குவித்ததாக ஒடிசா மாநில அரசுப் பணியில் இருந்த பொறியாளர் வைகுண்ட நாத் பெஹ்​ராவை லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்து, அவரிடம் இருந்து ஏராளமான பணத்தை மீட்டனர். - படம்: இந்து தமிழ் திசை
Google News Preferred Icon

புவனேஸ்வர்: ஒடிசாவின் கந்​த​மால் மாவட்​டம், பலிகு​டா​வில் ஒருங்​கிணைந்த பழங்​குடி​யினர் மேம்​பாட்டு முகமை​யில் உதவி செயற்​பொறி​யாள​ராக பணி​யாற்றி வருபவர் வைகுண்ட நாத் பெஹ்​ரா.

இவர் ஏராளமான சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளதாக வந்த புகாரையடுத்து மாநில லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் புவனேஸ்​வர், பாலசோர், ஜாஜ்பூர் மற்​றும் பலிகுடாவில் பெஹ்​ரா​வுக்கு தொடர்​புடைய 9 இடங்​களில் நேற்று முன்​தினம் ஒரேநேரத்​தில் சோதனை மேற்கொண்டனர்.

அந்தச் சோதனை​யில் பொறி​யாளர் மற்​றும் அவரது குடும்​பத்​தினர்கள், உறவினர்கள் ஆகியோரின் பெயர்களில் 5 அடுக்​கு​மாடிக் கட்​டடங்​கள், 4 வீடுகள், 7 மனைகள் என மொத்தம் 13 நிலங்கள் கண்டறியப்பட்டன.

மேலும், குடும்​பத்​தினரின் வங்கிப் பெட்டகங்களில் இருந்து சுமார் ரூ.2 கோடி ரொக்​கம் கைப்​பற்​றப்​பட்​டது.

மொத்த சொத்​துகளை​யும் மதிப்​பிட்ட பிறகு சட்​டரீ​தியி​லான நடவடிக்கை தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 1999ஆம் ஆண்டு வைகுண்ட நாத் பெஹ்ரா இளநிலைப் பொறி​யாள​ராக ரூ.6,000 மாதச் சம்​பளத்​தில் அரசுப் பணி​யில் சேர்ந்​தார்.

இந்த ஆண்​டின் தொடக்​கத்​தில் அவர் உதவி செயற்பொறி​யாள​ராகப்​ பத​வி உயர்​வு பெற்​றார் என்பது குறிப்பிடத்தக்கது​.

ஒடிசா அரசாங்கத்தில் பொறியாளருக்கான ஆரம்ப மொத்த சம்பளம், மாதத்திற்கு 48,000 முதல் 65,000 வரை இருக்கும். உதவிச் செயல் பொறியாளர்கள் மாதத்திற்கு சுமார் 50,000 முதல் 60,000+ வரை சம்பாதிக்கலாம், அதே சமயம் நடுத்தர மற்றும் மூத்த அரசுப் பொறியாளர்கள் ஆண்டுக்கு 500,000 முதல் 10 லட்சம் வரை சம்பளம் பெறுகிறார்கள்.

இந்நிலையில், அரசுப் பணியில் இருக்கும் பொறியாளர் ஒருவருக்கு கோடிக்கணக்கான சொத்துகளை வாங்க எங்கிருந்து பணம் வந்தது என்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்