புயலுக்கு மத்தியில் ஆந்திர மக்களின் தங்க வேட்டை

1 mins read
25929f20-71d2-40ac-b2f6-214678ce7145
தங்கக்கட்டிகள் குறித்து பரவிய தகவலையடுத்து ஏராளமானோர் உப்பாடா கடற்கரையில் குவிந்தனர். அங்கிருந்த மணலைச் சலித்து தங்கத்தைத் தேடினர். - படம்: ஊடகம்

அமராவதி: மோன்தா புயல் ஆந்திராவை வெள்ளக்காடாக மாற்றி கரையைக் கடந்துள்ள நிலையில், காக்கிநாடா பகுதி மக்கள் இந்தப் புயலால் தங்களுக்கு நன்மை விளையும் என நம்புகிறார்கள்.

அங்குள்ள உப்பாடா கடற்கரையில் தங்கம் கிடைக்கும் என்றும் அண்மையில் வீசிய புயல், அலைகளின் உதவியோடு தங்கத்துகள்களை கரை சேர்த்திருக்கும் என்றும் அப்பகுதி மக்கள் நம்புகின்றனர்.

தீவிரமாகத் தேடினால் தங்கக்கட்டிகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளதாக பரவிய தகவலையடுத்து, ஏராளமானோர் உப்பாடா கடற்கரையில் குவிந்தனர்.

மேலோட்டமாகப் பார்த்தபோது, தங்கத்துகள்களோ கட்டிகளோ தென்படாததால், கடற்கரை மணலைச் சலித்துப்பார்த்து தங்கத்தை சிலர் தேடினர்.

முன்னதாக, மோன்தா புயலால் உப்பாடா கடற்கரையில் ராட்சத அலைகள் எழுந்தன. இதனால் கடலோரக் கிராமங்களுக்குள் கடல்நீர் புகுந்தது. புயலுக்குப் பின் காற்று இயல்பாக வீசுவதையடுத்து, தங்க வேட்டை தொடங்கியுள்ளது.

சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இப்பகுதியைச் சேர்ந்த மன்னர்கள் வைத்திருந்த தங்கம் கடலில் மூழ்கியதாகவும் அவற்றில் சில தங்கக்கட்டிகள் அவ்வப்போது கரையொதுங்குவதாகவும் கூறப்படுகிறது.

உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல், வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் தங்க வேட்டையில் ஈடுபடுகிறார்கள்.

குறிப்புச் சொற்கள்