நடுநிலை தவறியதற்காக 5 காவல் அதிகாரிகள் பணி இடைநீக்கம்: தேர்தல் ஆணையம் உத்தரவு

நடுநிலை தவறியதற்காக 5 காவல் அதிகாரிகள் பணி இடைநீக்கம்: தேர்தல் ஆணையம் உத்தரவு

2 mins read
b9b42468-9f11-4cf2-a353-0278dfaa3df7
கோப்புப் படம்: - டெய்லிபய்னீர்.காம்

கோல்கத்தா: மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தல் பணியில் நடுநிலை தவறி செயல்பட்டதாக இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட ஐந்து காவல் அதிகாரிகளைத் தேர்தல் ஆணையம் அதிரடியாகப் பணியிடை நீக்கம் செய்துள்ளது.

இதுதொடர்பாக மேற்கு வங்க தலைமைச் செயலாளருக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள அவசர கடிதத்தில், டயமண்ட் ஹார்பர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சந்தீப் கராய், துணை காவல் கண்காணிப்பாளர் சஜல் மோண்டல், டயமண்ட் ஹார்பர் காவல் நிலைய ஆய்வாளர் மவுசம் சக்கரவர்த்தி, ஃபால்டா காவல் நிலைய ஆய்வாளர் அஜய் பாக், உஸ்தி காவல் நிலைய அதிகாரி சுபேச்சா பாக் ஆகியோர்மீது கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் நடைமுறைகளின்போது இவர்கள் கடும் முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் ஒருதலைப்பட்சமாகச் செயல்பட்டுத் தேர்தல் ஆணையத்தின் நடுநிலை விதிகளுக்குக் களங்கம் விளைவித்ததாகவும் புகார்கள் குவிந்தன.

குறிப்பாக, தேர்தல் வன்முறைகளைக் கட்டுப்படுத்தத் தவறியது, எதிர்க்கட்சியினரை அச்சுறுத்தும் வகையில் ஒருதலைப்பட்சமாகச் செயல்பட்டது, தேர்தல் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றாதது போன்ற காரணங்களால் இந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஐந்து அதிகாரிகளையும் உடனடியாகப் பணி இடைநீக்கம் செய்யுமாறும், அவர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மாநில அரசுக்குத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் நேரத்தில் உயர் அதிகாரிகள் கூண்டோடு இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது மேற்கு வங்க அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்த பாஜக தீவிரமாகப் போராடி வரும் நிலையில், அங்கு நடந்து முடிந்த முதற்கட்டத் தேர்தலில் 92.88 விழுக்காடு வாக்குகள் பதிவாகி சாதனை படைத்துள்ளது.

துணை ராணுவப் படையினரின் பலத்த பாதுகாப்பால் வன்முறை குறைந்து, மக்கள் அச்சமின்றி வாக்குச் சாவடிகளுக்கு வந்ததும் ஒரு காரணமாகப் பார்க்கப்படுகிறது.

குடியுரிமை, வாக்குரிமை பறிபோய்விடுமோ என்ற அச்சத்தால் மக்கள் அதிகளவில் வாக்களித்திருக்கலாம் என்றும் அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

பொதுவாக அதிகப்படியான வாக்குப்பதிவு ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையாகக் கருதப்படுகிறது. 2011ல் கம்யூனிஸ்ட் ஆட்சி வீழ்ந்தபோது இதேபோன்ற உயர் வாக்குப்பதிவு இருந்தது குறிப்பிடத்தக்கது.

திரிணாமூல் காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளுமே இந்த அதிகப்படியான வாக்குப்பதிவு தங்களுக்குச் சாதகமாக அமையும் எனக் கூறி வருகின்றன.

294 தொகுதிகளில் 152 தொகுதிகளுக்கு முதற்கட்டத் தேர்தல் முடிந்துள்ள நிலையில், எஞ்சிய 142 தொகுதிகளுக்கு ஏப்ரல் 29ஆம் தேதி இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறவுள்ளது.

முதற்கட்டத் தேர்தல் நடந்த 44,376 வாக்குச் சாவடிகளிலும் அமைதியான முறையில் தேர்தல் நடந்துள்ளது. எங்கும் மறுதேர்தல் நடத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த வரலாற்றுச் சாதனை வாக்குப்பதிவின் இறுதி முடிவு வரும் மே 4ஆம் தேதி தெரியவரும்.

குறிப்புச் சொற்கள்