அமராவதி: பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்துவிட்டனர்.
ஆந்திராவின் காக்கிநாடா மாவட்டம், சமர்லகோட்டாவில் இயங்கி வந்த அந்தப் பட்டாசு ஆலையில் 40க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வந்தனர்.
சனிக்கிழமை (பிப்ரவரி 28) பிற்பகல் 2 மணியளவில் பட்டாசு ஆலையில் பயங்கரச் சத்தம் கேட்டது. இதையடுத்து ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம்பிடித்தனர்.
எனினும், வெடிவிபத்தால்ல் மூண்ட தீ வேகமாகப் பரவியதால் தொழிலாளர்களில் பலர் தீயில் சிக்கிக்கொண்டனர்.
இந்த விபத்தில் 20 பேர் உடல் கருகி மாண்டுபோயினர். படுகாயமடைந்த பத்து பேர் அருகே உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் பலருக்கு உடலில் 90% தீக்காயம் ஏற்பட்டுள்ளதால் அவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே மீட்புப் பணியில் ஆளில்லா சிறிய ரக வானூர்திகளும் பயன்படுத்தப்படுவதாக காவல்துறை தெரிவித்தது. சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்துச் சிதறினால் எத்தகைய தாக்கம் இருக்குமோ, அதுபோன்ற மோசமான காட்சியைக் காண முடிவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
விபத்தில் சிக்கியவர்களின் உடற்பாகங்கள் அருகே உள்ள வயல்வெளியிலும் காலி மனைகளிலும் சிதறிக் கிடக்கக்கூடும் என நம்பப்படுகிறது. இத்துயரச் சம்பவம் காரணமாக ஆந்திர மக்கள் சோகத்தில் உள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
பட்டாசு தயாரிப்புக்கான வேதிக்கலவையின்போது ஏற்பட்ட உராய்வு அல்லது மின்கசிவு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
“மீட்புப் பணிகள் நீடிக்கின்றன. நிலைமையை அணுக்கமாகக் கண்காணித்து வருகிறோம். பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தாருக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும்,” என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
நாக்பூர் வெடிவிபத்தில் 17 பேர் மரணம், பலர் படுகாயம்
இந்நிலையில், மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தில் உள்ள எஸ்பிஎல் எனர்ஜி லிமிடெட் என்ற நிறுவனத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 17 பேர் மாண்டுபோயினர். பலர் படுகாயமடைந்தனர்.
இந்நிறுவனம் சுரங்கங்கள், தொழில்துறையினருக்கான வெடிபொருள்களை உற்பத்தி செய்கிறது. விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாநில முதல்வர் பிறப்பித்த உத்தரவையடுத்து, காவல்துறை மூத்த அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று மீட்புப்பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

