வளர்ச்சியை மையமாகக் கொண்ட பணியிடங்களை உருவாக்குவோம்

வளர்ச்சியை மையமாகக் கொண்ட பணியிடங்களை உருவாக்குவோம்

3 mins read
f8cc2fa3-0ab4-44ca-b63c-bbf2ee8403c2
முதுமையடையும் மக்கள் தொகையினால், மனிதவள பங்கேற்பு விகிதம் தொடர்ந்து சரிந்து 67.8 விழுக்காட்டை அடைந்துள்ளது. - படம்: சாவ்பாவ்
Google News Preferred Icon

சிங்கப்பூர் மனிதவள அமைச்சு கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட 2025ஆம் ஆண்டுக்கான மனிதவள முன்னறிக்கை நமது தேசத்தின் வேலைச் சூழலைத் தீர விவரித்தது.

உலகப் பொருளியலில் நிச்சயமற்ற தன்மைகள் நிலவினாலும், பண வீக்கத்திற்கும் மேலான ஊதிய வளர்ச்சி, குறைந்த வேலைவாய்ப்பின்மை, 90.8 விழுக்காடு நிரந்தர வேலைவாய்ப்பு என்பன முன்னறிக்கையில் நாமறிந்த ஆறுதலான செய்திகள்.

எனினும், முதுமையடையும் மக்கள் தொகையினால், மனிதவள பங்கேற்பு விகிதம் (Labour Force Participation Rate - LFPR) தொடர்ந்து சரிந்து 67.8 விழுக்காட்டை அடைந்திருப்பது நம் நாடு எதிர்நோக்கும் சவால்.

இந்த அறிக்கையின் மிக முக்கியமான அம்சம், உண்மைச் சம்பளம் (Real Income), அதாவது, பணவீக்கத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டபின் எஞ்சும் வருமானம்.

ஊழியர்களுக்கான உண்மைச் சம்பளம் உயர்ந்திருக்கின்றது. நடுத்தரச் சம்பளம் பெறுவோருக்கான உண்மைச் சம்பளம் 4.3 விழுக்காடாகவும், குறைந்த ஊதியம் பெறுவோருக்கான உண்மைச் சம்பளம் 3.8 விழுக்காடாகவும் உயர்ந்துள்ளது.

படிப்படியான சம்பள உயர்வு முறை (Progressive Wage Model) தொடர்ந்து குறைந்த ஊதியம் பெறுவோரின் வருமான உயர்வை உறுதிசெய்துள்ளது. இதன் விளைவாக, ஊதிய இடைவெளி குறுகி, சிங்கப்பூர் சமுதாயம் சமூக சமத்துவத்தை நோக்கி முன்னேறியுள்ளது.

நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர் (PMET), மேலும் இவர்கள் அல்லாத ஊழியர்கள் ஆகிய இரு பிரிவினரிலும் வேலைவாய்ப்பின்மை விகிதம் 2.8 விழுக்காட்டிற்கு குறைந்திருப்பது, சிங்கப்பூரில் வேலை வாய்ப்புச் சூழல் தொடர்ந்து நிலவுவதைக் காட்டுகிறது. நிரந்தர வேலைவாய்ப்புகள் உயர்ந்திருப்பது ஊழியர்கள் தங்கள் பணிப் பாதுகாப்பு குறித்து அதிக நம்பிக்கை கொண்டிருப்பதைக் குறிக்கிறது.

அதோடு வேலை மாற்றம் செய்வோரின் எண்ணிக்கை 7.6 விழுக்காட்டிலிருந்து 6.2 விழுக்காடாகக் குறைந்திருப்பது குறித்து இருவகையாகச் சிந்திக்கலாம். ஒன்று நிச்சயமற்ற பொருளியல் சூழலில் ஊழியர்கள் தங்களின் தற்போதைய வேலையை இறுகப் பற்றிக்கொள்ளும் போக்கு.

மற்றொன்று, இந்த நிலைத்தன்மை நீண்ட காலத் திறன் மேம்பாட்டிற்கும் உற்பத்தித்திறனுக்கும் வித்திட வாய்ப்பளித்திருப்பது. அதுவும் 25 வயது முதல் 29 வயதுவரை உள்ள ஊழியர்கள் வேலை மாற்றத்தை ஒத்திப் போடுவது தெரியவந்துள்ளது.

இது ஒரு நல்ல திருப்பம் எனலாம். அப்படியே வேலை மாற்றம் செய்தவர்களில் பத்தில் ஆறு பேர் உண்மை ஊதிய உயர்வைக் கண்டனர் என்பது மேல்நோக்கு வேலை வாய்ப்பு பலருக்கும் இருந்திருக்கிறது என்பதைக் குறிக்கிறது.

தொடர்ந்து நான்காவது ஆண்டாகச் சரிந்து வரும் மனிதவள பங்கேற்பு விகிதம் முதுமை அடைந்து வரும் மக்கள்தொகையின் நேரடி விளைவாகும். இருப்பினும், இதில் ஒரு நேர்மறையான வளர்ச்சியையும் காணமுடிகிறது.

மனிதவளத் தரவுகளின்படி பெண் ஊழியர்களின் பங்கேற்பு விகிதம் கடந்த பத்தாண்டுகளில் 74.1 விழுக்காட்டிலிருந்து 80.5 விழுக்காடாகக் கணிசமான அளவில் உயர்ந்துள்ளது. இந்த முன்னேற்றம், பாலின ஏற்றத்தாழ்வுகளை ஒதுக்கிவிட்டு அனைவரையும் பணியமர்த்தும் அரசின் தொடர்ச்சியான கொள்கைகளுக்குக் கிடைத்த வெற்றியாகும்.

சிங்கப்பூரின் பொருளியல் பலமான அடித்தளத்தில் இருக்கும் இத்தருணத்தை, அடுத்த கட்ட வளர்ச்சிக்கு நம்மை நாமே புத்துருவாக்கம் செய்துகொள்ளும் வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

திறனே எதிர்காலம் என்பது வேறு நாடுகளைவிடச் சிங்கப்பூரைப் பொறுத்தமட்டில் முற்றிலும் உண்மை. மாறிவரும் வேலைத் தேவைகள் புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய மறுதிறன் பயிற்சிகளை அத்தியாவசியமாக்கிவிட்டன.

நிறுவனங்கள் எதிர்காலத் தேவைகளை அடையாளம் கண்டு, வேலைத் திறன்களை மறுவடிவமைத்து வருகின்றன. ஊழியர்களின் வேலைப் பாதுகாப்பு நிரந்தரமானது அல்ல. திறன் மேம்பாடே வேலை நிரந்தரத்தை நிர்ணயம் செய்கின்றன என்பதை உணர வேண்டும்.

படிப்பை முடித்துவிட்டு வேலையில் சேரும் தறுவாயில் படித்தது பழையதாகிவிடுகிறது என்பதை உணர்ந்து அனுதினமும் செயல்திறன் மேம்பாட்டிற்காக உழைப்பதே உத்தமம். தாமதிக்காமல் திறன் மேம்பாட்டுத் திட்டங்களையும் (SkillsFuture) தொழில் மாற்றத் திட்டங்களையும் (Career Conversion Programmes) பயன்படுத்தி, எதிர்காலத் தேவைகளுக்கு நம்மைத் தயார் படுத்திக்கொள்ள வேண்டும்.

அரசாங்கம் வயதுக்கு ஏற்ற வேலைகளையும் பணிச்சூழல்களையும் ஊக்குவிக்க வழிகளை ஆராய்ந்து வருகிறது. நிறுவனங்கள் மூத்த ஊழியர்களைத் தக்கவைத்துக்கொள்ளும் கொள்கைகளை அமல்படுத்தி, அவர்களின் திறனையும் அனுபவத்தையும் அடுத்த தலைமுறைக்குக் கடத்த உதவ வேண்டும்.

வலுவான மனித வளத்தைக் கொண்டாடும் நாடாய் தொடர்ந்து சிங்கப்பூர் திகழ்வதற்கு, திறமைக்கு மதிப்பளிக்கும், வளர்ச்சியை மையமாகக் கொண்ட, பாகுபாடுகள் இல்லா பணியிடங்களை ஒன்றிணைந்து உருவாக்குவோம்.

Watch on YouTube
குறிப்புச் சொற்கள்
மனிதவள அமைச்சுமக்கள்தொகைவேலைநிறுத்தம்

தொடர்புடைய செய்திகள்