சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழக ஏற்பாட்டில் அதன் செயலவை உறுப்பினர் திருவாட்டி கு.சீ. மலையரசியின் இரண்டு நூல்கள் வெளியீடு கண்டுள்ளன. ‘முகிழ்’, ‘கலர் பென்சில்’ ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும் அக்டோபர் 29ஆம் தேதியன்று தேசிய நூலகக் கட்டடத்தின் ‘தி போட்’ அரங்கில் வெளியிடப்பட்டன.
அந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினரும் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழக மதியுரைஞருமான திரு இரா. தினகரன் ஜே.பி. சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு ‘முகிழ்’ நூலை வெளியிட்டார்.
தமிழர் பேரவையின் தலைவர் திரு வெ. பாண்டியன் ‘கலர் பென்சில்’ நூலை வெளியிட்டார். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறையின் தலைவர் பேராசிரியர், முனைவர் இரா. காமராசு சிறப்புரை ஆற்றினார்.
எழுத்தாளர் கழகத் தலைவர் திரு நா. ஆண்டியப்பன் தலைமையில் நடைபெற்ற விழாவில் எழுத்தாளர் திரு பொன். சுந்தரராசு வாழ்த்திப் பேசினார்.
கிட்டத்தட்ட 100 பேர் கலந்துகொண்ட இந்நிகழ்வில், தமிழர் பேரவையின் மாணவர் கல்வி நிதிக்கு நன்கொடை வழங்கப்பட்டது.

