வீட்டிற்கு அருகிலேயே இலவசச் சேவை வழங்கும் ‘சிண்டா பேருந்து’

வீட்டிற்கு அருகிலேயே இலவசச் சேவை வழங்கும் ‘சிண்டா பேருந்து’

2 mins read
17c195ff-a0c1-413f-88bb-0e8910e314a6
சிண்டா பேருந்துமூலம் கெபுன் பாரு சமூக மன்றத்தில் ஏறத்தாழ 30 மூத்த குடியிருப்பாளர்களுக்கு இலவசக் கண் பரிசோதனை செய்யப்பட்டது. - படம்: சிண்டா
Google News Preferred Icon

இலவச மருத்துவ, மனநலப் பரிசோதனை, சிறுவர்களுக்கான நூல் வாசிப்பு போன்ற அடிப்படைச் சேவைகளைக் குடியிருப்புப் பேட்டைகளுக்குக் கொண்டுசெல்லும் நோக்கத்தில் ‘சிண்டா பேருந்து’ எனும் நடமாடும் வாகனம் அறிமுகம் கண்டது.

அதனைத் தொடர்ந்து, கெபுன் பாரு சமூக மன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) சிண்டா பேருந்து ஏறத்தாழ 30 மூத்த குடியிருப்பாளர்களுக்கு இலவச கண் பரிசோதனை வழங்கியது.

அவர்கள் கெபுன் பாரு இந்தியர் நற்பணிச் செயற்குழு ஏற்பாடு செய்திருந்த தொடர் சுகாதார உரைகளிலும் பங்கேற்றனர்.

சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் (சிண்டா) பற்பல சேவைகளை, குறிப்பாகக் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்குக் கொண்டுசேர்ப்பதே ‘சிண்டா பேருந்து’ திட்டத்தின் நோக்கம் என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன் தமிழ் முரசிடம் தெரிவித்தார்.

“ஒருவகையான சிண்டா சேவை மையத்தை எல்லாக் குடியிருப்புப் பேட்டைகளிலும் அமைக்க விருப்பம். ஆனால், அதற்கான சாத்தியக்கூறு சற்றே சவாலானது. அதனால், நமது சேவைகளை மக்களின் வாசல்வரை கொண்டுசேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் உருவானதே சிண்டா பேருந்து,” என்று அவர் விளக்கினார்.

கடந்த ஏப்ரல் மாதம் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கத்தின் (லிஷா) இந்தியப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின்போது சிண்டா பேருந்தை மக்கள் அணுகினர். தொடர்ந்து இவ்வாண்டு முழுவதும் மேலும் பல குடியிருப்பாளர்களை ஈடுபடுத்த சிண்டா பேருந்து தொடர்ந்து பயணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வீட்டிற்கு அருகிலேயே இலவச சேவைகள் நேரடியாகக் கிடைப்பது மிகவும் வசதியானது என்று கூறினார் பயனாளிகளில் ஒருவரான திருவாட்டி ராஜலட்சுமி, 48.

பேருந்துவழி இல்லத்தரசிகளும் பங்கேற்கும் சமூக நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ய முடிந்தால் நன்றாக இருக்கும் என்று அவர் தமது விருப்பத்தையும் வெளிப்படுத்தினார்.

குறிப்புச் சொற்கள்