எழுத்தாளர் கழகம், கவிமாலை ஏற்பாட்டில் கவியரசு கண்ணதாசன் நூற்றாண்டு விழா

எழுத்தாளர் கழகம், கவிமாலை ஏற்பாட்டில் கவியரசு கண்ணதாசன் நூற்றாண்டு விழா

2 mins read
c80c5b90-a99a-48fc-ad2f-69514b678bda
சனிக்கிழமை (ஜூன் 20) மாலை மணி 4 முதல் தேங் ரோட்டிலுள்ள அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில் மண்டபத்தில் விழா நடைபெறும் - படம்: சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்
Google News Preferred Icon

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகமும் கவிமாலை அமைப்பும் இணைந்து ‘கவியரசு’ கண்ணதாசன் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடவிருக்கின்றன.

சனிக்கிழமை (ஜூன் 20) மாலை மணி 4 முதல் தேங் ரோட்டிலுள்ள அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில் மண்டபத்தில் விழா நடைபெறும்.

முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினரும் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழக மதியுரைஞருமான இரா. தினகரன் அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளவிருக்கிறார்.

தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கும் விழாவில் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தலைவர் திரு. சு. முத்துமாணிக்கம் வரவேற்புரை ஆற்றுவார்.

தொடர்ந்து அமரர் கண்ணதாசனின் புதல்வர் திரு. வெங்கட் கண்ணதாசன் ‘அப்பாவின் நினைவலைகள்’ என்னும் தலைப்பில் சிற்றுரை ஆற்றுவார்.

அதையடுத்து கவிமாலை நிறுவனர் கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ தலைமையில் சிறப்புக் கவியரங்கம் நடைபெறும்.

கண்ணதாசனின் ஆன்மிகம் பற்றிக் கவிஞர் சித. அருணாசலம், அவரது அரசியல் பற்றிக் கவிஞர் இன்பா, படத் தயாரிப்புகள் குறித்து கவிஞர் கோ. இளங்கோவன், திரைப்பாடல்கள் பற்றிக் கவிஞர் கி. கோவிந்தராசு, கதை வசனம் குறித்துக் கவிஞர் ந.வீ. விசயபாரதி, கவிதைகள் குறித்து முனைவர் தேன்மொழி ஆகியோர் கவிதைகளை வாசிப்பர்.

பின், கண்ணதாசனின் பாடல்களில் மக்களை அதிகம் கவர்ந்தவை ‘பக்திப் பாடல்களா? பாசப் பாடல்களா?’ என்ற தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம் ஒன்றும் இடம்பெறும். 

‘பக்தி’ அணியில் திரு. ஸ்டாலின் போஸ், திருவாட்டி கலைச்செல்வி வைத்தியநாதன், திரு. இராம்குமார் சந்தானம் ஆகியோரும் ‘பாச’ அணியில் கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ, திருவாட்டி இசக்கி செல்வி, திரு. எம். சேவகன் ஆகியோரும் வாதிடுவார்கள். எழுத்தாளர் கழகத்தின் முன்னாள் தலைவர் திரு. நா. ஆண்டியப்பன் நடுவராகப் பொறுப்பு வகிக்கிறார்.

பட்டிமன்றத்திற்குப் பிறகு திரு. தினகரன் சிறப்புரை ஆற்றுவார். அதனைத் தொடர்ந்து நன்கொடையாளர்களுக்கும் கவிஞர்களுக்கும் பேச்சாளர்களுக்கும்  நினைவுப் பரிசு வழங்கப்படும். இரவு 9 மணிக்கு விழா நிறைவு பெற்ற பிறகு அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்படும்.

கண்ணதாசன் ரசிகர்களும் இலக்கிய ஆர்வலர்களும் அவரது நூற்றாண்டுத் தொடக்க விழாவில் கலந்துகொள்ளும்படி எழுத்தாளர் கழகமும் கவிமாலையும் அன்புடன் அழைக்கின்றன.

குறிப்புச் சொற்கள்