கவியரங்கம், பட்டிமன்றத்துடன் களைகட்டிய ‘கவியரசர் 100’

கவியரங்கம், பட்டிமன்றத்துடன் களைகட்டிய ‘கவியரசர் 100’

3 mins read
8d365096-99bf-4d88-b443-7899593261c7
‘கவியரசர் 100’ விழாவில் இடம்பெற்ற கவியரங்கத்தில் பேசிய கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ. கவிஞர்கள் சித. அருணாசலம், கி. கோவிந்தராசு, ந.வி.விசயபாரதி, இன்பா, கோ இளங்கோவன், முனைவர் தேன்மொழி ஆகியோர் மேடையில் உள்ளனர். - படம்: லாவண்யா வீரராகவன்
Google News Preferred Icon

பலவித உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கண்ணதாசன் பாடல்கள், அவரது பெருமையைப் போற்றும் கவிப் புகழாரங்களுடன் அரங்கேறியது ‘கவியரசர் 100’ விழா.

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆண்டுதோறும் கண்ணதாசன் விழாவை நடத்திவரும் நிலையில் இவ்வாண்டு அவரது நூற்றாண்டுத் தொடக்கத்தை முன்னிட்டு ‘கவியரசர் 100’ எனும் சிறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கழகமும், கவிமாலை அமைப்பும் இணைந்து நடத்திய அந்த விழா, சனிக்கிழமை (ஜூன் 20) அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில் மண்டபத்தில் நடைபெற்றது.

பரதநாட்டிய நிகழ்ச்சியுடன் தொடங்கிய அவ்விழா சிறப்புக் கவியரங்கம், பட்டிமன்றம் ஆகியவற்றுடன் களைகட்டியது.

கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோவின் தலைமையில் கவியரசரின் அரசியல், ஆன்மிகம், பாடல்கள், கவிதைகள், கதைவசனம், படத்தயாரிப்பு ஆகிய தலைப்புகளில் அறுவர் பங்கேற்ற கவியரங்கம் இடம்பெற்றது.

விழாவில் முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் இரா தினகரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில் மண்டபத்தில் நடைபெற்ற ‘கவியரசர் 100’ விழாவில் பங்கேற்றோர்.
அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில் மண்டபத்தில் நடைபெற்ற ‘கவியரசர் 100’ விழாவில் பங்கேற்றோர். - படம்: லாவண்யா வீரராகவன்

தொடர்ந்து, ‘கவியரசரின் திரைப்பாடல்களில் மக்களை அதிகம் கவர்ந்தவை பக்திப் பாடல்களா, பாசப்பாடல்களா?’ எனும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. ஆறு பேர் பங்கேற்று, சுவைபடப் பேசிய அப்பட்டிமன்றத்துக்குச் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் முன்னாள் தலைவர் நா ஆண்டியப்பன் நடுவராகப் பங்கேற்றார்.

“கடந்த 15 ஆண்டுகளாக, கண்ணதாசன் விழாவை நடத்திவரும் எங்கள் கழகத்துக்குக் கவியரசரின் நூற்றாண்டு விழா என்பது சிறப்பானது. கவிஞர் கண்ணதாசன் எழுத்தாளராக இருந்து, கவிஞராகி, கவியரசாகி, பின்னர் அரசவைக் கவிஞர் என்ற அளவுக்கு முன்னேற்றம் அடைந்தவர். எழுத்துத் திறமையுடன், ஆழ்ந்த சிந்தனை மிக்கவர். அவருடைய கருத்துகள் அனைத்தும் இன்றைய இளையர்களிடம் சென்றுசேர வேண்டும். அவரது பாடல்கள், எழுத்துகள் மூலம் அவர்களும் தமிழில் ஆர்வம் கொண்டு, படைக்க முன்வர வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தோம்,” என்றார் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தலைவர் முத்துமாணிக்கம்.

சிறப்புக் கவியரங்கத்தில் கவிதை படைத்தவர்கள்.
சிறப்புக் கவியரங்கத்தில் கவிதை படைத்தவர்கள். - படம்: சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்
பட்டிமன்றப் பேச்சாளர்கள்.
பட்டிமன்றப் பேச்சாளர்கள். - படம்: சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்

இதில் பக்திப் பாடல்களே எனும் அணியில் இடம்பெற்றுப் பேசிய ராம்குமார் சந்தானம், 50, “இன்றைய தலைமுறைக்குப் பக்தி என்றால் என்ன என்பதைக் கண்ணதாசன் அன்றே சொல்லிக் கொடுத்துள்ளார் என்று நான் புரிந்துகொண்டதை மையமாக வைத்துப் பேசினேன். அவருடைய பாடல்கள் எளிமையானவை. அகராதி ஏதுமின்றி யாவரும் புரிந்துகொள்ளும் வகையில் அமைந்திருப்பதால் அனைவரிடமும் சென்றுசேருமென நம்புகிறேன்,” என்றார்.

“முதன்முறையாகக் கவிமாலையும் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகமும் இணைந்து கவியரசருடைய நூற்றாண்டின் தொடக்கத்தைக் கொண்டாட இவ்விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளோம்,” என்று கூறிய கவிமாலை அமைப்பின் தலைவர் இன்பா, “கண்ணதாசனுடைய கவிதைகள்மீது அனைவருக்கும் ஈர்ப்பு உண்டு. அதிலுள்ள எளிமையும் உணர்வுகளும் நடைமுறை வாழ்வுடன் பின்னிப் பிணைந்தவை. மகிழ்ச்சி, கண்ணீர், சோகம், காதல் என அனைத்துக்கும் கண்ணதாசனிடம்தான் செல்ல வேண்டும்,” என்றார்.

விழாவில் திரு வெங்கட் கண்ணதாசனுக்கு மரியாதை செய்யப்பட்டது.
விழாவில் திரு வெங்கட் கண்ணதாசனுக்கு மரியாதை செய்யப்பட்டது. - படம்: சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்

சிங்கப்பூரில் தமிழ்க் கவிதைக்காக 25 ஆண்டுகளாக இயங்கிவரும் கவிமாலை அமைப்பு இவ்விழாவின் ஏற்பாட்டில் பங்கெடுத்தது பெருமையானது என்றும் அவர் தெரிவித்தார்.

சமூக ஊடகங்கள் தொடங்கி எல்லாத் தளங்களிலும் பொருந்தக்கூடியதாக இருப்பதால் அவரது பாடல்கள் காலம் கடந்து அனைவரையும் சென்றடையும் என்றார் அவர்.

“கவியரசரைப் பிடிக்காதவர் யாரும் இருக்க முடியாது. அவரைப் பெருமைப்படுத்திய நிகழ்ச்சி ரசிக்கும்படி அமைந்தது,” என்றார் அதில் கலந்துகொண்ட பல் மருத்துவர் குந்தவை ஜெயமுருகன், 38.

“கவியரசரின் பெருமையைப் போற்றும் விழாவில் கலந்துகொண்டதில் மகிழ்ச்சி. அவரது பாடல்களைப் போற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளும் தொடர்ந்து இடம்பெறவேண்டும் என விரும்புகிறேன்,” என்றார் நிகழ்ச்சியில் பங்கேற்ற அண்ணாமலை ராமநாதன், 55.

குறிப்புச் சொற்கள்