கலைகள் வழி தமிழ் வளர்க்கும் ஆர்வலர்

3 mins read
c1f29b86-d1d6-42eb-bbd8-2ab02d60a052
கலைகளை சுவாசமாகக் கருதி வரும் திரு சையத் அஷரத்­துல்­லா­, அடுத்த தலைமுறை இளையர்களுக்கும் மறைந்து வரும் கலைகளைக் கொண்டு சேர்க்கிறார். - படம்: பே கார்த்திகேயன்
multi-img1 of 2

கலைமீதான பற்றே இவரது அடையாளம். படிப்பு, பணி, வாழ்க்கைச் சூழல் என வாழ்வில் பல்வேறு நிலைகளைக் கடந்துவந்தபோதும் சிறுவயது முதல் தாம் நேசித்த கலைகளை இன்றுவரை கைவிடாமல் கைக்கொண்டு வருகிறார் திரு சையத் அஷ­ரத்­துல்­லா­.

“தமிழ் மொழியின் சிறப்பு அதன் முத்தமிழில் நிறைந்துள்ளது. நாம் அன்றாடம் செய்யும் வேலைகளில் பல நேரம் தொய்வு ஏற்படலாம். ஆனால் அத்தகைய தருணங்களில் எல்லாம் கலைகள் நமக்கு உற்சாகத்தையும் புத்துணர்ச்சியையும் அளிக்கின்றன,’’ என்று விவரித்தார் எழுத்­தா­ளர், கதா­சி­ரி­யர், நாடக ஆசி­ரி­யர், பாடல் ஆசிரியர் என பன்முகத் திறன்கொண்ட இந்தக் கலை ஆர்வலர்.

‘‘கலைகளைக் கற்றுக்கொள்ளும்போது மொழிமீதான ஈர்ப்பு வருகிறது,” என்ற அவர், பள்ளிப்பருவத்தில் கலைகள்மீது மலர்ந்த தம் ஆசையைப் பல சவால்களுக்கிடையே பொக்கிஷமாய் கருதி பேணி வளர்த்தது பற்றி விவரித்தார்.

தொடக்கப்பள்ளியில் நடனமாடும் ஆசை துளிர்விட நடனத்தில் ஈடுபட்டார். உயர்நிலைப்பள்ளியில் அந்த ஆசை சற்றே மேலெழும்பிட, நாடகக் கலைமீது கண்பதிக்கலானார். அதன் தொடர்ச்சியாக நன்யாங் நுண்கலைக் கழகத்தில் நாடகக் கலையின் அடிப்படையைக் கற்றுக்கொண்டார்.

தொடக்கக் கல்லூரியில் ஆசிரியர்கள் அவரது கலை ஆர்வத்திற்கு மேலும் வலுசேர்க்க, இந்தியக் கலைகளில் ஆர்வம் எழும்பியது. 

‘‘அவ்வகையில் இந்தியக் கலைகளை எனக்கு அறிமுகம் செய்தவர் தொடக்கக் கல்லூரி தமிழாசிரியர் திருவாட்டி கமலவாணி. இருந்த இடம் தெரியாமல், அமைதியே உருவாய் இருந்த என்னை கதாகாலட்சேபம் செய்ய ஊக்கமளித்தவர் அவர். அவர் அளித்த நம்பிக்கையில் மேடை ஏறினேன். அதற்குக் கிடைத்த கைதட்டலும் நினைவைவிட்டு என்றும் அகலாது,” என்று நினைவுகூர்ந்தார் திரு சையத்.

அன்று தொடங்கிய ஆர்வம் இன்றுவரை தொடர்கிறது. அதேபோல் அவருக்கு ஆதரவும் பாராட்டும் வழங்கும் நண்பர்கள் எண்ணிக்கையும் வளர்கிறது. 

சிங்­கப்­பூர் தமிழ் எழுத்­தா­ளர் கழகத்தின் கவி­ய­ரசு கண்­ண­தா­சன் விருதைப் பெற்ற திரு சையத் அஷ­ரத்­துல்­லா, ‘‘ஆசிரியர்கள், நண்பர்கள் இல்லையென்றால் என் கலைப் பயணம் தொடர்ந்திருக்காது,’’ என்றார். 

சிறுவயதிலிருந்தே கல்வியுடன் கலைகளிலும் ஈடுபட மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தாலும், கலைத்துறையில் ஈடுபட சையத்துக்கு தொடக்கத்தில் வீட்டில் சம்மதம் உடனே கிடைத்துவிடவில்லை.

‘‘கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்றால் படிப்பில் கவனம் குறையும் என்று பெற்றோர் கலக்கமுற்றனர். விளையாட்டுகளில் பங்கெடுக்கலாம். ஆனால் நாடகங்களில் எல்லாம் எதற்காக நடிக்க வேண்டும்? என்று கேள்வி கேட்டதுண்டு.  

‘‘நான் படிப்பில் சிறந்த தேர்ச்சி பெற்றதால், பெற்றோரின் நம்பிக்கையை வெல்ல முடிந்தது. இடையூறு ஏதுமின்றி கலைசார்ந்த என் கனவையும் தொடர முடிந்தது,’’ என்றார் சையத்.

பல்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வடிவங்களில் கலைகள் தம்முடன் தொடர்ந்து பயணித்து வந்ததை சுட்டிய அவர், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் பயிலும்போது ‘சங்கே முழங்கு’ இசை நாடகத்திற்கு வடிவம் கொடுக்க வாய்ப்பு கிடைத்தது பற்றியும் சொன்னார்.

அந்தப் படைப்பிற்கு மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு தன்னைப் பற்றித் தனக்கு மேலும் புரிய வைத்தது என்றும், அதிலிருந்து மேடை நாடகங்கள், நாடகத் தொடர்கள், கதாகாலட்சேபம் என்று தொடர்ந்து பங்கேற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.

“தெருக்கூத்து, வில்லுப்பாட்டு, கதாகாலட்சேபம் போன்ற நாட்டுப்புறக் கலைகளில் இக்கால இளையர்கள் ஆர்வம் காட்டுவது வரவேற்கத்தக்கது,” என்று குறிப்பிட்ட திரு சையத், சிங்கப்பூரின் வரலாற்றைச் செதுக்கிய தலைவர்களின் கதைகளை இளையர்களிடம் கொண்டு சேர்க்க ஆவல்கொண்டுள்ளார்.

அடுத்த தலைமுறை இளையர்களுக்கும் மறைந்து வரும் கலைகளைக் கொண்டு சேர்க்கும் பணியிலும் இவர் ஈடுபட்டுள்ளார்.

‘‘கலைகள் இல்லாமல் போகும்போது மொழி பின்னடைவைச் சந்திக்கிறது. கலை வளர்ந்தால் நம் மொழியையும் எண்ணற்றோர் பேசுவர்,” என்றார் திரு சையத். 

பிள்ளைகளுக்கான விழுமியங்கள், பண்புகள், கருத்துகளை எளிதில் கற்பிக்க கலைகளை ஆற்றல்மிக்க வகையில் பயன்படுத்திட முடியும் என்பது இவரது கருத்து. அவ்வகையில் தமிழ் மொழியை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்த்திட கலைகளைப்போலச் சிறப்பான தளம் வேறொன்றும் இல்லை என்பது திரு சையத்தின் நம்பிக்கை.

குறிப்புச் சொற்கள்