சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் ஏற்பாட்டில் உள்ளூர் நூல்களின் காட்சி - வாசிப்பு மற்றும் எழுத்தாளர் மணிமாலா மதியழகனின் சிறார் நூல்களின் வெளியீட்டு விழா என இரண்டு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
குட்மன் கலை மையத்தின் பொது வரவேற்பு நிகழ்ச்சியின் ஓர் அங்கமாகப் படைக்கப்படும் இந்நிகழ்ச்சி சனிக்கிழமை (ஜூன் 22) பிற்பகல் 2.30 முதல் 4.30 வரை, புளோக் ‘பி’ குட்மன் கலை மையத்தின் மூன்றாவது தளத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் வண்ண வண்ண ஆர்க்கிட், வாலோடு பிறந்தவன், கறுப்பு வண்ணப் பூனை மற்றும் ஒற்றைக் கொம்புக் குதிரை ஆகிய சிறுவர் பாடல் நூல்கள் வெளியீடு காணவுள்ளன.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத் தலைவர் தனபால் குமார் கலந்துகொள்கிறார். வளர்தமிழ் இயக்கத்தின் துணைத் தலைவர் ஜோதி மாணிக்கவாசகம் நிகழ்ச்சியில் வாழ்த்துரை ஆற்றவுள்ளார்.
பேச்சாளர்கள் திருவாட்டி அ.மஹ்ஜபீன், திருவாட்டி இசக்கி செல்வி இருவரும் நூல்களை அறிமுகப்படுத்திப் பேசுவர். சிறார்கள் பாடும் பாடல்களும் நிகழ்ச்சியில் இடம்பெறும்.
மேலும், உள்ளூர் எழுத்தாளர்களின் நூல்களையும் நிகழ்ச்சியில் வாசிக்கலாம்.
இந்நிகழ்ச்சிக்கு சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது.


