வெளிநாட்டில் தமிழராக வாழ்வதே பெருமை: பாத்தாம் தமிழர்கள் பெருமிதம்

பண்பாட்டுத் தூதுவர்களாகப் பாத்தாம் தமிழ் இளையர்கள்

வெளிநாட்டில் தமிழராக வாழ்வதே பெருமை: பாத்தாம் தமிழர்கள் பெருமிதம்

2 mins read
fc1f84c4-ad31-4c7e-a2b0-1686a382894c
தமிழ்ப் பண்பாட்டின் தூதுவர்களாக இருப்பது பெருமை மட்டும் அன்று, இத்தகைய தொன்மை வாய்ந்த வரலாற்றை அடுத்த தலைமுறையிடம் கொண்டுசேர்க்கும் பொறுப்பும் உள்ளது. அவற்றை உறுதியாக நம்புகிறோம் என்கின்றனர் பாத்தாம் தமிழ் இளையர்கள். - படம்: பே கார்த்திகேயன்
multi-img1 of 2

தமிழைத் தேடி, தமிழ்ச் சொந்தங்களைத் தேடி தமிழ் முரசு செய்திக்குழு பாத்தாம் சென்றபோது, அங்குத் தமிழ்ப் பண்பாட்டின் தூதுவர்களாக ஒன்றுதிரண்டிருந்தனர் தமிழ் இளையர்கள்.

பாத்தாம் தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழாவிற்காக பேருவகையுடன் அவர்கள் வருகையளித்திருந்தனர்.

கல்வி, பணி, குடும்பம் என பல காரணங்களுக்காகத் தாயகம் கடந்து வந்திருந்த அவர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.

இத்தகைய விழாக்கள் ஊரில் பெருவாரியாக நடத்தப்படுவது உண்டு. ஆனால், பண்பாட்டைத் தாங்கிப் பிடிப்பது இளையர்களின் பொறுப்பு என்றார் திரு விக்னேஷ் மோகன், 27.

‘‘மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் என்று கலைகள் ஊரில் செழித்தோங்குகின்றன. ஆனால், இத்தகைய மரபுக் கலைகளில் இளையர்களின் ஈடுபாடு குறைவாக உள்ளதைக் காணமுடிகிறது. அதனால், பார்வையாளர்கள் என்பதைக் கடந்து இளையர்களும் பங்களிக்க முன்வர வேண்டும்,’’ என்றார் அவர்.

விழாவில் தமிழ்ப் பாரம்பரிய உடை மிளிர வந்திருந்தார் திரு முருகதாஸ். திருவண்ணாமலை இவரது பூர்வீகம்.

‘‘வெளிநாட்டிற்குச் சென்றால் தமிழ்ப் பண்பாட்டைப் பின்பற்ற மாட்டோம் என நினைப்பவர்கள் உண்டு. ஆனால், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தமிழ்ப் பாரம்பரிய உடை அணிந்து, தமிழையோ, தமிழ் பாரம்பரியத்தையோ மறப்பதில்லை என்று உலகிற்குக் காட்டுவதில் அத்தனை மகிழ்ச்சி எங்களுக்கு,’’ என்றார் அவர்.

தமிழ்நாட்டின் வேலூரில் இருந்து வாழ்க்கைத் தொழிலுக்காகப் பாத்தாம் தீவில் வாழ்ந்து வரும் திரு தீர்த்தகிரி, 29, நினைத்த நேரம் எல்லாம் தங்களால் ஊருக்குச் செல்ல முடியாது என்று கூறினார்.

‘‘இங்கும் நண்பர்கள் இருந்தாலும் வேலை நிமித்தமாக ஒருவரை ஒருவர் பார்க்க நேரம் கிடைக்காது.

“தமிழ் உணவையும் பார்க்க இயலாது. அதனால், வாய்ப்பு கிட்டும்போது உணவாலும் உணர்வாலும் ஒன்றுகூடி சமூகமாகத் திளைப்பது எங்களை உளமார வாழவைக்கும் உயிர்த்துடிப்பு. அந்த அனுபவம், வார்த்தைகளால் விவரிக்க முடியாத உணர்வு,’’ என்று திரு தீர்த்தகிரி நெகிழ்ச்சியுடன் சொன்னார்.

வீட்டில் பண்டிகைகளைக் கொண்டாடி முடித்த காலம் தற்போது சற்றே விரிவிடைந்து, அடுத்த அத்தியாயத்திற்குச் சென்றுள்ளதால் மகிழ்ச்சி கொண்டுள்ள இளைய சமூகம், பாரம்பரிய உடை அணிந்து, ஒரே இடத்தில் கூடியிருப்பதற்கான முக்கியக் காரணம் நம் பண்பாடு கற்பித்த அன்பு எனும் விழுமியம்தான் என்றனர். 

எனினும், தமிழ்ப் பண்பாட்டின் தூதுவர்களாக இருப்பது பெருமை மட்டுமன்று, இத்தகைய தொன்மை வாய்ந்த வரலாற்றை அடுத்த தலைமுறையிடம் கொண்டுசேர்க்கும் பொறுப்பும் உள்ளது என்பதால் அவற்றைச் செய்து முடிக்கவும் இலக்கு கொண்டு உள்ளதாக உறுதிகூறினர் பாத்தாம் தீவு இளங்காளையர்கள்.

குறிப்புச் சொற்கள்