எட்டு மாதம் படுக்கையில் கிடந்தேன்: சினேகா உருக்கம்

எட்டு மாதம் படுக்கையில் கிடந்தேன்: சினேகா உருக்கம்

2 mins read
ab8ba0c6-6726-4335-9751-52c20162b02d
தமிழ்த் திரையுலகின் ‘புன்னகை அரசி’ என அழைக்கப்படும் நடிகை சினேகா. - படம்: பின்டர்ரஸ்ட்
Google News Preferred Icon

நடிகை சினேகா, அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியபோது, திரைப்பயணத்தில் சந்தித்த மிகச்சவாலான விபத்து குறித்தும் அதிலிருந்து மீண்டுவந்த விதம் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார்.

“சினிமாவில் நான் மிகவும் பரபரப்பாக வலம் வந்துகொண்டிருந்த வேளையில் ஒரு விபத்தில் என் கை, கால், முதுகுப் பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. நான் எழுந்து நடக்கவே குறைந்தது எட்டு மாதங்களுக்கு மேல் ஆகும் என்று மருத்துவர்கள் திட்டவட்டமாகக் கூறிவிட்டார்கள்,” என்றார் சினேகா.

திருப்பம் தந்த ‘பார்த்திபன் கனவு’

உடல்நலம் பாதிக்கப்பட்டு நம்பிக்கை இழந்திருந்த நேரத்தில், இயக்குநர் கரு. பழனியப்பன் ‘பார்த்திபன் கனவு’ திரைப்படத்தின் கதையுடன் என்னை அணுகினார்.

“நாமே நடக்கமுடியாமல் படுத்திருக்கிறோம், நம்மை ஏன் இந்தப் படத்திற்கு அழைக்கிறார்?” என்று நான் முதலில் குழம்பிப் போனேன்.

ஆனால், என்மீது நம்பிக்கை வைத்த இயக்குநர், “நீங்கள் நிச்சயம் மீண்டு வருவீர்கள், உங்களால் முடியும்,” என்று தொடர்ந்து தைரியம் கொடுத்தார்.

இயக்குநர் கொடுத்த அந்த ஊக்கமே தம்மை வேகமாகக் குணமடையச் செய்ததாகச் சினேகா நெகிழ்ச்சியுடன் கூறினார்.

“சிக்கலான நேரங்களில் பிறர் நமக்கு அளிக்கும் தைரியமும், நாம் வளர்த்துக்கொள்ளும் ஊக்கமும் நிச்சயம் மிகப்பெரிய பலனைத் தரும். அதை ஒருபோதும் விட்டுவிடாதீர்கள்,” என அவர் மாணவர்களுக்கும் ரசிகர்களுக்கும் அறிவுரை கூறியுள்ளார்.

சினேகா குறிப்பிட்ட அந்த ‘பார்த்திபன் கனவு’ திரைப்படம் அவருக்குப் பெரும் புகழைத் தேடித்தந்ததுடன் தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றுத்தந்தது.

முன்னணி நடிகர்களுடன் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ள சினேகா, நடிகர் பிரசன்னாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்போது திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவரும் சினேகா, சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று ஜொலித்து வருகிறார்.

இது தவிர புடவை விற்பனையிலும் அசத்தி, தொழில் அதிபராகவும் மிளிர்கிறார் சினேகா.

குறிப்புச் சொற்கள்