ஜீவா சங்கர் இயக்கத்தில், வாணி போஜன் நடித்துள்ள ‘வலை’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்தப் படத்தில் நடிக்க மறுத்திருந்தால் நல்ல வாய்ப்பை இழந்திருக்கக்கூடும் என்று இப்போது நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார் வாணி போஜன்.
‘வலை’ படம் குறித்து?
“படத்தின் கதை குறித்து இயக்குநர் ஜீவா முதலில் தொலைபேசியில் விவரித்தபோது எனக்கு அதில் பெரிதாக ஆர்வம் ஏற்படவில்லை. பின்னர் நேரில் அவரைச் சந்தித்து நிதானமாகக் கதை கேட்டேன். எனக்குப் பிடித்துப்போனது. நடிப்பதாக ஒப்புக்கொண்டேன்,” என்று அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இப்போதெல்லாம் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படைப்புகளைத்தான் இயக்குநர்கள் உருவாக்குவதாகத் தெரிவித்துள்ள அவர், ‘வலை’ படமும் அப்படிப்பட்டதுதான் என்று கூறியுள்ளார்.
இது கடல் பின்னணியில் அமைந்த கதையாம். ராமேசுவரம் பகுதியில் பெரும்பாலான காட்சிகளைப் படமாக்கியுள்ளனர்.
அப்போது மீனவ சமுதாய மக்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது என்றும் அவர்களுடன் பழகிய அனுபவம் புதிதாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளார் வாணி.
கதைப்படி, படத்தின் நாயகன் அதர்வா இரட்டை வேடங்களில் நடித்துள்ளாராம். அந்த இரண்டு பாத்திரங்களுடனும் வாணி போஜன் கதை முழுவதும் பயணம் செய்வாராம்.
“அவரைப்போன்ற அருமையான ஒரு நடிகருடன் இணைந்து நடிப்பது எப்போதுமே உற்சாகம் தரும். ‘சாக்லேட் பாய்’ போன்று இருக்கும் அதர்வா, இப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் அசத்தியுள்ளார்.
“எனது திரைப்பயணத்தில் பெரிய இடைவெளி ஏற்பட்டது ஏன் என்று பலரும் கேட்கிறார்கள். நான் ‘கேங்கர்ஸ்’ படத்தில் கௌரவ வேடத்தில் நடித்திருந்தேன். அதன் பிறகு ஐந்து படங்களில் நடித்து இருக்கிறேன். அவற்றுள் வித்தியாசமான கதைக்களம் கொண்ட ‘டிரைவர்’ என்ற படமும் அடங்கும்.
“பத்து, பதினைந்து படங்களில் நடிப்பதைவிட குறைவான படங்களில் நூறு விழுக்காடு உழைப்பைக் கொடுத்து நடித்திருக்கிறார் என மற்றவர்கள் என்னைப் பாராட்டுவதுதான் முக்கியம். மற்றபடி, திரைத்துறையை பணம் ஈட்டும் ஒரு கருவியாக நான் பயன்படுத்திக்கொள்ளவும் விரும்பவில்லை.
“உடல்நலனில் எப்போதுமே எனக்கு அதிக அக்கறை உண்டு. உடல்நலனைப் பாதுகாப்பது மிகவும் முக்கியம். உடற்பயிற்சிக் கூடத்துக்குச் சென்று பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறேன். அதேபோல், மனநலமும் மிக அவசியம். ஏனெனில் அழகிய மனம்தான் இளமைக்கான வரம்.
“மேலும், உணவுக் கட்டுப்பாட்டையும் சரியாகப் பின்பற்றுகிறேன். நேரம் கிடைக்கும்போது சிறு பயணங்களை மேற்கொள்வேன். அது புத்துணர்ச்சி தரும்,” என்று குமுதம் ஊடகப் பேட்டியில் தெரிவித்துள்ளார் வாணி போஜன்.

