பக்தி இலக்கியத்தின் கவிதை நயமும் கணிதத் திறனும்

பக்தி இலக்கியத்தின் கவிதை நயமும் கணிதத் திறனும்

2 mins read
174ce0a1-6850-4f24-8c3b-3b571dd36dcb
தமிழின் ஆழத்தையும் நுட்பத்தையும் சித்திரக்கவிதைகள் எடுத்துக்காட்டுவதாக கார்த்திக் ராமநாதன், (இடது) ஸ்ரீநிதி சுரேஷ் ஆகியோர் கூறினர். - படங்கள்: திருமுறை மாநாடு ஏற்பாட்டின் இளையர் குழு
Google News Preferred Icon

செய்யுள், சித்திரக்கவிதை என தமிழ்க் கவிதையின் பல வடிவங்கள் பற்றி சிறப்பாக உரையாற்றினர் கார்த்திக் ராமநாதன், ஸ்ரீநிதி சுரேஷ் இருவரும்.

இந்து ஆலோசனை வாரியத்தின் ஏற்பாட்டில் முதல்முறையாக நடந்தேறிய ‘பக்தித் தீந்தமிழ்’ மாநாட்டில், திருமுறை மாநாடு ஏற்பாட்டின் இளையர் குழுவைச் சேர்ந்த இவர்களது படைப்பு பலரது பாராட்டையும் பெற்றது.

பக்தி இலக்கியத்தின் மொழிச் சிறப்பு, இலக்கணச் சிறப்புகளை எடுத்துக்கூறி அவர்கள் விளக்கினர். கவிதை யாப்பிலணக்கத்தின் நுட்பமான கணிதத்தை அப்பாடல்கள் வழி அவர்கள் எடுத்துக்கூறினர்.

பாடலின் பண், பக்திப் பொருள், இலக்கிய உத்திகள், பாடலின் கட்டமைப்பிற்குள் ஒளிந்திருக்கும் கணித, தர்க்க விவரங்கள் எனப் பல நிலைகளில் தேவாரங்கள் ஆராயப்படலாம் என்றனர் அந்த இளையர்கள்.

மாலைமாற்று சித்திரக்கவிதையாக வரையப்பட்ட திருஞானசம்பந்தரின் யாமாமா பதிகம்
மாலைமாற்று சித்திரக்கவிதையாக வரையப்பட்ட திருஞானசம்பந்தரின் யாமாமா பதிகம் - படம்: திருமுறை மாநாடு ஏற்பாட்டின் இளையர் குழு

‘மாலை மாற்று’ எனும் சித்திரக்கவி வகையை 23 வயது ஸ்ரீநிதி சுரேஷ் நிகழ்ச்சி மேடையில் விளக்கினார்.

ஒரு வரியை இடமிருந்து வலமாகப் படித்தாலும், வலமிருந்து இடமாகப் படித்தாலும் அதே எழுத்துகளும் அதே பொருளும் வருமாறு அமைப்பதே மாலை மாற்று ஆகும். 

ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர், ‘யாமமாநீ’ எனத் தொடங்கும் பதிகத்தில் ’மாலை மாற்று’ உத்தியைப் பயன்படுத்தி இருப்பதை 26 வயது கார்த்திக் ராமநாதன் சுட்டிக்காட்டினார்.

பதிகத்தின் சைவ சித்தாந்த மெய்யியல் பொருளுடன், பாடலின் எழுத்துக்கோவையை அவர் அழகாக விளக்கினர்.

தேவாரப் பாடல்களில் காணப்படும் சீர், தளை ஆகியவற்றின் அமைப்பிற்கும், நவீன கணிதத்தில் புகழ்பெற்ற ‘பாஸ்கல் முக்கோணத்தின்’ (Pascal’s Triangle) குணங்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளை அவர் விளக்கினார். 1,300 ஆண்டுகளுக்கு முன்பே இவ்வளவு சிக்கலான கணிதக் கோட்பாடுகளைப் பாடல்களில் புகுத்தியிருப்பது வியக்க வைப்பது என்றார் அவர்.

தேர் வடிவில் கவிதை

திருஞானசம்பந்தரின் ‘ஓர் உரு ஆயினை’ தேவாரத்தின் திருஎழுகூற்றிருக்கை (தேர் வடிவச் சித்திரக்கவிதை) பற்றியும் அவர்கள் படைத்திருந்தனர்.

மேற்கத்திய இலக்கியங்களில் பயன்படுத்தப்படும் சிக்கலான கவிதைக் கட்டமைப்புகளை வியந்து பார்த்த தங்களுக்கு, தமிழுக்குள் அதைவிடப் பல மடங்கு நுட்பமான கலைகள் இருப்பது ஆய்வின் போதுதான் புரிந்ததாக ஸ்ரீநிதி நெகிழ்ச்சியுடன் பகிர்ந்தனர்.

ஆங்கில இலக்கியப் பின்னணி கொண்ட அவர், தமிழின் தொன்மையும் அதன் செழுமையும் மிக உயர்வாக உள்ளது. இது தமிழின் மீதான மரியாதையையும் ஆர்வத்தையும் இன்னும் அதிகரிக்கிறது என்றார் அவர்.

தமிழில் சரளமாகப் பேசுவதும் வாசிப்பதும் மட்டுமே ஒரு மொழியின் முழுமையை அறிந்துகொள்வதாகாது என்று கார்த்திக் கருதுகிறார். 

மொழியின் ஆழமான இலக்கியப் பகுதிகளை ஆராயும்போதுதான் அந்த மொழியின் ஆன்மா நமக்குத் தெரியவரும் என்பது அவர் கருத்து.

“இளைய தலைமுறையினர் தமிழை வெறும் தொடர்பு மொழியாக மட்டும் பார்க்காமல், அதை அறிவுத் தளமாகப் பார்க்க வேண்டும்,” என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

தமிழைத் தொடர்பு மொழியாக மட்டும் பார்க்காமல், அதை அறிவுத் தளமாகவும் பார்க்க வேண்டும்
கார்த்திக் ராமநாதன்
குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்