நாடகத்துறையில் தமக்குள்ள உண்மையான ஆர்வத்தையும் திறனையும் கண்டறிந்து, அவற்றைப் பட்டைதீட்டி, தமது கலைப் பயணத்துக்கு தயாராகி உள்ளார் சுரேந்திரன் ஆனந்தன்.
கலாசாரங்களுக்கிடையிலான நாடகப் பள்ளியின் (Intercultural theatre institute) நவம்பர் 28ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் பட்டயக் கல்வியை முடித்து பட்டம் பெற்ற 34 வயது சுரேந்திரன், இலக்கை நோக்கிய பயணத்தை மகிழ்ச்சியுடன் எதிர்நோக்கியுள்ளார்.
நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியின் இந்திய கலாசார மன்றத்தில் சேர்ந்தபோது கலைகளில் சுரேந்திரனின் ஆர்வம் மலர்ந்தது. 19 வயதில், 2009ஆம் ஆண்டு தொழிற்கல்லூரி ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் முதல் முறையாக நடித்தார்.
அதையடுத்து, 2010ஆம் ஆண்டு வசந்தம் ஒளிவழியின் ‘உதயம்’ போட்டியில் கலந்துகொண்டு இரண்டாம் பரிசை வென்றார்.
நடிப்பில் சுரேந்திரனுக்கு இருக்கும் ஆர்வத்தைப் புரிந்துகொண்டு உதயம் போட்டியின் நடுவராக இருந்த உள்ளூர் பிரபல நாடகக் கலைஞர் வடிவழகன், சுரேந்திரனை நாடகத் துறைக்கு அறிமுகப்படுத்தினார்.
அதிபதி அனைத்துலக நாடக நிறுவனம், அவாண்ட் நாடகக் குழு போன்ற அமைப்புகளின் பல நாடகங்களின் முக்கியக் கதாபாத்திரங்களில் சுரேந்திரன் இடம்பெற்றுள்ளார்.
நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் மின்சாரப் பொறியியல் பட்டயக்கல்வி இரண்டாம் ஆண்டு படிப்பை முடித்த நிலையில், பொறியியலில் தமக்கு ஆர்வம் இல்லை என்று உணர்ந்தார் சுரேந்திரன். எனினும், மேலும் ஓராண்டை வீணாக்க வேண்டாம் என்ற முடிவோடு பொறியியல் படிப்பைக் கைவிட முடிவெடுத்தார்.
19 வயதில் அந்த முடிவை எடுத்தபோது குடும்பத்தினரிடமிருந்து பெரும் எதிர்ப்பு கிளம்பியது என்றாலும் சுரேந்திரன் தன் முடிவில் திண்ணமாக இருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
21வது வயதில் தேசிய சேவையை முடித்த பிறகு பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தோடு பல பணிகளில் ஈடுபட்டார். கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் தளவாட நிறுவனம், வங்கி உட்பட பல இடங்களிலும் துறைகளிலும் பணியாற்ற முயற்சி செய்த அவருக்கு ஒரு கட்டத்தில் வாழ்க்கையே சலிப்பு தட்டிப் போனது.
ஈடுபாடின்றி வேலைக்குச் செல்வது சுரேந்திரனுக்கு அறவே பிடிக்கவில்லை. அவர் மகிழ்ச்சியாக இருந்தது நாடகங்களில் நடித்தபோதுதான். அந்நிலையிலிருந்து வெளிவர வேண்டும் என்ற எண்ணம் தலைதூக்க, தம் மனைவி சங்கீதா சுந்தரத்தின் ஆதரவோடு 30 வயதில் கலாசாரங்களுக்கிடையிலான நாடகப் பள்ளியில் தன் பயணத்தை தொடங்கினார்.
பட்டயக் கல்வியை மேற்கொள்ள டான் சே பிங் கல்வி நிதி உபகாரச் சம்பளத்தை (Tan Chay Bing Education Fund Scholarship) சுரேந்திரன் பெற்றார்.
முறையாக நடிப்பு கற்றுக்கொள்ளும் ஆர்வத்தோடு அங்கு காலடி எடுத்து வைத்த சுரேந்திரனுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
“அந்த அனுபவம் சிறிதும் நான் நினைத்ததுபோல் இல்லை. தேசிய சேவையில் கழித்த நாள்கள்தான் நினைவுக்கு வந்தன,” என்றார் அவர்.
கடுமையான உடற்பயிற்சியோடு கட்டொழுங்கையும் கற்பிக்க முற்பட்டது பள்ளி.
பல நாடுகளைச் சேர்ந்த வெவ்வேறு பாரம்பரிய நாடக வகைமைகளைக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. பற்பல மொழிகளில் அவர் வசனங்களை மனனம் செய்து படைக்கவும் செய்தார்.
“கடந்த கால அனுபவங்களை அடிப்படையாகக்கொண்டு நடிக்க வேண்டும் என்ற பொதுக் கருத்தை புறந்தள்ள வேண்டும் என உணர்ந்தேன். உள்ளுணர்வோடு கதாபாத்திரமாகவே உருமாறுவது தான் நடிப்பு,” என்று அங்கு தாம் பெற்ற முக்கியப் படிப்பினையை எடுத்துரைத்தார் சுரேந்திரன்.
எதிர்காலத் திட்டங்கள், கனவுகள்
“மக்களை சிந்திக்கத் தூண்டி சமுதாயத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதே நாடகத்தின் நோக்கம். அதை நோக்கியே எனது பயணமும் அமையும்,” என்று தமிழ் நாடகத் துறையில் தமது அணுகுமுறையை விவரித்தார்.
வருங்காலத்தில் நாடக பயிற்றுவிப்பாளராக பணியாற்ற விரும்பும் அவர், “தொடர்ந்து கற்பித்தலே வாழ்நாள் கல்விக்கு சிறந்தது,” என்றார்.
நாடகத் தயாரிப்பு அமைப்பு ஒன்றைத் தொடங்க வேண்டும் என்பது சுரேந்திரனின் கனவு.
“நாடகக் கலை சார்ந்த முறையான கல்வியையும் பயிற்சியையும் பெற்றுள்ள சுரேந்திரன், மெருகூட்டப்பட்ட படைப்பாற்றலோடு பன்மொழிக் கலைஞராகத் திகழ்வார். நாடகத் துறைக்கு அவரது பங்களிப்பு நிச்சயம் இன்றியமையாததாக விளங்கும்,” என்று குறிப்பிட்டார் திரு வடிவழகன்.

