பொருள் வாங்கும் மோகத்தை முறியடிப்போம்

பொருள் வாங்கும் மோகத்தை முறியடிப்போம்

2 mins read
a60d840d-1f58-40bf-8cac-958784959c1a
கடந்த ஆண்டு அதிகம் நாடப்பட்ட லபுபு பொம்மைகள், மூன்று மடங்கு விலையில் விற்கப்பட்டு வருகின்றன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 
Google News Preferred Icon

திடீரெனப் பிரபலமாகும் பொருள்களைத் தாங்களும் வாங்க வேண்டும் என்ற மோகத்திற்கு இளையர்கள் உள்ளாகின்றனர். 

சமூக ஊடகங்கள், இணைய விளம்பரங்கள், அன்றாடம் பார்க்கும் பள்ளி நண்பர்கள் எனப் பல்வேறு கோணங்களிலிருந்து தூண்டுதல்கள் வருகின்றன. 

ஒருபுறம், ‘டிரெண்ட்’ (trend) எனப்படும் இத்தகைய போக்கு இளையர்களின் படைப்பாற்றலின் வெளிப்பாடாக உள்ளன.

அதே சமயத்தில், இத்தகைய பழக்கத்திற்குப் பணம் அதிகம் தேவைப்படுவதால் செலவு சம்பந்தப்பட்ட அழுத்தம் அவர்களுக்கு ஏற்படுகிறது. கடந்த ஓர் ஆண்டாக டிக்டாக், இன்ஸ்டகிராம், வலையொளி முதலான பல்வேறு தளங்கள்,  இளையர்கள் எதை வாங்குகிறார்கள் என்பதை முடிவெடுக்கப் பயன்படுத்தப்பட்டன. 

ஆடை அலங்காரம், அரிய காலணிகள், புதிய கைப்பேசிகள், அழகிய தொழில்நுட்பக் கருவிகள் எனச் சில பொருள்கள், பிரபலத்தின் உச்சத்தை எட்டி எல்லோராலும் விரும்பப்படும் பொருள்களாக மாறுகின்றன. 

சமூக எதிர்பார்ப்புகள்

ஏறத்தாழ ஒவ்வொரு வாரமும் புதிய  ‘டிரெண்ட்’ வருவதால் விறுவிறுப்பும் போட்டித்தன்மையும் ஏற்படுவதாகப் பலதுறைத் தொழிற்கல்லூரியில் படிக்கும் 18 வயது வெங்கட்ராமன் ரோஷ்னி கூறுகிறார்.

 “பள்ளியில் எல்லாரும் ஒரே மாதிரி ஹூடி(முக்காடுடன் கூடிய மேற்சட்டை) அல்லது ஒரே மாதிரி கைப்பேசி உறையையே வைத்திருப்பதைப் பார்த்தால், எனக்கும் அந்தப் பொருள்களை வாங்கத் தோன்றும்,”என்று அவர் கூறினார்.

பிரபலமாக உள்ள அதே பொருள்களை வாங்கும்போது இளையர்கள் எல்லோரும் ஒரே சமூக வட்டத்தில் இணைந்ததுபோல உணர்கின்றனர். 

அந்தப் பொருள்களை வாங்காமல் இருப்பது, சிலருக்குத் தனிமையையும் பின்னடைவையும் உணரச் செய்கிறது.

சமூக ஊடகப் பிரபலங்கள் தங்கள் பக்கங்களில் பொருள்களை விளம்பரம் செய்வது மற்றொரு காரணம். 

செல்வாக்கு மிகுந்த பிரபலங்கள் செய்யும் விளம்பரம், பொருளின் ஈர்ப்புத்தன்மையைக் கூட்டுகிறது. நேரலைச் சேவை வழி ஆயிரக்கணக்கான விற்பனைகள் சில மணி நேரங்களிலேயே நிகழ்கின்றன.

இத்தகைய விளம்பரங்களால் உணர்ச்சிவசப்பட்டு பொருள் வாங்க இளையர்கள் தூண்டப்படுவதாக விற்பனை நிபுணர்கள் எச்சரித்தனர். 

எல்இடி விளக்குகள், குட்டி அச்சு இயந்திரங்கள், வண்ணங்கள் நிறைந்த குறிப்பு புத்தகங்கள், அலங்கரிக்கப்பட்ட மேசைப்பாடங்கள் ஆகியவற்றின் விற்பனை அதிகரித்துள்ளது.

இத்தகைய பழக்கம் சில நேரங்களில் இளையர்களின் திறன்களையும் தனித்தன்மையையும் ஊக்குவிக்கின்றபோதும், பெற்றோரும் ஆசிரியர்களும் பொருளியல் விளைவுகள் குறித்து கவலைப்படுகின்றனர். 

விவேகம் கடைபிடிக்க அறிவுறுத்து 

தேவையை கடைப்பிடிக்க வாங்கும் போக்கு, நீண்ட காலத்தில் தவறான நிதிப் பழக்கங்களை உருவாக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

புதிய பொருள்களின் தேவை சில குடும்பங்களுக்குப் பணச்சுமையாக மாறுகின்றன.

நன்கொடை, சேமிப்பு, பொருளின் பயனை ஆராய்ந்து வாங்குவது போன்றவை நல்ல பண நிர்வாகத்திற்கான அடையாளங்கள் எனத் தம் பிள்ளைகளுக்கு அறிவுறுத்துவதாக  இரண்டு குழந்தைகளின் 41 வயது தாய் வெங்கட்ராமன் கலைவாணி கூறினார். 

வாங்குவதற்கு முன் சிந்தித்தல், நன்மை–தீமைகள் ஆராய்தல், உடனடி முடிவுகளைத் தவிர்த்தல், நம்பகமான பெரியவர்களிடம் ஆலோசனை பெறுதல் போன்ற பழக்கங்கள் இளையர்களுக்கு ஆரோக்கியமான நிதி முடிவுகளை எடுக்க உதவும் என்று மனநல நிபுணரும் இம்பார்ட் இளையர் நல அமைப்பின் தலைவருமான  நரசிம்மன் திவாசிகமணி, 41, தெரிவித்தார்.

சிந்தித்துச் செயல்பட்டால் சிறப்புறுவோம்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்