சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக தமிழ்ப் பேரவையின் சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மாநாட்டை முன்னிட்டு ஜனவரி 17ஆம் தேதி (சனிக்கிழமை) முன்னாள் மாணவர் இல்ல அரங்கத்தில் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றது.
சிங்கப்பூர் இந்தியச் சமூகத்தின் எதிர்காலப் போக்கை வடிவமைக்கவும் அடித்தளக் கருத்துகளைத் திரட்டவும் நோக்கம் கொண்ட ஆறு மாதக் கலந்துரையாடல் தொடருக்கு இந்நிகழ்ச்சி ஒரு தொடக்கமாக அமைந்தது.
‘இளையர்களின் கனவுகள்’ எனும் கருப்பொருளுடன் நடந்த இக்கலந்துரையாடலில் 16 - 35 வயதுக்குட்பட்ட கிட்டத்தட்ட 50 இளையர்கள் பங்கேற்றனர்.
இன்றைய இளையர்கள் வெற்றியை எவ்வாறு வரையறுக்கிறார்கள், தங்கள் இலக்குகளை அடைவதில் அவர்கள் எதிர்கொள்ளும் தடைகள் எவை, தேவையான கட்டமைப்பு மற்றும் உணர்வுபூர்வமான ஆதரவு ஆகியவை பற்றி அவர்கள் ஆழமாக விவாதித்தனர்.
மனிதவள, கலாசார, சமூக, இளையர்துறைத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
பங்கேற்பாளர்கள் 8 முதல் 10 பேர் கொண்ட சிறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. பேரவையின் கல்வியியல் துணைக் குழுவினர் அவற்றை நெறிப்படுத்தினர்.
வெற்றி என்பது மதிப்பெண்கள், மதிப்புமிகு வேலை, வருமானம் ஆகியவற்றை மட்டும் சார்ந்ததன்று என்பதையும் நிதி நிலைத்தன்மை, தனிப்பட்ட மகிழ்ச்சி, வாழ்க்கையின் நோக்கம், வேலை-வாழ்க்கைச் சமநிலை ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு முழுமையான கலவையாகவே அது இன்றைய இளையர்களால் பார்க்கப்படுகிறது என்பதையும் கலந்துரையாடலின் முடிவுகள் வெளிப்படுத்தின.
நிகழ்ச்சியின் நிறைவாக, துணையமைச்சர் தினேஷுடன் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. அதில் வேலைவாய்ப்பு, மனநலம், வேலை-வாழ்க்கைச் சமநிலை, பண்பாடு, சிங்கப்பூரில் தமிழ்க் கலைகளின் எதிர்காலம் ஆகியவை தொடர்பில் இளையர்கள் கேள்விகளை எழுப்பினர். பல்கலைக்கழக வாழ்க்கை, வெற்றியின் மாறிவரும் பரிமாணங்கள், சமூக முயற்சிகளை முன்னெடுப்பதில் இளையர்களின் பங்கு ஆகியன குறித்தும் கருத்துகள் பகிரப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
வழக்கமான தொழில்பாதைகளைப் பின்பற்றுமாறு குடும்பத்தினரிடமிருந்தும் சமூகத்திடமிருந்தும் வரும் அழுத்தங்கள் குறித்தும் பேசப்பட்டது.
தலைமுறை இடைவெளியைக் குறைக்க பெற்றோருடன் வெளிப்படையான, சுமுகமான உரையாடல் அவசியம் என்பதும் வலியுறுத்தப்பட்டது.
“பாரம்பரியக் கண்ணோட்டங்களுக்கு அப்பால், இளையர்கள் தாங்கள் உண்மையாக விரும்புவதை வெளிப்படுத்த ஒரு பாதுகாப்பான தளத்தை அமைத்துத் தருவதன் அடிப்படையில் இவ்வாண்டின் கருப்பொருள் தேர்ந்தெடுக்கப்பட்டது,” என்று ஏற்பாட்டுக் குழுத் தலைவரும் தத்துவம், அரசியல், பொருளியல்துறை (PPE) மூன்றாமாண்டு மாணவியுமான கண்ணன் வைஷ்ணவி, 22, தெரிவித்தார்.
மேலும், இளையர்களுக்குத் தேவைப்படும் ஆதரவு, அணுகுவதற்குச் சிரமமாக இருக்கும் வளங்கள், அவற்றை எவ்வாறு இன்னும் பொருத்தமானதாக மாற்றலாம் போன்றவற்றைக் கண்டறிவதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் என்றும் அவர் சொன்னார்.
இந்நிகழ்ச்சி 22 வயது கணினி அறிவியல் மாணவர் வடிவேல் ஜெயவசந்திற்கு ஒருவித தனிப்பட்ட பொறுப்புணர்வையும் ஊக்கத்தையும் அளித்துள்ளது. கொள்கைகளும் நிறுவனங்களும் முக்கியப் பங்காற்றினாலும், இளையர்களே தங்கள் பாதையை வடிவமைப்பதிலும் சமூகத்திற்குப் பங்களிப்பதிலும் முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் கூறினார்.
குழுக் கலந்துரையாடல்களை வழிநடத்திய 20 வயது அரசியல் அறிவியல் மாணவியான இந்து ரமேஷ், இளையர்களுக்கு இன்னும் நெருக்கமான வழிகாட்டல் முறைகள் தேவை என்று வலியுறுத்தினார். மிக உயர்ந்த நிலையில் உள்ள சாதனையாளர்களுடன் நெருக்கமாகத் தொடர்புகொள்வது இளையர்களுக்குச் சிரமமாக உள்ளது என்றும் அணுகக்கூடிய நிலையில் உள்ள, தங்களைப் போன்ற பயணத்தைக் கொண்ட வழிகாட்டிகளின் ஆலோசனை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
சிங்கப்பூரின் கல்விமுறை தமக்கு ஆதரவாக இருப்பதாக உணர்ந்தாலும், பெற்றோரின் தலைமுறையோடு ஒப்பிடுகையில் தமிழ் மொழியும் பண்பாடும் நலிவடைந்து வருவது குறித்து பொருளியல் மாணவர் கிஷோர் சிதம்பரநாதன், 22, கவலை தெரிவித்தார்.
இருப்பினும், இந்த நிகழ்ச்சியின்போது இளையர்களுக்கான முன்முயற்சிகள், சமூகத் திட்டங்கள் பற்றிக் கேட்டறிந்தது இந்தியச் சமூகத்தின் மரபு தொடர்ந்து காக்கப்படும் என்ற நம்பிக்கையைத் தமக்கு அளித்துள்ளதாக அவர் கூறினார்.
சிங்கப்பூர் தமிழ் இளையர் மாநாட்டுத் தொடர் வரும் மாதங்களில் மனநலம், தமிழ்க் கலைகள் சார்ந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிகளுடன் தொடர்ந்து இடம்பெறும். அவற்றின்மூலம் திரட்டப்படும் கருத்துகள் தொகுக்கப்பட்டு இந்திய அமைப்புகளுடன் பகிரப்படும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இது இளையர் மேம்பாட்டை ஆதரிக்கவும், சிங்கப்பூர் இந்தியச் சமூகத்தின் நிலைத்தன்மையை வலுப்படுத்தவும் நீண்டகால உத்திகளை வகுக்க உதவும்.

