மாணவர்களின் படைப்பாற்றலுக்கு ‘வானமே எல்லை’

மாணவர்களின் படைப்பாற்றலுக்கு ‘வானமே எல்லை’

2 mins read
3bd97b2a-c37d-4fc9-86f3-cbc1a33d8ff9
வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் சு. மனோகரனுக்கு ‘சிறப்பு விருந்தினருக்கான’ நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. - படம்: பிரீத்தி அசோகன் 
Google News Preferred Icon
குறும்படப் போட்டியில் யூனோயா தொடக்கக் கல்லூரி மாணவர்கள் முதல் பரிசைத் தட்டிச் சென்றனர்.
குறும்படப் போட்டியில் யூனோயா தொடக்கக் கல்லூரி மாணவர்கள் முதல் பரிசைத் தட்டிச் சென்றனர். - படம்: பிரீத்தி அசோகன்

தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்கான ‘அக்னி 2024’ நிகழ்ச்சியில் மாணவர்கள் தங்கள் படைப்பாற்றலையும் புதுமையையும் வெளிப்படுத்தி வியக்க வைத்தனர்.

‘வானமே எல்லை’ எனும் கருப்பொருளுடன் ஏப்ரல் 13ஆம் தேதியன்று ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரியில் ‘அக்னி 2024’ நடைபெற்றது.

கடந்த 1999ஆம் ஆண்டு ஆண்டர்சன் தொடக்கக் கல்லூரியால் தொடங்கப்பட்ட ‘அக்னி’ நிகழ்ச்சி, ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு நேரடியாக அரங்கேறியது.

இவ்வாண்டு நிகழ்ச்சியில் வில்லுப்பாட்டு, குறும்படம், ஒட்டுவில்லை (ஸ்டிக்கர்) ஓவியம் தயாரித்தல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.

வில்லுப்பாட்டில் செயின்ட் ஆண்ட்ரூஸ் தொடக்கக் கல்லூரியும், குறும்படப் போட்டியில் யூனோயா தொடக்கக் கல்லூரியும், ஒட்டுவில்லை ஓவியப் போட்டியில் தெமாசெக் தொடக்கக் கல்லூரியும் வாகை சூடின.

ஒட்டுவில்லை ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவி ஹெ சன்கின்ருய், 17, ‘அக்னி 2024’ தமக்குத் தமிழ்ப் பண்பாட்டைக் கற்றுக்கொடுத்ததாகக் கூறினார்.

“எனக்குத் தமிழ் தெரியாது என்பதால், என் ஆசிரியர் இப்போட்டியில் கலந்துகொள்ளச் சொன்னபோது முதலில் சற்றுத் தயங்கினேன். ஆயினும், என் தமிழ்த் தோழி, எனக்குத் தமிழ்ப் பண்பாடு பற்றியும், விழாக்கள் பற்றியும் கற்றுக்கொடுத்தார். இப்போட்டியில் வெற்றியைக் குறிவைத்து நான் பங்கேற்கவில்லை. தமிழ்ப் பண்பாட்டை அறிந்துகொள்ளக் கிடைத்த அனுபவமாகவே நினைத்தேன்,” என்றார் சன்கின்ருய்.

நிகழ்ச்சியில் நடனம், பாட்டு, நாடகம் எனத் தங்களின் பல்வேறு திறமைகளைக் காட்டி, பார்வையாளர்களைக் கவர்ந்தனர் ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்கள்.

அதில், அக்கல்லூரியின் படைப்புகளில் ‘கதாகாலட்சேபம்’ எனும் குறும்படத்தின் இயக்குநரும் நடிகருமான பெரியகருப்பன் சீனிவாசன், 17, அதன்மூலம் பல புதிய அனுபவங்கள் கிட்டியதாகக் குறிப்பிட்டார்.

“தொடக்கத்தில் ஒரு குறும்படத்தை எவ்வாறு எடுப்பது என்று தெரியவில்லை. ஆனாலும், சிறிது காலம் எடுத்து அதனைக் கற்றுக்கொண்டேன். இதற்காகப் பறை வாசிக்கவும் கற்றுக்கொண்டேன்,” என்றார் சீனிவாசன்.

வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் சு. மனோகரன் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

“பல்வேறு தொடக்கக் கல்லூரி மாணவர்களால் அரங்கம் நிரம்பி வழிந்தது. மாணவர்களின் படைப்பாற்றல், கலைத்திறன், புதுமை ஆகியவற்றை மேடையில் கண்டோம். தங்கள் கல்வி நிலையங்களிலும் சமூகத்திலும் தமிழை வளர்க்க அர்ப்பணிப்புடன் செயல்படும் அவர்களுக்கு என் வாழ்த்துகள்,” என்றார் திரு மனோகரன்.

‘அக்னி 2024’ நிகழ்ச்சியை நடத்த இவ்வாண்டு மாணவர்களுக்கு உதவ வந்திருந்தனர், ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் ஜெயக்குமார் அரவிந்த், 21, மற்றும் ராகவேந்திரா பிரசாத், 22,

“கொவிட்-19 பரவல் காரணமாக கடந்த 2022ஆம் ஆண்டு அக்னி நிகழ்ச்சி இணையம் வழியாக நடத்தப்பட்ட நிலையில், இவ்வாண்டு நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக இருந்தது,” என்றார் அரவிந்த்.

தற்போது சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் பயின்றுவரும் பிரசாத், “நாட்டுப்புறக் கலைகளை வைத்து இந்நிகழ்ச்சி நடந்தது ஒரு புதிய முயற்சியாக இருந்தது. அது மிகவும் சுவாரசியமாக இருந்தது,” என்றார்.

செய்தி: பிரீத்தி அசோகன்

குறிப்புச் சொற்கள்
தமிழ்தமிழ்மொழி விழாபள்ளி