நட்பின் தரம் அறியும் திறம்

2 mins read
805dc768-24e2-4e0c-ac07-a09825ba0f4c
இணையப் பாதுகாப்புத் துறையில் பட்டப்படிப்பு பயிலும் ரவீந்திரன் மதிமயூரன், 23. - படம்: அரவிந்தன் சித்தார்த்

ரவீந்திரன் மதிமயூரன்

உலகில் ஓரறிவில் தொடங்கி ஐந்தறிவு வரையிலான பெரும்பாலான உயிர்கள் தனித்து வாழ்வதில்லை.

ஒவ்வொன்றும் அதன் இனத்தோடு சேர்ந்து வாழ விரும்புவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.

இவ்வாறு பிறக்கின்ற ஒவ்வோர் உயிரும் சேர்க்கையை விரும்ப, நட்பு நாடும் வழக்கம் அனைவரிடத்திலும் உண்டு என்பதே உண்மை.

நட்பு பல காரணங்களால் உண்டாகிறது. சிலருக்கு இனிய சொல்லால் ஏற்படும்; பொருளாலும் நட்பு உண்டாகிறது. வேறு சிலருக்கு அறிவாலும் ஒழுக்கத்தாலும் நட்பு உண்டாகிறது.

அன்புடையவர், உடனிருந்து இன்பதுன்பங்களைப் பகிர்ந்துகொள்பவர், துன்பம் வந்தபோது துணை நின்றவர், தீயனவற்றில் ஈடுபடாதவர் ஆகிய நற்குண, நற்செய்கை உடையவரையே நாடி நாம் எவ்வேளையிலும் நட்பு கொள்ள வேண்டும்.

நட்பு மூன்று வகைப்படும். அவையாவன: தலைநட்பு, இடைநட்பு, கடைநட்பு.

அவற்றுள் தலைநட்பானது சிறந்த நட்பாம். அது மனத்தாலும் செயலாலும், ஒன்றுபட்டு ஒருவரோடு ஒருவர் பழகுதல் ஆகும். அது நாளுக்கு நாள் வளர்பிறைபோல வளரவல்லது. நூல்களைப் படிக்குந்தோறும் சுவையும் நயமும் தோன்றுவது போன்று தலைநட்பும் பழகுந்தோறும் இன்பமும் அன்பும் பெருக்கவல்லது.

இடைநட்பு என்பது, உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று நடிப்பதாகும். வெளியில் நட்பும் உள்ளுக்குள் பகையும் கொண்டு விளங்குவது.

கடைநட்பு என்பது தன் நண்பனுக்கு பலவகையான துன்பங்களைத் தரக்கூடிய ஓர் உறவாகும். 

ஒருவரோடு நட்புகொள்வதற்குமுன் இம்மூன்றில் எந்த வகையினர் என்பதை ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

நட்பு கொண்டுவிட்டால், பின்பு அந்த நண்பரை விட்டுப் பிரிதல் கூடாது; அவனிடம் குற்றம் கண்டபோதும் அதனைத்திருத்த முயல வேண்டும். இங்ஙனம் கவனித்துக் குற்றத்தைப் பொறுத்தல் வேண்டும். எத்தனை முறை நம் நண்பன் குற்றம் செய்யினும், அத்தனை முறையும் அவற்றைப் பொறுத்தலே உத்தம குணமாம்.

நாம் நட்பின் பெருமையை விளக்கும் சான்றோர் பலரின் வரலாற்றைப் படித்து நலம்பெறுவதைப் பழக்கப்படுத்திக் கொண்டு வளம்பெற வேண்டும்.

குறிப்புச் சொற்கள்