உயர்நிலைப்பள்ளி மாணவர்களின் தமிழ்மொழி ஆற்றலையும் ஆய்வு, படைப்பாக்கத் திறனையும் வெளிப்படுத்தும் போட்டி ஒன்று அண்மையில் அரங்கேறியது.
தொழில்நுட்பம் அதிவேகத்தில் வளர்ச்சியடைந்துவரும் வேளையில், ‘செயற்கை நுண்ணறிவும் தமிழ் மொழியும்’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நடைபெற்றது இவ்வாண்டின் ‘நற்றமிழ் உரைக்களம்’ போட்டியின் இறுதிச்சுற்று.
உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தின் உள்ளரங்கில் சனிக்கிழமை (ஏப்ரல் 11) நடைபெற்ற இப்போட்டியில் ராஃபிள்ஸ் பெண்கள் பள்ளி முதலிடத்தைத் தட்டிச் சென்றது.
மாணவர்களிடையே தமிழ் மொழி, இலக்கியம், கலாசாரம் ஆகியவற்றின் மீதான ஆர்வத்தை வளர்க்கும் நோக்கில் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் 2024ஆம் ஆண்டுமுதல் இப்போட்டியைத் தொடர்ந்து நடத்தி வருகிறது.
இவ்வாண்டு 30 உயர்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 90 மாணவர்கள் பங்கேற்றனர். இறுதிப்போட்டிக்கு முன்பாக, மாணவர்கள் ஜனவரி 30ஆம் தேதி தமிழ்மொழிப் பண்பாட்டுக் கழகம், தமிழ்ப் பேச்சாளர் மன்றத்தின் கூட்டுமுயற்சியில் நடைபெற்ற சிறப்புப் பயிலரங்கில் கலந்துகொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, மார்ச் 6ஆம் தேதி தகுதிச்சுற்று நடைபெற்று, அதிலிருந்து சிறந்த 5 பள்ளிகள் இறுதிச்சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டன.
தலைமை முதன்மை ஆசிரியர் சுப்ரமணியன் நடேசன், செயற்கை நுண்ணறிவு நிபுணரும் ‘குளோசப்’ குழும நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியுமான பாபு வெங்கடேஷ், சிங்கப்பூர் தமிழ்ப் பேச்சாளர் மன்றப் பொறுப்பாளர் தியாகராசன் நடராசன் ஆகியோர் நடுவர் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
வெறும் மேடைப் பேச்சாக மட்டுமில்லாமல், ஆய்வு, நடிப்பு, கதைசொல்லல் எனப் பல ஆக்கபூர்வமான முறைகளில் மாணவர்கள் படவில்லைகளுடன் உரையாற்றினர்.
தொடர்புடைய செய்திகள்
ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவு, மொழிபெயர்ப்புக் கருவிகள், ‘சாட்ஜிபிடி’ போன்ற தளங்கள் மூலம் தமிழ் மொழியை எவ்வாறு உலகெங்கும் கொண்டுசெல்லலாம் என்பதன் தொடர்பாக மாணவர்கள் பேசினர். அதே வேளையில், செயற்கை நுண்ணறிவுக்கு மனித உணர்வுகள் இல்லை என்பதையும் அது தரவுகளைத் தவறாகக் கொடுக்க வாய்ப்புள்ளது என்பதையும் சுட்டிக்காட்டி, அதனைப் பொறுப்புடன் கையாளுவதன் அவசியத்தையும் மாணவர்கள் ஆழமாக ஆராய்ந்தனர்.
“பேச்சு என்பது மனிதர்களுக்குக் கிடைத்த மாபெரும் கொடை. அதைச் சரியான நேரத்தில் உண்மையான தகவல்களுடன் தெளிவாகப் பயன்படுத்த வேண்டும்,” என்று நிகழ்ச்சியில் பேசிய உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தின் இயக்குநர் சாந்தி செல்லப்பன் வலியுறுத்தினார்.
‘நற்றமிழ் உரைக்களம்’ போட்டி பீட்டி சாலை வளாகத்தில் இடம்பெறுவது இதுவே கடைசி முறை என்றும், அடுத்த ஆண்டு புதிய விக்டோரியா லேன் வளாகத்தில் மேம்பட்ட முறையில் இடம்பெறும் என்றும் அவர் கூறினார்.
நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாகச் சிறப்புரையாற்றிய திரு பாபு வெங்கடேஷ், கணினித் தொழில்நுட்பத்தின் பரிணாம வளர்ச்சி பற்றி பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
“ஏஐ என்பது ஒரு கருவி மட்டுமே. அது மனித மூளைக்கு மாற்றாகாது. நாம் கொடுக்கும் தரவுகளைக் கொண்டே அது செயல்படுவதால் அதனைச் சரியாகக் கையாளப் பழக வேண்டும்,” என்றார் அவர்.
செயற்கை நுண்ணறிவு மனிதர்களின் வேலைகளைப் பறிக்காது. மாறாக, அத்தொழில்நுட்பத்தைத் திறம்படப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள் எதிர்கால வேலைவாய்ப்புகளில் முன்னிலை வகிப்பார்கள் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
போட்டியில் முதலிடம் வென்ற ராஃபிள்ஸ் பெண்கள் பள்ளிக் குழுவில் 15 வயது மாணவிகள் கண்ணன் வர்ஷிகா, நித்யஸ்ரீ சரவணன், பஞ்சாக்ஷரி பாலகிருஷ்ணன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
பெரிய கூட்டத்தின்முன் பேசுவதற்கான தன்னம்பிக்கையை அந்தப் போட்டி தங்களுக்குள் வளர்த்ததோடு, செயற்கை நுண்ணறிவுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பைப் புரிந்துகொள்ளவும் உதவியது என வர்ஷிகா தெரிவித்தார்.
போட்டிக்காகத் தாங்கள் மேற்கொண்ட தீவிர ஆராய்ச்சிகள், அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ‘ஓ’ நிலை வாய்மொழித் தேர்வுக்குப் பெரிதும் கைகொடுக்கும் என நித்யஸ்ரீ நம்பிக்கை தெரிவித்தார்.
பிற பள்ளிகள் பயன்படுத்திய புதிய உத்திகளைக் கண்டறிந்தது இனிவரும் போட்டிகளைச் சிறப்பாக எதிர்கொள்ள உதவியாக இருக்கும் என்று பஞ்சாக்ஷரி குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியின் நிறைவில், பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்களும் வெற்றிபெற்ற பள்ளிகளுக்குச் சிறப்புக் கோப்பைகளும் வெள்ளிப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

