முதியோரின் தனிமையைப் போக்கும் ‘அவர் வாய்சஸ் எஸ்ஜி’

முதியோரின் தனிமையைப் போக்கும் ‘அவர் வாய்சஸ் எஸ்ஜி’

3 mins read
4ce7adab-d48e-431d-8a57-5e3980ae8bf9
முதியோரின் தனிமையைப் போக்க ‘அவர் வாய்ஸஸ் எஸ்ஜி’ (Our Voices SG) திட்டத்தை முன்னின்று நடத்தும் 25 வயதான சமூக சேவகர் எல்ஷடாய் ஜீவநதி. - படம்: எல்ஷடாய் ஜீவநதி
multi-img1 of 2
Google News Preferred Icon

தமிழுக்கும் சமூகச் சேவைக்கும் பாலம் அமைத்து இதயங்களைப் பிணைத்து வருகிறார் 25 வயது எல்ஷடாய் ஜீவநதி.

ஃபெய் யுவே குடும்பச் சேவை நிலையம் மூத்த சமூகச் சேவகராகப் பணியாற்றும் ஜீவநதி, தேசிய மொழிபெயர்ப்புக் குழுத் தொண்டூழியராகவும் செயல்பட்டு வருகிறார்.

சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளில் இயங்கிவரும் துடிப்புடன் மூப்படைதலுக்கான நிலையங்களில் தாய்மொழி பேசும் தொண்டூழியர்களுக்கான பற்றாக்குறை பெரும் சவாலாகத் திகழ்வதை கவனித்த அவர், ஃபெய் யுவேவின்கீழ் ‘அவர் வாய்சஸ் எஸ்ஜி’ (Our Voices SG) அமைப்பை நிறுவினார்.

“இந்தப் பிரச்சினையைச் சில ஆண்டுகளாகக் கவனித்து வருகிறேன். எப்படியேனும் இதற்க்குத் தீர்வு கண்டுபிடிக்க வேண்டும் என்ற உறுதியுடன் இருந்தேன்,” என்று அவர் கூறினார்.

முதியோர் எதிர்கொள்ளும் இந்த மொழிப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், தனது திட்டத்தை விளக்கி மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ்வுக்கு ஜீவநதி மின்னஞ்சல் அனுப்பினார்.

அமைச்சரின் முழுமையான ஊக்கமும் ஆதரவும் கிடைக்கவே, தமது மொழித் தொண்டூழியத்தைப் பயன்படுத்தி, தேசிய மொழிபெயர்ப்புக் குழுவிற்கும் ‘ஃபே யுவே’ (Fei Yue) பராமரிப்பு மையங்களுக்கும் இடையிலான கூட்டுறவை ஜீவநதி உருவாக்கினார்.

இந்தத் திட்டத்தின்கீழ், தொண்டூழியர்கள் 31 பேர், முதியவர்களுடன் நட்புடன் பழகி, மையத்தின் ஊழியர்கள் வழங்கும் சுகாதாரம், கொள்கை தொடர்பான முக்கியத் தகவல்களை முதியவர்களிடம் அவரவர் தாய்மொழியில் மொழிபெயர்த்துக் கூறுகின்றனர். 

இத்திட்டத்தில் இணைந்துள்ள 36 வயதான தொண்டூழியர் ஷாலினி சக்திவேல் தமது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். “சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு மனிதவளமே முக்கியத் தூண் என்பதை உணர்ந்துள்ளதால், சமூகத்திற்கு என்னால் இயன்ற தொண்டைச் செய்ய விரும்புகிறேன். முன்பு தமிழாசிரியராக இருந்ததால், முதியோரின் தேவைகளைப் புரிந்துகொண்டு அவர்களுடன் எளிதாகத் தொடர்புகொள்ள முடிகிறது. தாய்நாட்டிற்கும் நமது இந்தியச் சமூகத்திற்கும் சேவையாற்றுவதை ஒரு சிறந்த வாய்ப்பாகக் கருதுகிறேன்,” என்று அவர் பெருமிதத்துடன் கூறினார்.

தொண்டூழியர் மற்றும் சமூகப் பங்காளித்துவக் குழுவின் தலைவரான கிறிஸ்டினா லியாங் இத்திட்டம் குறித்துக் கூறுகையில், மொழித் தடைகளால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள முதியவர்களுக்கு இத்திட்டம் மிகவும் அர்த்தமுள்ள ஒன்றாகும். தொண்டூழியர்கள் மூலம் முதியவர்களிடம் உரையாடும்போது, தாங்கள் மதிக்கப்படுவதாக அவர்கள் உணர்வார்கள். இது, பரந்த சமூகத்துடன் அவர்கள் மீண்டும் இணைவதற்கான தன்னம்பிக்கையை வழங்கும்,” என்று குறிப்பிட்டார்.

முதியவர்கள் தங்களுக்குரிய மரியாதையோடும் மகிழ்ச்சியோடும் இருக்க வேண்டும் என்பதும் மொழி அவர்களுக்கு ஒரு தடையாக மாறிவிடக் கூடாது என்பதும் இந்தத் திட்டத்தின் அன்பான நோக்கம் என்றார் ஜீவநதி.

தாய்மொழியில் உரையாடுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ஜீவநதி, நெல்சன் மண்டேலாவின் புகழ்பெற்ற கருத்தை நினைவுகூர்ந்தார். “ஒருவருக்குப் புரியும் மொழியில் நாம் பேசினால், அது அவரது மூளையைச் (அறிவைச்) சென்றடையும்; ஆனால், அவரது தாய்மொழியில் நாம் பேசினால், அது அவரது இதயத்தைச் சென்றடையும்,” என்று மொழியின் ஆழமான வலிமையை அவர் குறிப்பிட்டார்.

ஒரு சமூகப் பிரச்சினையைக் கண்டுத் தயங்கி நிற்காமல், அரசாங்க அமைப்புகளின் உதவியோடு களமிறங்கி மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்திய ஜீவநதியின் பயணம் ஒவ்வொரு சிங்கப்பூர் இளையருக்கும் சிறந்த முன்னுதாரணமாகும்.

“நம் அனைவரிடமும் புதிய சிந்தனைகளும் ஊக்கமும் நிறைந்துள்ளன. எனவே, சமூக முன்னேற்றத்திற்காக முன்வந்து தொண்டூழியம் செய்யுங்கள்; எந்தவொரு சவாலையும் திறனாய்வுச் சிந்தனையோடு அணுகுங்கள் என்பதே இளைய சமுதாயத்தினர்க்கு நான் கூற விரும்பும் செய்தியாகும்,” என்றார் அவர்.

சமூக மாற்றத்திற்கான மாபெரும் சக்தி இளையர்களின் கைகளில்தான் உள்ளது என்பதை ஜீவநதியின் இத்தகைய முன்னெடுப்புகள் ஆணித்தரமாக நிரூபிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்