பண்பாட்டு அழுத்தமும் மனநலமும்: இந்தியர்களை மேலும் ஈடுபடுத்த முயற்சி

பண்பாட்டு அழுத்தமும் மனநலமும்: இந்தியர்களை மேலும் ஈடுபடுத்த முயற்சி

4 mins read
047184f0-779b-4ba9-b3a0-f4b32ff516c0
நவநீதா நாத் நிறுவிய ‘டுகேதர் ஃபார் குட்’ (Togather for Good), பல்வேறு அமைப்புகளுக்கான மனநல, நல்வாழ்வுத் திட்டங்களை நடத்துகிறது. - படம்: நவநீதா நாத்
multi-img1 of 2

ஒன்பது வயதிலிருந்தே தொண்டூழியத்தில் ஈடுபட்டு வந்த நவநீதா நாத், 32, தற்போது தொண்டூழிய அமைப்பு ஒன்றின் தலைவராகச் செயல்படுகிறார்.

விழிப்புணர்வும் கருணையும் மிக்க சமூகத்தை உருவாக்கும் நோக்கில், ‘டுகெதர் ஃபார் குட்’ (Togather for Good) என்ற இவரது அமைப்பு, பள்ளிகளுடனும் பணியிடங்களுடனும் இணைந்து திட்டங்களைச் செயல்படுத்த முற்படுகிறது.

நவநீதா ஏற்பாடு செய்துள்ள நலன்சார்ந்த பல்வேறு திட்டங்களில் மக்கள் கழகத்தைச் சேர்ந்த சமூகத் தலைவர்களுக்கான சுகாதார மேம்பாட்டுக் கழகத்தின் சமூக ஆதரவுத் திட்டமும் ஒன்று.

சிரமப்படுவோரை அடையாளம் கண்டு, அவர்களது கோரிக்கைகளைப் பரிவுடன் செவிமடுத்து ஆலோசனை வழங்க இவரது திட்டம் கற்பித்தது.

‘டுகேதர் ஃபார் குட்’ தனது சமூக ஊடகத் தளங்களில் வெளியிடும் மனநலம் சார்ந்த பதிவுகளால் பயனர்கள் கற்றுக்கொள்வதுடன் வேலைப் பயிற்சிகள் (internships), தொண்டூழிய நிகழ்ச்சிகள், நிதியளிப்புத் திட்டங்கள் ஆகியவற்றைப் பெறுவதாகவும் நவநீதா குறிப்பிட்டார்.

அத்துடன், 2026ல் முதன்முறையாக ‘ஏஷியாஸ் ரைசிங் சர்க்கிள்’ (Asia’s Rising Circle) நிகழ்ச்சியை நவநீதா பங்குபெற்றார். ஐந்து நாள் நடைபெற்ற அந்நிகழ்ச்சியில் 42க்கும் அதிகமான இளைய தலைவர்கள் பங்குகொண்டனர். 

சிங்கப்பூர் அனைத்துலக அறநிறுவனம் (Singapore International Foundation) நடத்திவரும் ‘ஏஷியாஸ் ரைசிங் சர்க்கிள்’ (Asia’s Rising Circle) எனப்படும் திட்டம், ஆசிய வட்டாரத்தின் சமூக, பொருளியல் நிலையை உயர்த்தி சமூகச் சார்ந்த இளையத் தலைவர்களை ஒன்றிணைக்க அமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் எல்லைத் தாண்டிய ஆசிய வட்டார ஒத்துழைப்பு வலையமைப்பை உருவாக்குவதும், பங்கேற்கும் இளையத் தலைவர்களின் தலைமைத்திரன்களை மேம்படுத்துவதும் அதன் நோக்கம் ஆகும்.

இதில் பங்கேற்ற தமது அனுபவத்தைப் பற்றி விவரித்த நவநீதா, “சிங்கப்பூரில் நமக்குக் கிடைக்கும் ஆதரவு, வாய்ப்பு, நிலைத்தன்மை ஆகியவற்றைப் பற்றி நினைக்கும்போது நெகிழ்கிறேன். அதே நேரம், தலைமைத்துவமும்  மீள்திறனும் வெவ்வேறு சூழலுக்கு ஏற்ற விதங்களில் வெளிப்படும் என்பதை சகப் பங்கேற்பாளர்களின் அனுபவக் கதைகள் எடுத்துரைக்கின்றன,” என்று அவர் கூறினார்.

கடந்த ஆண்டிற்கான மனநலக் கழக தேசிய இளையர் மனநல ஆய்வறிக்கையின்படி, பதற்றம் போன்ற கடுமையான பிரச்சினைகளை இளையரில் மூவரில் ஒருவர் எதிர்கொள்வதைச் சுட்டிய நவநீதா, இந்திய இளையர்களின் தனிப்பட்ட சவால்களைப் பற்றித் தாம் அறிந்தவரை விளக்கினார்.

தனித்தன்மையான சவால்கள்

இந்திய இளையர்களின் சவால்கள், மற்ற இளையர்களைக் காட்டிலும் அவ்வளவாக மாறுபட்டதல்ல என்றாலும் கடுமையான, எதிர்பார்ப்புகள் நிரம்பிய கலாசாரச் சூழல் நம் சமூகத்தில் இருப்பதை நவநீதா சுட்டினார்.

வெவ்வேறு அடையாளங்களைச் சுமந்து ஒவ்வொரு மனிதரும் தனித்தன்மைமிக்க வாழ்க்கையை வாழ்கிறார்கள். இருந்தபோதும், சாதித்தே ஆகவேண்டும் என்ற அழுத்தத்தை இந்தியர் என்ற பண்பாட்டு அடையாளத்திலிருந்து இளையர்கள் வெகுவாக உணர்வதை நவநீதா குறிப்பிட்டார்.

“நமது இனத்தின் மீதான பிறரின் நல்லெண்ணத்தைக் கட்டிக்காக்கும் பொறுப்பு நம்மீது விழுகிறது. இது ஒருவகையில் மன உளைச்சலைத் தரக்கூடும்,” என்று அவர் கூறினார்.

இந்திய இளையர்களும் பரந்த இந்தியச் சமூகத்தினரும் எதிர்கொள்ளும் பேசப்படாத அழுத்தங்களில் சிலவற்றைக் கலாசார, சமூக, இளையர் துறைத் துணையமைச்சர் தினேஷ் வாசு தாஸ் கடந்த ஆண்டு நடத்திய கருத்தரங்குகளின்போது பேசியதாக நவநீதா கூறினார்.

நிலைத்தன்மையை அதிகம் வலியுறுத்தும் இந்தியப் பண்பாட்டில் குறிப்பிட்ட சில தொழில்களை வெற்றிகரமான, மதிப்புமிக்கதாகக் கருதும் போக்கைக் கொண்டிருப்பதால் தோல்வியடையும் பயம், இந்தியச் சமூகத்தினரிடையே கூடுதலாக மேலோங்கி இருப்பதைக் காண்பதாக நவநீதா கூறினார்.

மேலும், இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்குப் புலம்பெயர்ந்த இந்தியப் பெற்றோரின் பிள்ளைகள் பலருக்குப் பண்பாட்டு அடையாளம் குறித்த போராட்டம் இருப்பதையும் அவர் சுட்டினார். “என்னைப் போன்றோர் சிலர், தாங்கள் போதிய அளவுக்கு இந்தியராக இல்லை, அல்லது சிங்கப்பூரில் இந்தியப் பண்பாட்டைப் போதுமான அளவுக்குக் கடைப்பிடிக்கவில்லை என்ற கவலையை உணர்கின்றனர்,” என்று அவர் கூறினார்.

“இது இந்தியச் சமூக இளையர்களை மட்டும் பாதிக்கவில்லை. ஆனால், இனப் பண்பாடு உண்டாக்கும் அழுத்தத்தால் ஏற்படும் பதற்றம் நம் சமூகத்தில் கூடுதலாக மேலோங்குகிறது,” என்று அவர் கூறினார்.

தகவல் பரிமாற்றம் வேண்டும்

பன்முகத்தன்மை மிகவும் அதிகமாக உள்ள இந்தியச் சமூகத்திற்குப் பல்லடுக்குப் புரிதல் தேவைப்படுவதாகக் கூறும் நவநீதா, மனநலம் சார்ந்த உதவிகளைக் கேட்பதை சாதாரண, ஆரோக்கியமான நடவடிக்கையாக இந்தியர்களின் மனப்போக்கும் சொற்களும் சித்திரிக்க வேண்டும் எனக் கூறினார்.

களத்தில் நேரடியாக இறங்கித் தம்மால் ஆன தீர்வைக் காண முயலும் நவநீதா, சிண்டா (SINDA) போன்ற அமைப்புகளுடன் இணைந்து குறைந்த வருமான இந்தியக் குடும்பங்களைச் சந்தித்துள்ளார்.

காலப்போக்கில் வலுவான நம்பிக்கையைக் கட்டமைக்கும் சமூக அமைப்புகள் தேவை என்றாலும், அமைப்புகளுக்கிடையே தகவல் பரிமாற்றம் மேம்பட வேண்டும் என அவர் விரும்புகிறார்.

முன்னதாகத் தரப்பட்ட ஆதரவின் விளைவு என்ன என்பதை அறிவதன் மூலம் அமைப்புகள் கூடுதல் கவனத்துடன் தங்கள் உதவிப் பணிகளை மேற்கொள்ளலாம். பாதிக்கப்பட்டவர்கள், தங்களுக்கு நடந்தவற்றை மீண்டும் மீண்டும் பகிர்வதால் ஏற்படும் வேதனையைத் தவிர்க்கலாம்,” என்கிறார் நவநீதா.

மனநலப் பாதிப்புகள் கடுமையாக இருப்போருக்கு மனநல மருத்துவ உதவியின் முக்கியத்துவம் தொடர்ந்து தேவைப்படுகிறது என்றாலும் அதை முன்னரே தடுப்பதைக் கருத்தில் கொள்ளும், சமூகம் சார்ந்த தீர்வுகளுக்கு நவநீதா தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

குறிப்புச் சொற்கள்