அரியானா கிராண்டே நிகழ்ச்சியில் இடையூறு விளைவித்தவருக்குச் சிறை

அரியானா கிராண்டே நிகழ்ச்சியில் இடையூறு விளைவித்தவருக்குச் சிறை

2 mins read
09d21d4d-508c-4d96-8c8b-7cf30f903131
நவம்பர் 13 மாலை 7 மணி வாக்கில் தடுப்பு ஒன்றின் மீது குதித்து, திரை நட்சத்திரங்கள் நடந்துகொண்டிருந்த பகுதிக்கு 26 வயது ஆஸ்திரேலியர் ஜான்சன் வென் (இடது படம், நடுவில்) சென்றிருந்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

‘யுனிவர்சல் ஸ்டூடியோஸ் சிங்கப்பூர்’ கேளிக்கைப் பூங்காவில் ஹாலிவுட் நடிகை அரியானா கிராண்டேயை நோக்கி விரைந் ஆடவருக்கு ஒன்பது நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

பட வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றின்போது இந்தச் சம்பவம் நேர்ந்தது. பொதுமக்களுக்குத் தொல்லை விளைவித்ததன் பேரில் குற்றம் சாட்டப்பட்ட 26 வயது ஆஸ்திரேலியர் ஜான்சன் வென், தமது குற்றத்தை ஒப்புக்கொண்டார். 

பட வெளியீட்டுக்காகவும் விடுமுறைக்காகவும் வென், 90 நாள் தவணைக்கால அனுமதியின் பேரில் நவம்பர் 11ஆம் தேதி சிங்கப்பூருக்கு வந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. 

‘விக்கட்: போர் குட்’ திரைப்படத்தின் தொடக்கவிழாவில் கிராண்டேவை நோக்கி விரைந்தோடிய ஆடவர், சம்பவ இடத்தில் சலசலப்பை ஏற்படுத்தினார்.

நவம்பர் 13 மாலை 7 மணி வாக்கில் தடுப்பு ஒன்றின் மீது குதித்து, திரை நட்சத்திரங்கள் நடந்துகொண்டிருந்த பகுதிக்கு வென் சென்றிருந்தார்.

பின்னர், கிராண்டேயை நெருங்கிய அந்த ஆடவர், துள்ளிக்கொண்டே  தன் கையை அவர் தோளில் போட்டுக்கொண்டார்.

உடனே கிராண்டேயின் சக நடிகர் சிந்தியா எரிவோ இடைமறித்து அந்த இளையரைத் தடுத்தார்.  பாதுகாவல் அதிகாரிகள் அவரைத் தடுத்து வெளியேற்றினர். 

இளையர் மீண்டும் அந்தத் தடுப்பைக் கடக்க முயன்றபோது அதிகாரிகள் அவரை மடக்கிப் பிடித்தனர். 

மறுநாள் நள்ளிரவு வாக்கில் கைது செய்யப்பட்ட அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

2024ல் நடந்த பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள், இவ்வாண்டு ஜூனில் சிட்னி நகரில் நடைபெற்ற ‘பாப்’ பாடகர் கேட்டி பெர்ரியின் இசை நிகழ்ச்சி ஆகியவற்றிலும் இந்த இளையர் இடையூறு செய்திருக்கிறார்.

பொதுத்தொல்லை விளைவித்த குற்றத்திற்காக மூன்று மாதங்கள் வரையிலான சிறைத்தண்டனையுடன் 2,000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்பட்டிருக்கலாம்.

குறிப்புச் சொற்கள்