வாழ்விலும் திடலிலும் இணைபிரியா இரட்டையர்

வாழ்விலும் திடலிலும் இணைபிரியா இரட்டையர்

3 mins read
5f900073-2cae-4a8e-8ecf-5d0567ff3c8e
இரட்டைச் சகோதரர்கள் தரேஷ் கண்ணன் (இடது), தருண் கண்ணன். - படம்: கண்ணன் மாரிமுத்து
Google News Preferred Icon

காற்பந்துத் திடலின் இரு முனைகளிலும் ஒரே சமயத்தில் எவ்வாறு ஓர் ஆட்டக்காரரால் தோன்ற முடிகிறது என்று பார்வையாளர்கள் குழம்பிப் போவதுண்டு.

இதற்குக் காரணம், காற்பந்து வீரர்களான இரட்டையர் தருண் கண்ணன், தரேஷ் கண்ணன்.

தற்போது 18 வயதாகும் இவ்விருவரும், இந்தோனீசியாவின் சுரபாயா நகரில் நடைபெற்ற ஆசியான் காற்பந்துக் கூட்டமைப்பின் 19 வயதிற்குஉட்பட்ட விளையாட்டாளர்களுக்கான போட்டியில் சிங்கப்பூர் சார்பாக விளையாடினர். 

அப்போட்டி ஜூலை 31ஆம் தேதியோடு முடிவடைந்தது. தாய்லாந்து, மலேசியா, புருணை அணிகளை சிங்கப்பூர் அணி தகுதிச் சுற்றில் சந்தித்தது.

வேறுபடுத்திப் பார்க்க முடியாத அளவுக்கு தருண், தரேஷ் இருவரது தோற்றமும் இருந்தாலும் காற்பந்து விளையாடுவதில் இவர்களுக்கெனத் தனி பாணி உண்டு.

தருண் 1.84 மீட்டர் உயரத்தில் தற்காப்பு வீரராகவும் அவரைவிட ஒரே ஒரு சென்டிமீட்டர் உயரம் குறைந்த தரேஷ், தாக்குதல் வீரராகவும் விளையாடுகின்றனர்.

“எங்கள் தந்தை வார இறுதிகளில் காற்பந்தாட்டக் குழு ஒன்றிற்காக விளையாடினார். அதனால், அவருடன் சென்று விளையாட்டுகளைப் பார்ப்பது, விளையாடுவது எனக் காற்பந்துமீது எங்களுக்கு ஆர்வம் அதிகரித்தது,” என்றார்.

தங்களது திறமையை 11 வயது ஆகும்வரை தாங்கள் உணரவில்லை என்று கூறினார் தரேஷ்.

“ஜூரோங் வெஸ்ட் தொடக்கப்பள்ளியைப் பிரதிநிதித்து நாங்கள் விளையாடிய அவ்வாண்டில், ஆக அதிக கோல்களை நான் போட்டதோடு மேற்குப் பிரிவு வெற்றியாளர் கிண்ணத்தையும் நாங்கள் வென்றோம்,” என்றார் தரேஷ்.

ஆர்சனல் குழு ரசிகர்களான இந்த இரட்டையர், தங்களது வாழ்க்கைப் பயணத்திலும் காற்பந்துப் பயணத்திலும் இணைபிரியாது உள்ளனர்.

தொடக்கப்பள்ளிக் கல்வி முடிந்தவுடன் அவர்களது திறனைப் பாராட்டி குவீன்ஸ்வே உயர்நிலைப் பள்ளியின் காற்பந்துப் பயிற்றுநர், இருவரையும் பள்ளி நேரடிச் சேர்க்கைமுறை வழி தேர்ந்தெடுத்தார்.

உயர்நிலைப்பள்ளிப் படிப்புக்காக உபகாரச் சம்பளமும் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

தற்போது இருவரும் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் மேற்கு வளாகத்தில் வேலை - கல்வித் திட்டத்தின்கீழ் வாகனத் துறை நைட்டெக் பட்டயக்கல்வியைப் பயின்று வருகின்றனர்.

இருவரும் தஞ்சோங் பகார் காற்பந்தாட்டக் குழுவின் 21 வயதுக்கும் உட்பட்டோர் அணிக்காகவும் விளையாடி வருகின்றனர். 

வளரும் பருவத்தில் இருவரும் ஒரே அணியில் விளையாடினாலும் சிங்கப்பூரின் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் முதலில் தான் மட்டும் தேர்வானது தனக்கு சற்று வருத்தம் தந்ததாகக் கூறினார் தருண்.

“ஆசியான் போட்டிக்காகத் தயாராக, ஜூன் மாதத் தொடக்கத்தில் நடத்தப்பட்ட முதல் பயிற்சி முகாமுக்கு நான் தேர்வானேன். ஆனால், தரேஷ் அம்மாத இறுதியில் பேங்காக்கில் நடைபெற்ற இரண்டாம் பயிற்சி முகாமுக்குத்தான் தேர்வானான்,” என்றார் அவர்.

“தேசிய சேவை காரணமாக அணியிலிருந்த ஒரு தாக்குதல் ஆட்டக்காரர் வெளியேறினார். பயிற்றுநர்கள் வேறு ‘ஸ்ட்ரைக்கர்’ வேண்டும் எனத் தேடியபோது, தருண் என் பெயரைப் பரிந்துரைத்தான். அத்துடன், என் தந்தை அனுப்பிய எனது விளையாட்டுக் காணொளிகளும் பயிற்றுநர்களுக்குப் பிடித்திருந்ததால் நானும் அணிக்குத் தேர்வானேன்,” என்றார் தரேஷ்.

இருவரும் சிங்கப்பூர் தேசிய அணிக்கும் மலேசியா போட்டியில் விளையாடும் ஜோகூர் தாருல் தக்சிம் அணிக்கும் விளையாட வேண்டுமென்ற கனவைக் கொண்டுள்ளனர்.

ஆனால், தற்போது அவர்களது கவனம் உயர் நைட்டெக் சான்றிதழ் பெற்று, பலதுறைத் தொழிற்கல்லூரியில் பட்டயப்படிப்பை மேற்கொள்வதில் உள்ளது.

“எங்களது வளர்ச்சியில் நிச்சயம் எங்கள் தந்தைக்கும் பயிற்றுநர்களுக்கும் மிகப் பெரிய பங்குண்டு. குறிப்பாக எங்கள் தந்தை, எங்களை விளையாட அழைத்துச் செல்வது, நாங்கள் செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டி அவற்றைத் திருத்த உதவுவது என எங்களுக்குப் பல வகையிலும் வழிகாட்டியுள்ளார்,” என்று தருண் கூறினார்.

இவர்களின் தந்தை திரு கண்ணன் மாரிமுத்து, 49, “சிறுவயதிலிருந்தே இவர்களுக்குக் கல்வியைவிட காற்பந்துமீது ஆர்வமிருந்ததை அறிந்தேன். அதில் அவர்களுக்குத் திறமையும் இருக்கிறது என்று தெரிந்தவுடன் அவர்களை என்னால் ஆதரிக்காமல் இருக்க முடியவில்லை,” என்று கூறினார்.

“கல்வியின் முக்கியத்துவத்தையும் அவர்கள் அறிந்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களது வளர்ச்சியைக் கண்டு பெருமை கொள்கிறேன்,” என்றார் திரு கண்ணன்.

குறிப்புச் சொற்கள்
காற்பந்துஇளையர்தேசிய சேவைஆர்சனல்