செயற்கை நுண்ணறிவுவழி ஆழமாக, அகலமாகக் கற்போம்

செயற்கை நுண்ணறிவுவழி ஆழமாக, அகலமாகக் கற்போம்

3 mins read
3fc3fd11-14bd-47cd-b749-d4fcc7d6a40b
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைச் சரியாகப் பயன்படுத்தினால் கற்றல் மேம்படும். - படம்: செயற்கை நுண்ணறிவு 
Google News Preferred Icon

ஒரு காலத்தில் மாணவர்கள் நூலகத்தில் பல மணி நேரம் இருந்து, புத்தகங்களைப் புரட்டி தங்களுக்குத் தேவையான தகவல்களைத் தேடினார்கள்.

இன்றோ, விசைப்பலகையைத் தட்டினாலே போதும். செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி பல வேலைகளை எளிதாக முடித்துவிடுகிறார்கள்.

மாணவர்கள் தங்கள் பாடப்பயிற்சி, கட்டுரைகள், ஆய்வுகள், வேலைத் தயாரிப்புகளுக்குச் செயற்கை நுண்ணறிவை (Artificial Intelligence) அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள்.

2025ல் நடத்தப்பட்ட சிங்கப்பூர் மாணவர் நலன் ஆய்வின்படி கிட்டத்தட்ட 93 விழுக்காட்டு மாணவர்கள் தங்கள் அன்றாடக் கல்விக்காகச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகிறார்கள்.

“செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி என்னால் என் வேலைகளை விரைவாக முடிக்க முடிகிறது. பொத்தானை அழுத்தினாலே விடைகள் எளிதாகக் கிடைக்கின்றன. அவை பெரும்பாலும் சரியான விடைகளை அளிக்கும் என்று நம்புகிறேன். மேலும், என்னால் நேரத்தை மிச்சப்படுத்த முடியும்,” என்றார் பீட்டி உயர்நிலைப் பள்ளி மாணவி ஆயிஷா சுரையா, 14.

இருந்தபோதும், மாணவர்கள் செயற்கை நுண்ணறிவை அதிகமாகச் சார்ந்திருக்கும்போது மாணவர்களின் புத்திக்கூர்மை மழுங்கடிக்கப்படும் என நினைப்பதாக ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக்கல்லூரி மாணவர் ரிச்சர்ட் கிறிஸ்டோ, 18, தெரிவித்தார்.

“மாணவர்கள் கேள்விக்கும் செயற்கை நுண்ணறிவிடம் பதிலைக் கேட்பதால், தாமாகச் சிந்தித்துப் பதில் கூறும் பழக்கம் அவர்களுக்குக் குறையும் என நினைக்கிறேன்,” என்று ரிச்சர்ட் கூறினார்.

முறையாகக் கையாண்டால் மேன்மையே

மாணவர்கள் செயற்கை நுண்ணறிவைத் துணையாகப் பயன்படுத்துவது அவசியம் என்றாலும், முழுமையாக அதற்கே அடிமையாகிப் போவது கல்வியின் உண்மையான நோக்கத்தை கேள்விக்குறியாக்குகிறது.

இவ்வாண்டு எஸ்பிஎஸ் சுவிஸ் வர்த்தகப் பள்ளி ஜனவரியில் வெளியிட்ட ஆய்வின்படி, செயற்கை நுண்ணறிவுக் கருவிகள், அடிப்படைத் திறன் பெறுதலை மேம்படுத்தினாலும், புதுமையான அல்லது சிக்கலான சூழ்நிலைகளில் அத்திறன்களைப் பயன்படுத்த இயலாமல் போகலாம்.

மாணவர்கள் செயற்கை நுண்ணறிவைச் சரியாகப் பயன்படுத்தினால் அவர்கள் பல நன்மைகளை அடைய முடியும் என்றார் செயற்கை நுண்ணறிவுப் பயிற்றுநரான 32 வயது நித்திஷ் செந்தூர்.

“செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த மாணவர்களுக்கு உந்துசொல் பொறியியல் (prompt engineering) போன்ற சில திறன்கள் இருக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு எந்த வகை பதில் சொல்ல வேண்டும், எந்தத் திசையில் யோசிக்க வேண்டும் என்பதை வழிகாட்டும் செயல்தான் உந்துசொல் பொறியியல்,” என்று திரு நித்திஷ் கூறினார்.

மாணவர்கள் செயற்கை நுண்ணறிவிடம் கேள்வி கேட்கும்போது, கேள்வி தெளிவாக இல்லாவிட்டால் பதிலும் குழப்பமாகவோ முழுமை இல்லாமலோ இருக்கும் என்றும் அவர் கூறினார்.

அதோடு, செயற்கை நுண்ணறிவைத் தகவல் தேடுவதற்கு பயன்படுத்துவதோடு நிறுத்தாமல் முழுப் பாடத்தையும் செய்யப் பயன்படுத்தினால் தீர ஆராயும் திறனுக்குப் பயிற்சி இல்லாமல் போகும்.

செயற்கை நுண்ணறிவின் தமிழ்த்திறம் 

கணிதம், ஆங்கிலம் போன்ற பாடங்களுக்குச் செயற்கை நுண்ணறிவு குறிப்பிடத்தக்க அளவுக்கு உதவியாக உள்ளது.

கணக்கு வினாக்களை அத்தகைய கருவிகள் புரியும்படி விளக்கி கற்றுத்தரும்.

ஆனால், தமிழ் போன்ற சில மொழிகளில் இந்தச் சேவை போதிய திறனுடன் செய்படுவதில்லை.

தமிழ் இலக்கணம் குறித்த புரிதல் செயற்கை நுண்ணறிவுக்கு இன்னும் வரவில்லை என்று திரு நித்திஷ் குறிப்பிட்டார்.

“உதாரணத்துக்கு, தமிழ் வாக்கியத்தில் வலி மிகும் இடங்கள் எங்கு என்று கேட்டால் அது ‘உடம்பில் எங்கு வலிக்கிறது’ என்பதற்கான விடையைக் கூறும். அதற்குக் காரணம், தமிழ்மொழிக்கு மற்ற மொழிகள் அளவுக்குப் போதிய அளவு தரவுகள் இல்லை,” என்றார் நித்தி‌ஷ்.

தமிழுக்கென ‘சேட்ஜிபிடி’யில் கூடுதலான கட்டமைப்புகளை உருவாக்கவேண்டும் என்றார் அவர்.

சிங்கப்பூர் அறிவார்ந்த தேசம் என்பதால் எதிர்காலத்திலும் செயற்கை நுண்ணறிவு இன்னும் பரவலாகும். அதனால், மாணவர்கள் செயற்கை நுண்ணறிவைச் சரியான முறையில் பயன்படுத்தக் கற்பது அவசியம் என்றும் திரு நித்தி‌ஷ் கூறினார்.

தொழில்நுட்பம் மனிதரின் குணத்தை மாற்றாது. அந்தந்த குணத்தின் விளைவுகளை அதிகமாக்கும். நல்லவற்றை விரிவுசெய்வது நம் கடமை.

குறிப்புச் சொற்கள்
செயற்கை நுண்ணறிவுகல்விமாணவர்கள்தகவல் தொழில்நுட்பம்