சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத்தைச் சிறப்பித்த மாநாடு

சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய படைப்புகளின் அவசியமும் சிறப்பும் எடுத்துரைப்பு

சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத்தைச் சிறப்பித்த மாநாடு

3 mins read
மொத்தம் 35 ஆய்வுக் கட்டுரைகள் படைக்கப்பட்டன
5019fbb4-e9de-46ae-bbea-e67753b86cc5
உள்ளூர்க் கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோவுக்கு நியமன நாடாளுமன்ற உறுப்பினர் ஹரேஷ் சிங்கராஜு, நினைவுப்பரிசு ஒன்றை வழங்குகிறார். சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்ற ஆலோசகர் அ. வீரமணி (ஆக இடது),  சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றத் தலைவர் லாவண்யா பிரேம்ஆனந்த் (ஆக வலது) ஏற்பாட்டுக்குழுத் தலைவரும் கெளரவப் பொருளாளருமான பிரணவன் சிவலிங்கம் ஆகியோர் உடன் நிற்கின்றனர். - படம்: சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றம்
multi-img1 of 2

1965ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரை சிங்கப்பூரில் வெளியிடப்பட்ட தமிழ் நூல்களைப் படித்து, அவற்றைப் பாராட்டவும், பிறரோடு பகிர ஊக்குவிக்கவும் அண்மையில் நடந்த சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றத்தின் ஆய்வரங்க மாநாடு முனைந்தது.

தமிழ்மொழி விழா 2026ல் அங்கம் வகிக்கும் இந்த மாநாடு, இளையர்களிடையே, தமிழ் மொழி மீதான ஈடுபாட்டை அதிகரிக்கவும், தமிழ் இலக்கியங்களின் செழுமையை வாசிப்பின் மூலம் எடுத்து இயம்பவும் நடத்தப்பட்டது.

கருத்தரங்கிற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளில் 17 கட்டுரைகள் இளையர்களால் படைக்கப்பட்டன.
கருத்தரங்கிற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளில் 17 கட்டுரைகள் இளையர்களால் படைக்கப்பட்டன. - படம்: சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றம்

சனிக்கிழமை (மார்ச் 28) உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடந்த இம்மாநாடு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கிட்டத்தட்ட 70 பேரை ஈர்த்தது. 

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற நியமன உறுப்பினர் ஹரேஷ் சிங்கராஜு, இத்தகைய இலக்கியங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

பழங்கவிஞர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் ‘ஆசிய ஜோதி’ கவிநூலையும், பழம்பெரும் உள்ளூர் எழுத்தாளர் இராம கண்ணபிரானின் படைப்புகளையும் விரும்பிப் படித்ததாக டாக்டர் ஹரேஷ் கூறினார்.

“தொழில்நுட்பம் வாழ்க்கையில் இன்றியமையாது இருக்கும் இந்தக் காலத்தில், புத்தகங்களைப் படிக்கும் பழக்கம் மக்களிடையே, குறிப்பாக இளையர்களிடையே அதிகரிக்கவேண்டும்,” என்று அவர் கூறினார். 

சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியப் படைப்புகள் இந்நாட்டின் அடையாளத்தை நினைவுபடுத்துவதாக அவர் கூறினார்.

“நம் முன்னோர்களின் பார்வையிலிருந்து நமது வரலாற்றைப் பற்றி தெரிந்துகொள்ளலாம். நமது வேர்களும், மரபும், கலாசாரமும் இந்த இலக்கியப் படைப்புகளில் அடங்கியுள்ளன,” என்றார் டாக்டர் ஹரேஷ்.

ஆய்வரங்க மாநாட்டில் தமது இலக்கிய பயணத்தைப் பற்றி சிறப்புரை ஆற்றினார், பாவலர் பிச்சினிக்காடு இளங்கோ.
ஆய்வரங்க மாநாட்டில் தமது இலக்கிய பயணத்தைப் பற்றி சிறப்புரை ஆற்றினார், பாவலர் பிச்சினிக்காடு இளங்கோ. - படம்: வெங்கடேசன் வித்யா லட்சுமி

புகழ்பெற்ற கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ அவர்கள் தமது கவிதைப் பயணத்தைப் பற்றி பகிர்ந்ததோடு, இளையர்கள் தமிழைப் பயன்படுத்தவும், ஈடுபடவும் ஊக்குவித்தார்.

(இடமிருந்து) சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றத் தலைவர் லாவண்யா பிரேமநாத், ஏற்பாட்டுக்குழுத் தலைவரும் கெளரவப் பொருளாளருமான பிரணவன் சிவலிங்கம், நியமன நாடாளுமன்ற உறுப்பினர் ஹரேஷ் சிங்கராஜு.
(இடமிருந்து) சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றத் தலைவர் லாவண்யா பிரேமநாத், ஏற்பாட்டுக்குழுத் தலைவரும் கெளரவப் பொருளாளருமான பிரணவன் சிவலிங்கம், நியமன நாடாளுமன்ற உறுப்பினர் ஹரேஷ் சிங்கராஜு. - படம்: சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றம்
(இடமிருந்து) ஏற்பாட்டுக்குழுத் தலைவரும் கெளரவப் பொருளாளருமான பிரணவன் சிவலிங்கம், நியமன நாடாளுமன்ற உறுப்பினர் ஹரேஷ் சிங்கராஜு.
(இடமிருந்து) ஏற்பாட்டுக்குழுத் தலைவரும் கெளரவப் பொருளாளருமான பிரணவன் சிவலிங்கம், நியமன நாடாளுமன்ற உறுப்பினர் ஹரேஷ் சிங்கராஜு. - படம்: சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றம்

வெளிச்சம் தரும் கட்டுரைகள்

இந்த மாநாட்டின்வழி, புத்தகங்களைப் படிப்பதோடு அவற்றைப் பிறர்க்குப் புரியும் வகையில் எடுத்துக்கூறவும் இளையர்கள் கற்க வேண்டும் என விரும்புவதாக ஏற்பாட்டு குழுத் தலைவர் பிரணவன் சிவலிங்கம் தெரிவித்தார்.

ஏற்பாட்டுக் குழுவினர் கொடுத்த பட்டியலிலிருந்து ஒரு நூலைத் தேர்ந்தெடுத்து, அதைக் கூர்ந்து ஆராய்ந்தனர் பங்கேற்பாளர்கள். நூல் குறித்த அவர்களுடைய கருத்துகளை ஒரு கட்டுரையாக முன்கூட்டியே சமர்ப்பித்தனர். 

பொதுப் பிரிவில் 18 கட்டுரைகளும், இளையர் பிரிவில் 17 கட்டுரைகளுமாக மொத்தம் 35 கட்டுரைகள் படைக்கப்பட்டன. அவற்றை மூன்று நடுவர்கள் ஆய்வுசெய்தபின், கட்டுரையாளர்களுக்குப் பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டன. 

மாநாட்டில் மொத்தம் ஒன்பது அமர்வுகள் இடம்பெற்றன.
மாநாட்டில் மொத்தம் ஒன்பது அமர்வுகள் இடம்பெற்றன. - படம்: சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றம்

மாநாட்டில் மொத்தம் ஒன்பது அமர்வுகள் இடம்பெற்றன. ஒவ்வோர் அமர்விலும், கட்டுரை சமர்ப்பித்தவர்களில் நால்வர், தாங்கள் தேர்ந்தெடுத்த நூலைப் பற்றிய ஒரு சிற்றுரை ஆற்றினர். 

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைக் கல்வி பயிலும் மாணவி, எழிலி கருணாகரன் இலக்கியா, 19, முனைவர் அ. வீரமணி எழுதிய ‘சமுதாயத்தில் தமிழ் இளையர்களின் நிலை - ஒரு தொகுப்பு’ நூலைப் பற்றி மாநாட்டில் படைத்தார். 

“1990இல் வாழ்ந்த இளையர்களின் வாழ்வையும், இக்கால இளையர்களின் வாழ்வையும் ஒப்பிட்டுப் பார்க்க இந்த நூலைத் தேர்ந்தெடுத்தேன். இதன் மூலம் அக்கால இளையர்கள் எதிர்நோக்கிய சவால்களை அறிந்தேன்,” என்றார் செல்வி இலக்கியா.

“சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் மிகவும் அர்த்தமுடையதாக நான் நினைக்கிறேன். சமூகத்தினரின் பலதரப்பட்ட அனுபவங்களையும், எண்ணங்களையும் புரிந்துகொள்வதோடு, மற்ற புத்தகங்களையும் படிக்க ஊக்குவிக்கின்றது,” என்றும் அவர் கூறினார். 

இதற்கு முன்னதாக இலக்கியத்தை ஒட்டிய கலந்துரையாடல்களில் பங்கேற்றுள்ளபோதும், முதன்முறையாக சொந்தக் கட்டுரையை இம்மாநாட்டில் படைத்தது புதிய அனுபவமாக இருந்ததாக 26 வயது சேவாள் சேக்கப்பன் கூறினார். 

“முன்பெல்லாம், சிங்கப்பூர் இலக்கிய படைப்புகளை இந்தியாவில் பதிக்கப்பட்ட இலக்கிய படைப்புகளின் ஓர் அங்கமாகக் கருதினேன். ஆனால், இந்த அனுபவத்தின் மூலம், சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் தனித்துவம் வாய்ந்தது என்று நான் உணர்ந்தேன். நாடோடிகளின் அனுபவங்கள், நகர வாழ்க்கை, பல்லினச் சமுதாயம் என பலவற்றின் அடிப்படையில், நம் இலக்கியம் தனித்து நிற்கிறது,” என்று கருத்துரைத்தார் சேவாள். 

வெளிநாட்டு ஊழியர்களின் உழைப்பையும் அனுபவங்களையும் நயம்பட காட்சிப்படுத்திய கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோவின் ‘வியர்வையூர்’ எனும் கவிதை நூல் தம் மனத்தை மிகவும் கவர்ந்ததால், அதைப் பற்றிப் படைத்ததாக 15 வயது மாணவி சனா கான் கூறினார். 

வியர்வையூர் என்ற நூலைப் பற்றி படைத்தார் செல்வி சனா கான், 15.
வியர்வையூர் என்ற நூலைப் பற்றி படைத்தார் செல்வி சனா கான், 15. - படம்: வெங்கடேசன் வித்யா லட்சுமி

“தமிழ்மொழி தேர்வுகளைத் தாண்டி, அது நம்முடைய ஆன்மாவின் குரலாகும். அந்தக் குரலை இலக்கிய படைப்புகளின் மூலம் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வது நமது கடமையாகும்,” என்று யூயிங் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவி சனா கூறினார்.

குறிப்புச் சொற்கள்