கல்வியில் சிறப்பாகத் தேர்ந்தவர்களுக்கு விருதுகள்

3 mins read
கல்வியில் சிறக்கும் மலாய்/முஸ்லிம் மாணவர்களை 1982 முதல் ஆண்டுதோறும் அங்கீகரித்து வருகின்றன அனுகெரா மெண்டாக்கி விருதுகள். இவ்வாண்டு அக்டோபர் 11ஆம் தேதி நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் 529 மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அவர்களில் 119 பேர் முதல் தர ‘ஹானர்ஸ்’ பெற்றதற்காக அனுகெரா செமர்லாங் மெண்டாக்கி விருதைப் பெற்றனர். 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிட இந்த எண்ணிக்கை அதிகம்.
bff4a17d-ae16-447c-8912-7f66f61e282a
சுகாதார அமைச்சர் ஓங் யி காங்கிடமிருந்து அனுகெரா மெண்டாக்கி விருதும் கல்விச் சாதனை விருதும் பெறும் ‌ஷியாசா நுராயின் பிண்டி ஃபர்ஹாத். - படம்: யயசான் மெண்டாக்கி

வளரும் பருவத்தில் வீட்டுச் சூழல் படிப்பதற்கு ஏதுவாக இல்லாதபோது, ஒற்றைத் தாயாராக நான்கு பிள்ளைகளை வளர்த்த தம் தாயாரின் மனத்திடத்தையும் விடாமுயற்சியையும் தாம் கைக்கொள்ள வேண்டும் என உறுதிபூண்டார் ஷியாசா நுராயின் ஃபர்ஹாத். அதன்படி நடந்து தாயாரின் வழியில் நடந்து கல்வியிலும் சாதனை புரிந்துள்ளார் ஷியாசா, 20.

தாயார் திருவாட்டி ஹப்சா அப்துல்லா உடன் ‌ஷியாசா.
தாயார் திருவாட்டி ஹப்சா அப்துல்லா உடன் ‌ஷியாசா. - படம்: யயசான் மெண்டாக்கி

‌கல்வித்துறையில் பணியாற்றும் ஷியாசாவின் தாயார் திருவாட்டி ஹப்சா அப்துல்லா ஓட்டத்தில் ஆர்வமுள்ளவர். இன்றுவரையிலும் ஓட்டப்பந்தயங்களில் பங்கேற்கும் அவர் ஷியாசாவையும் சகோதரர்களையும் அடிக்கடி தம்முடன் ஓடுவதற்கு அழைத்துச் செல்வார்.

அதனாலேயே வெளிப்புற விளையாட்டுகளில் ‌ஷியாசாவின் ஆர்வம் வளர்ந்தது. ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியின் வெளிப்புற, துணிகர நடவடிக்கை (adventure) தொடர்பான பட்டயப் படிப்பில் 3.94 GPA புள்ளிகள் பெற்று தகுதிசார் (மெரிட்) உன்னத தேர்ச்சி பெற்ற அவர், ‘அவுட்வர்ட் பவுண்ட் சிங்கப்பூர்’ தங்கப் பதக்க விருதையும் சில கல்வித்திட்டப் பாடங்களில் பரிசுகளையும் வென்றுள்ளார்.

கல்வியில் சிறந்து விளங்கியதற்காக, அனுகெரா மெண்டாக்கி விருதும் பட்டயப் படிப்பில் முதல் நிலையில் தேர்ச்சி பெற்றதற்காக கல்விச் சாதனை விருதையும் சுகாதார அமைச்சர் ஓங் யி காங்கிடமிருந்து பெற்றார் ‌ஷியாசா.

அவரது தாயார் திருவாட்டி ஹப்சா 1987ல் அனுகெரா மெண்டாக்கி (PSLE) விருது பெற்றவர்.

முன்னுதாரண மாணவியாகத் திகழும் ‌ஷியாசா, சமூக, தேசியப் பாதுகாப்பு முயற்சிகளில் பங்காற்றுவதைத் தன் நெடுங்கால இலட்சியமாகக் கொண்டுள்ளார். அவர் தற்போது சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் பொதுப் பாதுகாப்புத் துறையில் பட்டப்படிப்பை மேற்கொண்டுவருகிறார்.

மின்னணுவியலில் கைதேர்ந்தவர்

அனுகெரா செமெர்லாங் மெண்டாக்கி விருது வென்றவர்களில் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் மின்சார, மின்னணுவியல் பட்டப்படிப்பில் உச்சத் தேர்ச்சி (Highest Distinction) பெற்ற 25 வயது அர்‌ஷோஃப் அகமதும் ஒருவர்.

அனுகெரா செமர்லாங் மெண்டாக்கி விருதை சுகாதார அமைச்சர் ஓங் யி காங் அ‌ஷ்ரோஃப் அகமதுக்கு வழங்குகிறார்.
அனுகெரா செமர்லாங் மெண்டாக்கி விருதை சுகாதார அமைச்சர் ஓங் யி காங் அ‌ஷ்ரோஃப் அகமதுக்கு வழங்குகிறார். - படம்: யயசான் மெண்டாக்கி

நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியில் வான்வெளி மின்னணுவியல் (aerospace electronics) பட்டயப் படிப்பில் தகுதிசார் (மெரிட்) தேர்ச்சி பெற்ற அவர், அத்துறை சார்ந்த பட்டப்படிப்பு உள்ளூர் பல்கலைக்கழகங்களில் வழங்கப்படாததால் மின்சார, மின்னணுவியல் துறையில் படித்தார்.

தந்தையும் பொறியாளர் என்பதால், சிறுவயதிலிருந்தே அ‌ஷ்ரோஃப் மின்சாரம் தொடர்பான பல பிரச்சினைகளுக்கும் தாமாகச் சோதித்துத் தீர்வுகண்டுள்ளார்.

பல்கலைக்கழக இறுதியாண்டுத் திட்டமாக, வழக்கமான கியர்களுக்குப் (mechanical gears) பதிலாகக் காந்தசக்தியால் இயங்கும் கியர்களைப் (magnetic gears) பற்றி ஆராய்ச்சி செய்தார். கணினியில் அவற்றை வடிவமைத்து, மாதிரிப்படுத்தி, அவற்றின் ஆற்றலை மதிப்பிட்டார்.

பகுதி மின்கடத்தித் துறையில் பணியாற்றும் அர்‌ஷோஃப், இத்துறை எப்போதும் தேவையுள்ள நிலையான துறை என உறுதியாகக் கருதுகிறார்.

வீட்டில் தமிழ் படித்த ஒரே உறுப்பினர்

வீட்டில் தமிழைத் தாய்மொழியாகப் படித்த ஒரே ஒருவர், முகமது இக்பால் சமீர் லால் அப்துல் காலித், 21. அவரது தந்தை சீனமும் தாயார், சகோதரர்கள் மலாய் மொழியும் படித்தனர். அதனால் தாய்மொழிப் பாடத்தில் மிகவும் சிரமப்பட்ட இக்பால், ‘ஓ’ நிலைத் தேர்வுகளுக்கு முன்புவரை தேர்ச்சி பெறச் சிரமப்பட்டார்.

மலாய்/முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் இணைப் பேராசியரியர் ஃபை‌‌‌ஷால் இப்ராஹிமுடன் இக்பால் (இடமிருந்து மூன்றாவது), குடும்பத்தினர்.
மலாய்/முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் இணைப் பேராசியரியர் ஃபை‌‌‌ஷால் இப்ராஹிமுடன் இக்பால் (இடமிருந்து மூன்றாவது), குடும்பத்தினர். - படம்: யயசான் மென்டாக்கி

விடாமுயற்சியுடனும் பெற்றோர், ஆசிரியர்கள், துணைப்பாட வகுப்புகளின் உதவியுடனும் செயின்ட் ஜோசஃப் கல்வி நிலையத்தில் ‘ஐபி’ தேர்வுகளில் தமிழில் தேர்ச்சிபெற்றார். அதே விடாமுயற்சி தேசிய சேவையிலும் பல்கலைக்கழகத்திலும் சிறந்து விளங்க அவருக்கு ஊன்றுகோலாக உள்ளது.

சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையில் அடிப்படை மீட்புப் போர்ப்படை (Basic Rescue) பயிற்றுவிப்பாளராக, புதிய வீரர்களுக்குத் தீயணைப்பு அல்லது மருத்துவம் தொடர்பான பயிற்சி வழங்கினார்.

அதன்வழி, அவர் வெவ்வேறு பின்புலங்களைச் சார்ந்தவர்களிடம் பழகி, அவர்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டதால் உளவியலிலும் ஆர்வம் பிறந்தது.

கணினி அறிவியலிலும் ஆர்வம் கொண்ட இக்பால், செயின்ட் ஜோசஃப் கல்வி நிலையத்தில் கணிதப் பாட ஆசிரியர்களுக்காக முப்பரிமாண வடிவங்களை வடிவமைத்து உதவினார். இது கற்பித்தலுக்கு உதவியது. பள்ளியின் வரவேற்பு விழாவுக்கான இணையத்தளத்தையும் அவர் உருவாக்கினார்.

தற்போது பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் படித்துவரும் அவர், தன் உளவியல் நாட்டத்தையும் அதனுடன் இணைக்க விரும்புகிறார். “மனிதரைப் போலவே சிந்திக்கும் செயற்கை நுண்ணறிவை உருவாக்க விரும்புகிறேன். அதன்மூலம், எதனால் மனிதர்கள் வெவ்வேறு மாதிரி சிந்திக்கிறார்கள் என்ற புரிதல் வளரும்,” என்றார் இக்பால்.

கல்வியில் சிறந்து விளங்கியதற்காக மெண்டாக்கி திறன் உபகாரச் சம்பளத்தை (கல்வி) பெற்றுள்ளார் இக்பால். இவ்விருது, அவரது பல்கலைக்கழகப் படிப்புக்கான செலவை முழுதாக ஈடுகட்டும். அவர், மெண்டாக்கியில் வேலைப்பயிற்சி மேற்கொள்வதுடன், படிப்பை முடித்தபின் குறிப்பிட்ட காலம் அங்கு பணியாற்றவும் வேண்டும்.

“உபகாரச் சம்பளம் கிடைத்தது எனக்கு ஆச்சரியமளித்தது. என்னைவிட என் பெற்றோர் அதிக மகிழ்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர். மெண்டாக்கியின் வெவ்வேறு பிரிவுகளில் அனுபவம் பெற்று சமூகத்துக்குப் பங்காற்ற நான் ஆவலுடன் இருக்கிறேன்,” என்றார் இக்பால்.

குறிப்புச் சொற்கள்