மனத்தின் குரலாக ஒலிக்கும் ஓவியம்

மனத்தின் குரலாக ஒலிக்கும் ஓவியம்

3 mins read
aa508579-b1a4-46c1-9d8e-9fd4e6896a8a
மாணவி கிரண்யாவும் அவரது ஓவியமும். - படம்: சிவாணி சக்திவேல்
Google News Preferred Icon

மாணவர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தத்தையும் அமைதியான போராட்டங்களையும் தூரிகை வழியே வெளிப்படுத்தும் கலைப் படைப்பு, வண்ணங்களின் கலவையாக மட்டும் தெரிவதில்லை, மனத்தின் குரலாகவே ஒலிக்கிறது.

இளையர்கள் தீட்டியுள்ள அத்தகைய படைப்புகள் சில, சிங்கப்பூர் தேசியக் கலைக்கூடத்தில் ‘ஓவியர்களும் அவர்களின் அனுபவங்களும்’ (‘Artist and XPerience’) என்னும் கருப்பொருளைக் கொண்ட ஓவியக் கண்காட்சியில் இடம்பெற்றன.

படைப்பாற்றல் வழி மாணவர்கள் தங்களது தனித்துவத்தைக் கண்டறியும் பயணத்தை மகிழ்ச்சியுடன் மேற்கொள்ள  இத்திட்டம் ஊக்கம் தர முற்படுவதாக  ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

சிங்கப்பூர் இளையர் விழாவின் 60வது ஆண்டையொட்டி ஜூலை 17ல் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சரும் கல்வி இரண்டாம் அமைச்சருமான டேவிட் நியோ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவர்களின் படைப்புகளைப் பார்வையிட்டார்.

தொடக்கக் கல்லூரி, உயர்நிலைப்பள்ளி ஆகியவற்றில் பயிலும் மாணவர்களின் படைப்புகள் இடம்பெற்ற இந்த நிகழ்ச்சியில், புக்கிட் வியூ உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 14 வயது மாணவி கிரண்யா இஷானி சரவணனின் ஓவியம் பலரின் கவனத்தை ஈர்த்தது.

நெருக்கடிகளை எடுத்துரைக்கும் ஓவியம்

முன்பின் அறியாத இளையர்கள் சிலருடன் தாம் ஒன்றிணைந்து உருவாக்கிய ‘ஐ வி‌ஷ் இட் வேர் எ ட்ரீம்’ (I Wish it were a Dream) எனும் ஓவியம் குறித்துப் பகிர்ந்துகொண்ட கிரண்யா, சிங்கப்பூர் மாணவர்களின் உணர்வுகளை அந்த ஓவியம் எடுத்துரைப்பதாகக் கூறினார்.

அன்றாட வாழ்வில் கல்விச் சுமை, குடும்பப் பிரச்சினைகள், நண்பர்களுடனான சிக்கல்கள் எனப் பல்வேறு நெருக்கடிகளைத் தாங்கிக்கொண்டு அவர்கள் தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்களைப் பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பை இந்தப் படைப்பு கேள்வி கேட்பதாகக் கிரண்யா தெரிவித்தார்.

“அக்கறை கொள்வாரின்றித் தத்தளிக்கும் இளம் மனங்களின் காயத்தை என் ஓவியத்தில் காணப்படும் கட்டட விரிசல்கள் குறிக்கின்றன,” என்று அவர் தமது ஓவியத்தைப் பற்றி விளக்கினார்.

மாணவி கிரண்யாவின் ஓவியம்.
மாணவி கிரண்யாவின் ஓவியம். - படம்: சிவாணி சக்திவேல்

புதிய நண்பர்களுடனும் ஆசிரியர்களுடனும் கைகோத்து உழைத்த இந்த அனுபவம், கலையைப் பற்றிய தமது நல்லெண்ணத்தை உயர்த்தியிருப்பதாகக் கிரண்யா கூறுகிறார்.

மேலும், கலைஞர்கள் பலர் ஒன்றிணையும்போது ஒரு படைப்பு எவ்வளவு ஆழமானதாக மாறுகிறது என்பதை உணர்ந்ததாகவும் அவர் சொன்னார்.

மனவுளைச்சலைக் குறைக்கும் கலை

கிரண்யாவையும் சேர்த்து தம் பிள்ளைகள் மூவருக்குமே இயல்பாகவே ஓவியக் கலையில் ஆர்வம் உண்டு என்று அவரது அம்மா கூறினார்.

தொடக்கத்தில் பள்ளிப் படிப்பைத் தாண்டி கூடுதல் கலைப் பயிற்சிகள் பிள்ளைகளுக்குத் தேவையில்லை என்று தாம் கருதியபோதிலும், பிள்ளைகளின் ஆர்வத்தைக் கண்டு மனம் மாறியதாக அவர் கூறினார்.

ஓவியங்களையும் அவற்றின் பின்னணியாக அமைந்த மாணவர்களின் படைப்புகளையும் பற்றிச் செவியுற்றதில் தாம் மகிழ்ந்ததாகத் திரு டேவிட் நியோ, ஜூலை 19ல் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் குறிப்பிட்டார்.

“மறதிநோயால் பாதிக்கப்பட்டவரைப் பராமரிக்கும் அனுபவங்களைப் பகிரும் ஒரு படைப்பு முதல் அன்றாட மணித்துளிகளின் அழகையும் பொருளையும் ஆராயும் மற்றொரு படைப்பு வரை, உலகை அறியவும் பிறரோடு உறவாடவும் நம் இளம் ஓவியர்கள் கலையைப் பயன்படுத்துகின்றனர்,” என்றும் அமைச்சர் கூறினார்.

வாழ்க்கையின் சில தருணங்களில் எண்ணங்கள் ஈடேறாமல் போகும்போது, அதற்கேற்ற வகையில் தங்களைத் தகவமைத்துக் கொள்வதாக மாணவர் ஒருவர் தம்மிடம் குறிப்பிட்டதாகத் திரு நியோ கூறினார். “ஆனால், நாம் மாற்றத்தைத் தழுவி முன்னோக்கிச் சென்றால் வலிமையுடன் (பிரச்சினைகளிலிருந்து) வெளிவருவோம்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்