வங்கித் துறையில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு

2 mins read
3d5d61fc-abad-4cbd-824b-f14b18c8c032
செயற்கை நுண்ணறிவின் ஆற்றலை வங்கித் துறையில் அதிகமான இளையர்கள் உணர்வதாக அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது. - ஃப்ரீபிக்

புதிய அலையென உருவெடுத்துவரும் செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) ஆற்றலை, வங்கித் துறையில் அதிகமான இளையர்கள் உணர்வதாக அண்மைய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

சிங்கப்பூரின் ‘ஜெனரேஷன் ஸி’ இளையர்கள் (18-23 வயது) தொழிற்துறைகளில் செயற்கை நுண்ணறிவின் சாத்தியங்களை ஆழமாகப் புரிந்துள்ளதாகவும் அதைப் பயன்படுத்த விரும்புவதாகவும் அண்மையில் விசா பன்னாட்டு நிறுவனம் நடத்திய ஆய்வு (Visa Consumer Payment Attitudes Study) கண்டறிந்துள்ளது.

அந்த ஆய்வின்படி, சிங்கப்பூரிலுள்ள ‘ஜெனரேஷன் ஸி’ பயனாளர்களில் 83 விழுக்காட்டினர் வங்கித் துறையில் செயற்கை நுண்ணறிவின் நன்மைகளைப் பற்றி அறிந்துள்ளனர் என்றும் இது பொதுமக்களைவிட கிட்டத்தட்ட 10% அதிகம் என்றும் தெரியவந்துள்ளது.

இளையர்கள் கருத்து

“ஜெனரேஷன் ஸி தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்துவதால், தங்களின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப ஒரு வங்கி மேம்பட்ட சேவைகளை வழங்கவில்லை என்றால், அவர்கள் வேறு வங்கிக்கு மாறுவதற்கு அதிகமாக வாய்ப்பிருக்கிறது. ஒவ்வொரு பரிவர்த்தனையும் கூர்ந்து கவனிப்பதைக்‌ காட்டிலும் சேவையின் வேகத்தையே முக்கியமாகக் கருதுகிறார்கள்,” என்று பல்கலைக்கழகத்தில் வணிகவியல் படிப்பை மேற்கொண்டுவரும் ஆதிரா ஜோ‌ஷி, 23, கூறினார்.

மேலும், வழக்கமான வியாபார உத்திகள் பொதுவாக ஜெனரேஷன் ஸி பயனாளர்கள்கள்மீது பெரும் தாக்‌கத்தை ஏற்படுத்துவதில்லை என்றார் அவர். ஏனெனில் அவர்கள் டிக்டாக், இன்ஸ்டகிராம் போன்ற சமூக ஊடகங்களில் தகவல்களைப் பெரும்பாலும் பெறுகிறார்கள் என்று கூறினார் அவர்.

வங்கியியலில் தனிப்பயனாக்கத்தின் (customisation) முக்கியத்துவத்தை வலியுறுத்தினார் ஹரினி தியாகராஜன், 19.

“எங்களில் பலர் எங்களது நிதி நிர்வகிக்கும் பயணத்தை வெவ்வேறு காலகட்டங்களிலும் வெவ்வேறு ஆரம்ப வருமானங்களுடனும் தொடங்குகிறோம். என்னுடைய தேவைகளுக்‌கும் வருங்கால திட்டங்களுக்கும் பொருந்தக்கூடிய சேவையை நான் தேர்வு செய்ய வேண்டும். இதற்குச் செயற்கை நுண்ணறிவு பேரளவில் கைகொடுக்கும் என்று நான் நம்புகிறேன்.

“ஏற்கெனவே வேலைப்பளு அதிகமாக இருப்பதால், தக்‌க சமயத்தில் எனக்கு முக்கியத் தகவல்களைத் தெரிவிக்கும் தானியங்கித் தொழில்நுட்பத்தைக் கொண்ட சேவையை நான் விரும்புவேன்,” என்று அவர் கூறினார்.

பெரும்பாலான ‘ஜெனரேஷன் ஸி’ பயனாளர்கள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தயாராக இருந்தாலும், சிலருக்கு அதன்மேல் முழுமையாக நம்பிக்கை இன்னும் ஏற்படவில்லை.

“ஆரம்பகட்டங்களில் முதலீடுகளைப் பற்றிப் புரிந்துகொள்வதற்குச் செயற்கை நுண்ணறிவு உதவிசெய்யலாம் என்றாலும் பேரளவிலான பணப் பரிவர்த்தனைகள் செய்யும்போது நான் செயற்கை நுண்ணறிவை நம்பமாட்டேன். மேலும், அனைவரும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தினால், அதே முடிவை எடுக்க நேரலாம். இது ஆரோக்கியமான பங்குச் சந்தை உருவாவதற்குச் சாதகமாக இருக்காது,” என்று திரவியக்‌கணேஷ் அவந்திகா, 22, கூறினார்.

வங்கிகளுக்கும் பயனாளர்களுக்கும் இடையே உள்ள தொடர்பைப் பெரிதளவில் மாற்றியமைக்கும் திறனைச் செயற்கை நுண்ணறிவு கொண்டிருப்பதாக மின்னிலக்‌கப் பணப்பரிவர்த்தனைத் துறையில் பணிபுரியும் ரியா பாலசுப்பிரமணியம், 23, கூறினார்.

“செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம், வங்கித் துறையில் பல பலன்களைத் தந்து, ‘ஜெனரேஷன் ஸி’ வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்குச் சிறந்த வாய்ப்பு உள்ளது. பணப்பரிவர்த்தனை நிறுவனங்கள் தங்களின் சேவைகளுக்குச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் தற்போது கவனம் செலுத்தி வருகின்றனர். இதை எங்கள் நிறுவனத்திலும் செய்து வருகிறோம்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்