‘வரலாறு காணாத வன்செயல்களை இளையர்கள் எதிர்கொள்கின்றனர்’

‘வரலாறு காணாத வன்செயல்களை இளையர்கள் எதிர்கொள்கின்றனர்’

2 mins read
ஐக்கிய நாட்டு நிறுவனம் எச்சரிக்கை
725e6a54-f4cd-405f-8489-f6212cd081d1
2022ஆம் ஆண்டு இறுதியில் போர் நடக்கும் இடங்களில் வசித்தோரில் 450 மில்லியனுக்கு மேற்பட்டோர் குழந்தைகள்; ஏப்ரல் இறுதியில் இடம்பெயர்ந்த 120 மில்லியன் பேரில் 40 விழுக்காட்டினர் குழந்தைகள். - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

நியூயார்க்: போர், பருவநிலை மாற்றம், பட்டினி, இடம்பெயர்தல் ஆகியவற்றால் இளையர்கள் முன்னெப்போதும் இல்லாத அளவில் வன்முறைக்கும் பாலியல் கொடுமைக்கும் ஆளாவதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் (ஐநா) எச்சரித்துள்ளது.

“போருக்கோ பருவநிலை மாற்றத்துக்கோ குழந்தைகள் காரணமானவர்கள் அல்லர். ஆனால் அவர்கள் இதற்குக் கொடுக்கும் விலை மிக அதிகம்,” என்று குழந்தைகளுக்கு எதிரான வன்முறை விவகாரங்களுக்கான ஐநா தலைமைச் செயலாளரின் சிறப்புப் பிரதிநிதி டாக்டர் நஜட் மால்லா மஜித் கூறியுள்ளார்.

“பலதரப்பட்ட, தொடர்புடையை நெருக்கடிகளால் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை வரலாறு காணாத நிலையை எட்டியுள்ளது,” என்றார் அவர்.

மொரோக்கோவைச் சேர்ந்த குழந்தைநல மருத்துவரான அவர், அக்டோபர் 10ஆம் தேதி இது தொடர்பான அறிக்கையை ஐநா கூட்டத்தில் சமர்ப்பிக்கவிருக்கிறார்.

பிள்ளைகளுக்கு எதிரான கொடூரமான வன்முறை பரவலாகக் காணப்படுவதையும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இளையர்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் மேற்கொள்ளப்படுவதற்குத் தொழில்நுட்பம் துணைபுரிவதையும் அந்த அறிக்கை எடுத்துக்கூறும்.

“வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவது சாத்தியமானதே. அதனால் பொருளியலுக்கும் நன்மை விளையும்,” என்று ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில் டாக்டர் மஜித் கூறினார்.

நிலைமை மிகவும் மோசமாக இருப்பதை அவரது அறிக்கை குறிப்பிடுகிறது.

2022ஆம் ஆண்டின் இறுதியில் போர் நடந்த பகுதிகளில் வாழ்ந்த சிறுவர்களின் எண்ணிக்கை 450 மில்லியனுக்கும் அதிகம். ஏப்ரல் மாத இறுதி நிலவரப்படி, இடம்பெயர்ந்த 120 மில்லியன் பேரில் 40 விழுக்காட்டினர் குழந்தைகள். 333 மில்லியன் பிள்ளைகள் மோசமான வறுமையில் உழல்கின்றனர்.

மேலும், பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் அபாயத்தில் ஒரு பில்லியனுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருப்பதாகவும் டாக்டர் மஜித் குறிப்பிட்டுள்ளார்.

15 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட பிரிவினரின் மரணத்துக்கு நான்காவது ஆகப் பெரிய காரணம் அவர்கள் உயிரை மாய்த்துக்கொள்வதே என்றும் ஒவ்வோர் ஆண்டும் 10 முதல் 19 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் 46,000 பேர் உயிரை மாய்த்துக்கொள்வதாகவும் அறிக்கை கூறுகிறது.

குழந்தைத் திருமணம் எங்கும் பரவலாகக் காணப்படும் பெருங்கேடு என்று எச்சரித்த டாக்டர் மஜித் 640 மில்லியன் பேர் இதனால் பாதிக்கப்பட்டதாகக் கூறினார்.

குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தொடர் விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது என்று கூறிய அவர் பிள்ளைகளின் மனநலன் பாதிக்கப்படுவதோடு பின்னாளில் அவர்களின் கல்வியையும் உற்பத்தித் திறனையும் அது பாதிக்கும் என்றார்.

குறிப்புச் சொற்கள்
வன்முறைகுழந்தைகள்ஐநாஅறிக்கைகுழந்தைத் திருமணம்பருவநிலை