ஆஸ்திரேலிய ராணுவத் தளபதியாகப் பெண் ஒருவர் முதன்முறையாக நியமனம்

125 ஆண்டுகால ஆஸ்திரேலிய ராணுவ வரலாற்றில் புதிய மாற்றம்

ஆஸ்திரேலிய ராணுவத் தளபதியாகப் பெண் ஒருவர் முதன்முறையாக நியமனம்

2 mins read
a7008a40-ba3a-4785-a24a-d23bd1bf1b9c
லெஃப்டினன்ட் ஜெனரல் சூசன் காயில் இவ்வாண்டு (2026) ஜூலை மாதம் பதவியேற்பார். - படம்: ராய்ட்டர்ஸ்

சிட்னி: ஆஸ்திரேலிய ராணுவத்திற்கு முதன்முறையாகப் பெண் ஒருவர் தலைமையேற்கவிருக்கிறார்.

நாட்டின் தற்காப்புத் துறைத் தலைமைத்துவத்தில் மாற்றங்களைக் கொண்டுவரும் நோக்கத்தின் ஒரு பகுதியாக அவரின் நியமனம் அமைகிறது.

தற்போதைய கூட்டுப் படைகளின் தலைவர் லெஃப்டினன்ட் ஜெனரல் சூசன் காயில் ராணுவப் படைத் தளபதியாக இவ்வாண்டு (2026) ஜூலை மாதம் பொறுப்பேற்பார்.

ஆஸ்திரேலிய அரசாங்கம் திங்கட்கிழமை (ஏப்ரல் 13) வெளியிட்ட அறிக்கையில் அந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது. லெஃப்டினன்ட் ஜெனரல் சைமன் ஸ்டுவர்ட்டுக்குப் பதிலாக லெஃப்டினன்ட் ஜெனரல் சூசன் காயில் தலைமைப் பொறுப்பை ஏற்பார்.

ராணுவத்தில் அதிகமான பெண் அதிகாரிகளை நியமிக்க ஆஸ்திரேலியா முனையும் வேளையில் அண்மை அறிவிப்பு வந்துள்ளது. திட்டமிட்டு, பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்படுவதாகவும் பாகுபாடு காட்டப்படுவதாகவும் குற்றச்சாட்டுகளை ராணுவம் எதிர்நோக்கியுள்ள வேளையில் லெஃப்டினன்ட் ஜெனரல் சூசன் காயிலின் புதிய பொறுப்புப் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

“125 ஆண்டுகால ஆஸ்திரேலியாவின் வரலாற்றில் ராணுவத்திற்கு முதன்முறையாகப் பெண் ஒருவர் வரும் ஜூலை மாதத்திலிருந்து தலைமைப் பொறுப்பை ஏற்கவிருக்கிறார்,” என்று அந்நாட்டுப் பிரதமர் ஆன்டனி அல்பனீசி அறிக்கையொன்றில் தெரிவித்தார்.

“லெஃப்டினன்ட் ஜெனரல் சூசன் காயிலின் நியமனம், வரலாற்றில் ஆக முக்கியத்துவம் வாய்ந்த தருணம்” என்று வருணித்தார் ஆஸ்திரேலியத் தற்காப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்ல்ஸ்.

“லெஃப்டினன்ட் ஜெனரல் சூசன் என்னிடம் எதை நாம் நேரடியாகப் பார்க்கவில்லையோ அத்தகைய நிலையை நாம் எட்டமுடியாது என்று சொல்லியிருந்தார். அவரின் சாதனை, ஆஸ்திரேலியத் தற்காப்புப் படையில் சேவையாற்றும் மகளிர்க்கும் எதிர்காலத்தில் தற்காப்புப் படையில் சேர விரும்பும் பெண்களுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது,” என்றார் அவர்.

55 வயது லெஃப்டினன்ட் ஜெனரல் சூசன், 1987ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்தார். பல்வேறு மூத்த தளபத்தியப் பொறுப்புகளில் அவர் பணியாற்றியிருக்கிறார்.

தற்போது ஆஸ்திரேலியத் தற்காப்புப் படையினரில் பெண்களின் விகிதம் கிட்டத்தட்ட 21 விழுக்காடு. மூத்த தலைமைத்துவப் பொறுப்புகளில் இருப்போரில் பெண்களின் விகிதம் 18.5 விழுக்காடு.

ராணுவப் படையில் உள்ள பெண்களின் விகிதத்தை 2030க்குள் 25 விழுக்காட்டுக்கு உயர்த்துவது ஆஸ்திரேலியாவின் இலக்கு.

குறிப்புச் சொற்கள்