கொம்பாக்: பத்துமலையில் நடைபெற்ற தைப்பூசக் கொண்டாட்டத்தின்போது பொதுமக்களுக்கு இடையூறாக இருந்ததாகக் கூறப்பட்ட பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பணியிலிருந்து இடைக்காலத்துக்கு நீக்கப்பட்ட அந்தப் பெண், ‘இன்ஸ்பெக்டர் ஷீலா’ என்று அறியப்படுகிறார்.
ஷீலா ஷேரன் ஸ்டீவன் குமார் என்ற அந்தப் பெண் கைதுசெய்யப்பட்டு ஒரு நாளுக்குத் தடுத்து வைக்கப்பட்டதாக மலேசிய காவல்துறை தலைவர் முகமது காலிட் இஸ்மாயில் தெரிவித்தார்.
பத்துமலை ஆலயத்துக்கு அருகே அதிகாலை 4 மணியளவில் பெண்ணுக்கும் அங்கிருந்த சில வர்த்தகர்களுக்கும் இடையே வாக்குவாதம் மூண்டதை அடுத்து பெண் கைதானார்.
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த பெண் அதே நாளில் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இரண்டு காவல்துறை அதிகாரிகளால் பிடித்துவைக்கப்பட்டிருந்த பெண் கைதானது குறித்த அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் கூச்சலிடும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியது.
தைப்பூசத்தில் ஏற்பட்ட சிறு சிறு சலசலப்புகள் குறித்து புகார் வந்ததையும் குறிப்பிட்ட காவல்துறை தலைவர் முகமது காலிட், அனைத்தும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதைச் சுட்டினார்.

