ஆசிய வளர்ச்சி மேம்பட்டாலும் சவால்கள் தொடர்வதாக எச்சரிக்கை

ஆசிய வளர்ச்சி மேம்பட்டாலும் சவால்கள் தொடர்வதாக எச்சரிக்கை

2 mins read
e717637e-aeca-42ed-b6a7-66b1fa51e8d5
மத்திய கிழக்கில் நீடித்து வரும் பதற்றத்தால் விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டு, உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளபோதிலும், ஆசியாவின் பொருளியல் ஓரளவு மேம்பட்டுள்ளதாக பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவை மையமாகக் கொண்ட ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளது. - படம்: புளூம்பர்க்
Google News Preferred Icon

மணிலா: ஆசியாவின் ஒட்டுமொத்த பொருளியல் வளர்ச்சி 2026ஆம் ஆண்டில் 4.9 விழுக்காடாக இருக்கும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி முன்னுரைத்துள்ளது. மத்திய கிழக்கில் நீடித்து வரும் பதற்றத்தால் விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டு, உற்பத்திச் செலவுகள் அதிகரித்தாலும், ஆசியாவின் பொருளியல் ஓரளவு மேம்பட்டுள்ளதாக பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவை மையமாகக் கொண்ட இந்த வங்கி தெரிவித்துள்ளது.

பணவீக்கம் 4.3 விழுக்காடாகக் குறையும் என எதிர்பார்க்கப்படும் வேளையில், கச்சா எண்ணெய் விலை மற்றும் விநியோகச் சூழல் படிப்படியாக சீரடைந்து வருகிறது.

இருப்பினும், போர் தீவிரமடைதல், சீனாவின் சொத்துச் சந்தை வீழ்ச்சி மற்றும் எல் நினோ பருவநிலைப் பிரச்சினையால் உணவுப் பொருள்களின் விலை உயர்வது போன்ற ஆபத்துகள் நீடிப்பதாக ஆசிய வளர்ச்சி வங்கி எச்சரித்துள்ளது.

அதே நேரத்தில், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பப் புரட்சியால் பகுதி மின்கடத்தி, மின்னணு சாதனங்கள் மற்றும் இயந்திரங்களுக்கான உலகளாவிய தேவை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது, சிங்கப்பூர், தென்கொரியா, தைவான், ஜப்பான் போன்ற வளர்ந்த ஆசிய நாடுகளின் பொருளியல் வளர்ச்சியைத் தாங்கிப் பிடிக்க உதவுவதாக ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைமைப் பொருளியல் நிபுணர் ஆல்பர்ட் பார்க் குறிப்பிட்டுள்ளார்.

“மத்திய கிழக்கு மோதல் எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிகக் காலம் தொடர்கிறது. இதன் காரணமாக எரிசக்தி, விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள இடையூறு நீடித்து வருகிறது. எனவே, உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளன. இதனால் எதிர்பார்க்கப்பட்டதைவிட வட்டார நடவடிக்கைகள் மேலும் அதிகளவில் தளர்வடையும்,” என்று ஆசிய வளர்ச்சி வங்கி கூறியது.

நிதி நிலைத்தன்மையைப் பேண, எரிபொருள் மானியங்களைத் தவிர்த்துவிட்டு, தற்காலிக மற்றும் குறிப்பிட்ட இலக்கு நோக்கிய உதவி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உறுப்பு நாடுகளுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி அறிவுறுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
ஆசியாபொருளியல்வங்கிமுன்னுரைப்பு