போரினால் குரல்வளை நசுக்கப்பட்ட காஸா மக்களின் குரலாக ஒலிக்கும் புதிய வானொலி

போரினால் குரல்வளை நசுக்கப்பட்ட காஸா மக்களின் குரலாக ஒலிக்கும் புதிய வானொலி

2 mins read
2871d287-4937-4f37-91fe-375aa3820894
போரினால் பாதிக்கப்பட்ட காஸா மக்களின் குரலாய் ஒலிக்க வந்துள்ளது புதிய வானொலி நிலையம் - கோப்புப் படம்: ஏஎஃப்பி

காஸா: போரினால் பாதிக்கப்பட்ட காஸாவில் ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு புதிய வானொலி நிலையம் உருவாகியுள்ளது.

காஸாவின் மத்திய நகரத்தில் உள்ள சிறிய ஒலிப்பதிவுக்கூடத்தில் இருந்து காஸா வட்டாரம் முழுதும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது படைப்பாளர்களின் குரல்கள்.

“ஹியர் காசா” (Here Gaza) என்ற அந்த வானொலி நிலையத்தின் தொகுப்பாளரான திரு ஹசன், தொழில்நுட்பக் குழுவினருடன் இணைந்து ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 15) அன்று நிகழ்ச்சிகளை வழங்கினார்.

“இந்த வானொலி நிலையம் பல மாதங்களாக, சில வேளைகளில் தூக்கமின்றி உழைத்ததன் பலனால் அடைந்த கனவாகும்” என்று அனைத்துலக ஊடகத்திடம் கூறியுள்ளார் திரு ஹசன்.

போரினால் ஏற்பட்ட பாதிப்புகள் தங்களை முற்றிலுமாக சூழ்ந்துக்கொண்டிருந்த வேளையிலும், இந்த நிலையம் அமைக்க பெரும் முயற்சிகள் எடுக்கப்பட்டதாகக் கூறினார் அவர்.

‘‘நிலையத்தை செயல்பாட்டிற்கு கொண்டுவருவது குழுவிற்கு மிகுந்த சவாலாக இருந்தது. இது மீள்திறனின் கதையாகவும் அமைந்துவிட்டது,’’ என்று தெரிவித்துள்ளார் திரு ஹசன்.

கடந்த அக்டோபர் மாதம் முதல் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர்நிறுத்தம் ஏற்பட்ட போதிலும், காஸாவில் நிலவும் சமூகப் பிரச்சினைகள், மனிதாபிமான நிலைமைகள் குறித்து இந்த நிலையம் கவனம் செலுத்தும், என்று திரு ஹசன் கூறினார்.

இந்த வானொலி நிலையம் குறித்து கருத்துரைத்த தொழில்நுட்பக் குழுவின் ஷெரீன் கலீஃபா, “காஸா வட்டாரத்தில் உள்ள மக்களின் குரலாக இருப்பதும், குறிப்பாக போருக்குப் பிறகு அவர்களின் பிரச்சினைகள் மற்றும் துன்பங்களை வெளிப்படுத்துவதும் வானொலி நிலையத்தின் குறிக்கோளாகும்” என்று குறிப்பிட்டார்.

காஸாவின் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையில் பெரும்பாலோர், போரின் போது குறைந்தது ஒரு முறையாவது இடம்பெயர்ந்தனர். பலர் இன்னும் மிகக் குறைந்த அல்லது சுகாதாரம் இல்லாத கூடாரங்களில் வாழ்கின்றனர். 

இதற்கிடையே காஸாவின் இந்த புதிய வானொலி நிலையத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் நிதியளிக்கிறது. 

இந்த நிலையம் காஸாவிலிருந்து ஒரு நாளைக்கு இரண்டு மணிநேரம் நிகழ்ச்சிகளை வழங்க திட்டமிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்