வெற்றி மடானி திட்டம்: இந்தியர்களுக்கு திறன் பயிற்சியுடன் வேலை வாய்ப்பு

வெற்றி மடானி திட்டம்: இந்தியர்களுக்கு திறன் பயிற்சியுடன் வேலை வாய்ப்பு

2 mins read
bd830c38-14c0-4523-91e2-dbd8c4914b9c
மலேசிய மனிதவள அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன். - படம்: பெர்னாமா
Google News Preferred Icon

கோலாலம்பூர்: மனிதவள மேம்பாட்டுக் கழகத்தின் வெற்றி மடானி திட்டம், ஈராயிரம் பேருக்கு திறன் பயிற்சியுடன் வேலை வாய்ப்பையும் உறுதிசெய்யும்.

இதில் மலேசிய இந்தியச் சமூகத்திற்கு பயிற்சித் திட்டங்களை வழங்கி, அவர்களுக்குச் சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்தித் தருவது இத்திட்டத்தின் முக்கிய இலக்காகும் என்று மலேசிய மனிதவள அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

“இது நமது சமுதாயத்திற்கு ஒரு வாய்ப்பு. செயற்கை நுண்ணறிவுச் செயல்திறன் உட்பட பயிற்சிகள் இங்கு வழங்கப்படும். பத்து மில்லியன் ரிங்கிட் ஒதுக்கியிருக்கிறோம். இரண்டாயிரம் பேருக்காக,” என்றார் அவர்.

இத்திட்டத்தில் பல சமுதாயத் தலைவர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், தங்களது பகுதி மக்களை இத்திட்டம் சென்றடைவதையும் அவர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

இதனிடையே, இந்தப் பயிற்சியை முழுமையாக முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். அதே வேளையில், எளிதாக வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்கான வழிமுறைகளும் இருப்பதாக திரு ரமணன் விளக்கினார்.

சனிக்கிழமையன்று கோலாலம்பூர், பிரிக்ஃபீல்ட்சில் வெற்றி மடானி கண்காட்சியைத் தொடங்கி வைத்தப் பின்னர், செய்தியாளர்களிடம் அவர் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

வீட்டிலிருந்து பணிபுரிதல்

மற்றொரு நிலவரத்தில், வீட்டிலிருந்து பணிபுரிதல் அல்லது கலப்பு முறை போன்ற நெகிழ்வான பணி செயல்முறையை அமல்படுத்துவதைப் பரிசீலிக்கும்படி பிரதமர் கேட்டுக் கொண்டதை தனியார் நிறுவனங்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றன.

தங்கள் நிறுவனத்தின் செயல்பாடுகளுக்குப் பொருத்தமானதாக இருந்தால், இந்த அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும்படி அரசாங்கம் ஊக்குவிப்பதாக திரு ரமணன் தெரிவித்தார்.

“பல பெரிய நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் நடைமுறையை அமல்படுத்தியிருக்கின்றன. மேலும், பெரும்பாலான வங்கிகளும் வீட்டில் இருந்து வேலை செய்யும் நடைமுறையைப் பின்பற்றுகின்றன. எனவே, தனியார் நிறுவனங்களும் இந்த வழியைப் பின்பற்றும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்றார் அவர்.

முன்னதாக, ஏறக்குறைய 70 மில்லியன் ரிங்கிட்டாக இருந்த பெட்ரோல் உதவித் தொகையின் செலவு, தற்போது மாதத்திற்கு 400 மில்லியன் ரிங்கிட்டாக அதிகரித்துள்ளது.

எனவே, மக்களின் நலன்களின் பாதுகாப்பிற்கு இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அவர் கூறியதாக பெர்னாமா தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்
செயற்கை நுண்ணறிவுவேலைமானியம்